ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்றபோது, கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு ஜாமின் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபரில், தலித் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதையொட்டி, கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரான சித்திக் கப்பான் மற்றும் சிலர் செய்தி சேகரிப்புக்காக ஹத்ராஸ் சென்றார். அப்போது, பல உண்மைகளையும் வெளிக்கொண்டும் வந்தார். இந்நிலையில், சித்திக் கப்பான் மற்றும் அவருடன் வந்திருந்த அதிகுர்ரஹ்மான், ஆலம், மசூத் ஆகியோர் ஹத்ராஸின் அமைதியை சீர்குலைத்ததாக கூறி, தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளிலும் (153A, 295A, 124A, 120B, உபா (UAPA) 17/18) உத்தரப்பிரதேச பாஜக அரசு வழக்கு பதிவு செய்தது.
இதை அடுத்து, அவர் சார்பாக ஜாமீன் கோரி பல முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அனைத்தும் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சித்திக் கப்பானுக்கு ஜாமின் வழங்க மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.