புதுதில்லி:
இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மென்பொருள் மூலம்இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் 300 பேர்வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக மோடி அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
ஆனால், நாடாளுமன்ற விவாதத்திற்கும் விசாரணைக்கும் பயந்து, மோடி அரசு கடந்த இரண்டு வாரமாகஓடி ஒளிந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல் வதாக இல்லை. நாடாளுமன்றமே முடங்கினாலும் பரவாயில்லை என்றுஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து வருகிறது.இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள் ளிட்டோர் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். அண்மையில், ‘தி இந்து’என். ராம், கேரளத்தைச் சேர்ந்த சசிகுமார் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்களும் இந்த வழக்கில் இணைந் தனர். இவர்கள் தொடர்ந்த வழக்கு வியாழனன்று (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கமும் (Editors guild of india) செவ்வாயன்று பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் விசாரணையை நாடியுள்ளது.“பத்திரிகை சுதந்திரம் என்பது அரசின் தலையீடு இல்லாதது. உண்மையை வெளிக் கொண்டுவரும் விதமான புலனாய்வு மிகவும் ரகசியமானது. இதற்கான பேட்டிகள், தரவுகள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன்மூலம் தான் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், அரசுகளின் செயல்படாதன்மை போன்றவற்றை வெளிக்கொண்டுவர முடியும். ஆனால், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் இவை அனைத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது” என்று பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்கூறியுள்ளது.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள் ளிட்டோரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது பத்திரிகை சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமையில் தலையிடுவதாகும். பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே இவ்வாறு ஒட்டுக் கேட்பது இந்திய அரசியல் சட்டப்படி சரியானதா? என விளக்கம் வேண்டும். மேலும் தனி மனித உரிமையை இது பாதிக்காதா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்” என்றுகூறியுள்ள இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், “அரசுக்கு இத்தகைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவின் மூலம் விசாரிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளது.