cinema

img

யாத்திசை : சிறுகுடி குரலால் பேசும் படம் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இரண்டு வரலாற்று தகவல்களுடன் யாத்திசை செல்லலாம். தஞ்சாவூரு க்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள  வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்தது வெண்ணிப் போராகும். இப்போர் ஏறத்தாழ கி.மு.2ஆம் நூற்றாண்டின் இறுதி யிலோ அல்லது கி.மு.1ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ நடந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. கரிகால் சோழன் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் சேர மான் பெருஞ் சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிர் குடிகளையும்  ஒரே நேரத்தில் தோல்வியுறச் செய்தான். வெண்ணிப் போரில் தோல்வியுற்ற வேளிர் குடிகளில் உயிர் பிழைத்த ஒன்பது குடிகள்  வாகை என்னும் இடத்தில் கரிகால சோழனை மீண்டும் போரில் எதிர் கொண்ட னர். இதுவே வாகைப்பறந்தலைப் போராகும். இப்போரிலும் கரிகால் சோழன் வெற்றி வாகை சூடினான். வெண்ணிப் போரில் கரிகால னின் வேல் மார்பை துளைத்து சென்றதால் முதுகில் புண்பட்ட சேரமன்னன் பெருஞ் சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற் பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான் என்பதை புலவர்கள், மாமூலனார், கழாத்தலை யார், வெண்ணிக் குயத்தியார் பாடல்களாகப் பாடியுள்ளனர்.

அரிகேசரியின் மகனான ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை 40 ஆண்டுகள் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவார். இந்த ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப் பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பி டத்தக்கது. மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்ட வனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமா தித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும், கேந்தூர்க் கல் வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகளை பிரம்மாண்டமான சினிமாவாக எடுக்க விரும்பும் இயக்குநரும், தயாரிப்பாள ரும் பிரபல நடிகர்களை வைத்து இராஜராஜ சோழன்,  மந்திரி குமாரி, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், பொன்னியின் செலவன் போன்ற  படங்களையே எடுக்க விரும்புவர். ஆனால் இத்தகைய மன்னர்களால் வீழ்த்தப்பட்ட சிறு குடிகளின் மீண்டெழும் கதையை அனேகமாக தமிழ் திரை உலகில் யாத்திசையே முதலில் பேசி உள்ளது என்பதே இப்படத்தின் முக்கியத்துவமாகும்.

ரணதீரன் நடத்திய போரின் செய்தியை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள புனைவு தான் கதையும் திரைக்கதையும். பாண்டி யர்கள் வருகை என்றே திரைப்படத்தின் விளம்ப ரங்களும் வெளிவந்தது. ஆனால் படம் வேறொரு கோணத்தில் மையம் கொள்கிறது. ரணதீரனின் பாண்டியப் பேரரசுக்கு எதிராக சேரர்கள் போரிடுகிறார்கள். அவர்களுடன் சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறு குழுக்களும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர். பேரரசுகளுக்கே இந்த நிலை என்றால் சிறுகுடி என்னவாகும்? பாண்டியர்களால் பாலை நிலத்திற்கு விரட்டப்பட்டனர் எயினர் குடியினர். இந்த  குழுவைச் சேர்ந்த வீரன் கொதி  தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  ரணதீரனை வெல்ல முடிவு செய்கிறான். இறுதியில் ரணதீரனை கொதி வென்றானா? பாண்டியப் பேரரசு வீழ்ந்ததா? என்பதை நோக்கி மிகவும் ரசிக்கத்தக்க வகை யில் செல்லும் திரைக்கதைதான் யாத்திசை. குல அமைப்பின் அழிவின் மீது எழுந்தது தான் அரசு எனும் வன்முறை வடிவம். இந்த அரசு எனும் வன்முறை வடிவம் பழைய குல அமைப்பிலிருந்து வேறு பட்டதாக இருக்கிறது. முதலில் அது தனது மக்களை பிரதேச ரீதியில் பிரித்து வைக்கிறது. அதனால்தான் பிர தேசத்திற்கு வெளியே உள்ள குல குடிகள், அரசுகள் ஆக்கிரமிப்பு போர்களை நடத்தும் போதோ அல்லது  அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கும் போதோ நாடு என்னும் பிரதே சத்திற்குள், பிரதேச உணர்வு கொண்ட குலக் குடிகள் அரசின் சார்பில் நிற்கின்றன. தன்னைப் போல ஒத்த குலக் குடிகளை எதிர்த்து போரி டுகின்றன.  நாடு என்னும் பிரதேசத்திற்குள் ஈர்க்கப்பட்ட குடிகளுக்கு, பண்பாடு ரீதியில் பிரதேச அடிமைகளாக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது.

இந்த அரசியலை கற்றுணர்ந்த இயக்குநர், எயினர் குடியின் பின்னடைவை ரணதீரன் கோச்சடையனின் பாண்டிய படைகளால் அல்ல, பள்ளி குடிகளால் நடத்தி காட்டி இருப்பது யாத்திசையின் மிக நுட்பமான அரசியல் ஆகும். வரலாறு நெடுக அரசுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அரசு எந்திரங்களும் அதன் அதிகாரங்களும் மாறாமல் நிலைத்து நிற்கின்றன. எயினர் குடி தலைவன் கொதியின் கோபம் சிம்மாசன ஆசையால் எழுந்தது என புரிந்துகொள்ளும் அபாயம் பல காட்சிகளில் உள்ளது. என் “மகன் நாளை அரசாள்வான்” என்ற வாசகம் அந்த குடியின் விடுதலைக்கானது என்று புரிந்துகொள்ள, கொதி பாண்டிய அரண்மனையை நோக்கிப் புறப்படும் போது “நான் மீண்டும் வரவில்லை என்றால், நீயே தலைவன்” என்று தனது சககுடியனிடம் பேசுவதுடன் இணைத்து பார்த்தால் மட்டுமே முடியும்.   இந்த திரைப்படத்தின் வெற்றியே பிரபல நடிகர்கள் இல்லாததுதான்.  அவர்கள் இருந்தால் விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்பட்டிருக்கும், ஆனால் இந்த உயிர்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே! எப்போ தும் முழு நகைகள், பட்டாடைகளுடன் மன்னர் களை பார்த்த நமக்கு ரணதீரன் என்ற மன்ன னின் ஆடைகள் ஆச்சரியத்தை அளிக்கும். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் இருந்திருக்க முடியும்.

“அதிகாரத்தைத் தக்க வைப்பவனுக்கும் அதை அடைய நினைப்பவனுக்குமான மோதலே படத்தில் முதன்மை பெறுவதால், போர்க்கள வன்முறைக் காட்சிகள் மிகுந்திருக்கிறது” என ஒரு பிரபல பத்திரிகை யில் விமர்சனம் காண நேர்ந்தது. இயற்கை யோடு இணைந்து வாழ்ந்த பூர்வகுடிகள் தங்கள் இருப்பிடம் விட்டு விரட்டப்பட்டு,  பாலை நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டு, தனது விடுத லைக்காக திருப்பி அடிப்பதை எப்படி “அதி காரத்தை அடையும்” என்ற வார்த்தைகளில் மட்டும் சொல்லிச் செல்ல முடியும்? கதையின் ஓட்டத்துடன் தவிர்க்க முடியாத வன்முறை கள்தான் படம் முழுக்க.  தனிச் சொத்துரிமை உருவானதும் தாய்வழிச் சமூகம் சிதைக்கப்பட்ட பின்பு பேரரசு தொடங்கி சிறு இனக்குழு வரை ஆணாதிக்க சமூகமாக இருந்ததை காட்சிப்படுத்தியிருந்த அணுகுமுறை மிகவும் கவனம் கொள்ள வைக்கிறது. சங்கத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி உரையாடல் அமைத்திருப்பது மிகவும் அழகான முயற்சி. கைபேசியில் உலக சினிமாக்களை சப் டைட்டிலில் பார்க்கும் நமது தலைமுறைக்கு, சொந்த மொழியையே அப்படிப் பார்ப்பது புது அனுபவம்தான். ஏழாம் நூற்றாண்டை புனைவாக மீண்டும்  உருவாக்குவதில் இதைத் தாண்டி,  கலை இயக்கம் மிகப்பெரிய ஆச்சரி யத்தை கொடுத்திருக்கிறது. பழங்குடி குழுக்க ளின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார வழிபாட்டு முறைகளின் சித்தரிப்பு, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, வீட்டு  அமைப்பு, மண்பாத்திரங்கள், உணவுமுறை கள் உள்ளிட்டவை மட்டுமல்ல; ஆடை, அலங்காரம், அரசன், மக்கள், தேவரடியாரின் ஆடை அலங்காரம் ஆகியன அந்த காலகட்டத்தைப் புனைவின் வழி நமக்குள் கொண்டுவருகின்றன. 

இசையும், ஒளிப்பதிவும் பார்வையா ளர்களை அப்படி ஈர்க்கின்றது. படத்தில் நடிகர்கள் புதுமுகம் என  டைட்டில் கார்டில்  போடுகின்றனர். அப்படியா என அவர்கள் ஆச்சரியப்படுத்துகின்றனர். கொதியும், ரணதீரனும் மட்டுமல்ல சுற்றிலும் பகைவர் சூழ, தன் மரணத்தை நின்று அழைக்கும் துடியும் உங்களுடன் நீண்ட நாள் பயணிப்பார் கள்.  யாத்திசை திரைப்படத்தில் எல்லாம் புதி வர்கள் என ஆரம்பத்தில் செய்திகள் வந்தது. அதுதான் அதன் வெற்றியாய் மாற்றியும் இருக்கிறது. பிரம்மாண்டங்களுக்கு மத்தி யில் கடும் உழைப்பைச் செலுத்தி மிகச் சிறந்த படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் தரணி ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவுக்கு பாராட்டுக்கள். சரி, இதில் எதிர்மறை விமர்சனம் செய்ய  எதுமே இல்லையா? இருக்கிறது! அதை முதன்மைப்படுத்தி நமது மேதாவிலாசத்தை காட்டுவதால் இத்தகைய புதிய முயற்சி கள், வெறும் முயற்சியாய் மாறிவிடக் கூடாது. படக்குழுவினருடன் தோளில் கை போட்டு அவர்களிடம் பேச வேண்டிய விசயம் அவை. கார்ப்பரேட் கம்பெனிகள் தொலைக் காட்சிகளையும், மின்னணு  ஊடகங்களையும் கையில் வைத்துக்கொண்டு குப்பைப் படங்க ளை நம் தலையில் இறக்கி பார்க்கவைக்கும் போது, இத்தகைய புதிய, தரமான முயற்சி களை நாம்தான் கொண்டாட வேண்டும்.  அதற்கு முற்றிலும் தகுதியான படம் தென்திசை அதாவது யாத்திசை.