court

img

குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது.... கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணியை விரைந்து நடத்துக... உச்சநீதிமன்றம்...

புதுதில்லி:
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தை பிழிகிறது. அத்தகைய குழந்தைகளை கண்டறியும் பணியை சிறுவர் நல கமிட்டி விரைந்து செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த  ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

பின்னர் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறுகையில், கொரோனா தொற்று பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக தாய், தந்தைகளை இழந்த குழந்தைகளின் நிலை இதயத்தைப் பிழிகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தை அல்லது அவர்களில் ஒருவரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளை கண்டறியும் நடவடிக்கையை, சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்2015-இன் படி சிறுவர் நல கமிட்டி விரைந்து நடத்த வேண்டும். அவர்களுடைய நிலை என்ன, பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஒன்றிய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அறிவித்துள்ளன. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன. அந்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், தாய், தந்தை அல்லது அவர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளில் யாரும் விடுபடகூடாது என்பதில் அதிகாரிகளும் கவனமாகசெயல்பட வேண்டும். 

அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு மூலம் அதிகாரிகள் செய்யவேண்டும்.  அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளை சரியாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து குழந்தைகளும் இலவச மற்றும்கட்டாய தொடக்கக் கல்வி பெறுவதற்கு உரிமை உள்ளது. அதற்கு கட்டுப்பட்டு மாநில அரசுகளும் அவர்களின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.முன்னதாக ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறுகையில், ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள சிறார்களுக்கு ‘பி.எம். கேர்ஸ் பார் சில்ட்ரன்’ திட்டத்தின் கீழ் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநிலங்களில் 2,600 குழந்தைகள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 418 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியுள்ளார்’’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி தொடர்பான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு  நீதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.