கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவுக்கு எதிராக சிபிஎம் தொடர்ந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
"அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென்று தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பிரச்சினை குறித்து மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடந்த ஜூலை 10ந் தேதி சுற்றறிக்கை அனுப்பி ஜூலை 18ந் தேதிக்குள் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டார். இது சட்ட விரோதமான உத்தரவாகும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு இன்று (17.07.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 18ந் தேதியன்று மீண்டும் விசாரணை நடத்தப்படும். அதுவரை அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதை கூடுதல் தலைமைச் செயலாளர் நிறுத்தி வைக்க வேண்டுமென நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இது கொடிக்கம்பங்கள் அகற்றும் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் தொடர் சட்டப்போராட்டங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியாகும். இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.