court

img

குறுகிய மனப்பான்மை தேசபக்தியாகாது!

புதுதில்லி, நவ. 28 - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தி யாவில் தடை விதிக்க வேண்டும் என்று கோருவது குறுகிய மனப்பான்மை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேசபக்தராக இருப்பதற்கு வெளி நாட்டில் இருந்து, குறிப்பாக அண்டை நாட்டில் (பாகிஸ்தானில்) இருந்து வரு பவர்களுக்கு விரோதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்ச  நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள், இசை யமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட் டோரை பணியமர்த்த இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

 சினிமா தொழிலாளியான பாயிஸ் அன்வர் குரேஷி என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். “பாகிஸ்தான் கலைஞர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை விதிக்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அது இந்திய கலைஞர்கள், சினிமா தொழிலாளர்கள் போன்றோரை பாதிக்கும். இதுதவிர, இந்தியா நடத்தும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்தால், பாகிஸ்தான் கலைஞர்கள், பாடகர்கள் போன்றவர்களை அழைத்து பல்வேறு நபர்கள் விளையாட்டு நிகழ்வை தவறாக பயன்படுத்தக்கூடும். விளையாட்டு என்ற போர்வையில் இந்திய கலைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும்” என்று மனுவில் அவர் கூறினார். ஆனால், இந்த மனுவை நீதிபதிகள் சுனில் பி சுக்ரே மற்றும் நீதிபதி பிர்தோஷ் பி பூனிவாலா ஆகியோர் அடங்கிய மும்பை  உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. “தேசபக்தராக இருப்பதற்கு, வெளிநாட்டில் இருந்து குறிப்பாக அண்டை நாட்டிலிருந்து வருபவர்களுக்கு விரோத மாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். தன்னலமற்ற, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருப்பவரே ஒரு உண்மையான தேசபக்தர். நல்ல உள்ளம் இல்லாதவரால் தேசபக்தராக இருக்க முடி யாது. நல்ல உள்ளம் கொண்ட ஒருவர், நாட்டிற்குள்ளும் எல்லையிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் வரவேற்பவராக இருக்க வேண்டும்.

கலை, இசை, விளையாட்டு, நடனம் ஆகியவை தேசம், கலாச்சாரம், நாடுகளை கடந்தது. நாடுகளுக்கிடையே அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், கலாச்சார நல்லி ணக்கம், ஒற்றுமை, அமைதியை மேம் படுத்துவதில் மனுதாரரின் கோரிக்கை ஒரு பிற்போக்கான நடவடிக்கையாக உள்ளது. அதில் எந்த நியாயமும் இல்லை” என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின்போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கோரியும், தன்னை விமர்சித்து மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக் களை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என்றும் பாயிஸ் அன்வர் குரேஷி உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்.  இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என். பாட்டி  ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரணை க்கு எடுத்து கொண்டது. அப்போது, மனு தாரர் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்த நீதிபதிகள், “இந்த வழக்கை மேல்முறையீடு செய்திருக்கக் கூடாது” என்றும், “குறுகிய மனப்பான்மையோடு இருக்கக் கூடாது” என குரேஷியை கண்டித்தனர். அத்துடன், மனுதாரருக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம் தெரி வித்த கருத்தை திரும்பப்பெற விடுத்த கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.