cinema

img

மவுசு எகிரும் ஓடிடி...

வீட்டிலேயே திரைப்படங்களை - குறிப்பாகப் புதிய படங்களைப் பார்க்கிற ஓடிடி முறைக்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே வரவேற்பு கூடிவருவதாகத் தெரிகிறது. வாரம் தவறாமல் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியீடு கண்டவண்ணமிருக்கின்றன. அத்துடன் திரையரங்குகளில் வெளியீடு கண்ட சில படங்களும் ஓடிடியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் மட்டும் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் எண்ணிக்கை 8. அத்துடன் திரையரங்கில் வெளியாகி சரிவர ஓடாத பீட்சா 3 படமும் ஓடிடியில் வெளிவருகிறதாம். ஆகஸ்ட் 25இல் வெளிவரவிருக்கிற தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உருவான படங்களின் பட்டியல் இதோ: விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பீட்சா படத்தின் 3 ஆம் பாகம் ஏற்கெனவே இந்த ஆண்டு ஜூன் 26 அன்று திரையரங்கங்களில் வெளியானது. மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்களின் ஆதரவைப் பெறாத அந்தப் படத்தை தற்போது ஓடிடியில் மீண்டும் வெளியிடுகிறார்கள். சின்னத்திரையில் அறிமுகமான கார்த்திக் ராஜ் தயாரித்து, நடித்திருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திவாகரன் இயக்கிய மலையாளப்படம் குருக்கன். அதுவொரு புலனாய்வு நகைச்சுவைப்படமாம். அது மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளிவரவிருக்கிறது. பவன் கல்யாண் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ப்ரோ எனும் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் பாலிவுட் படமான ஆக்ரி சாச் படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  வர இருக்கிறது. ஷோஹரர் உஷ்னோடோமோ தின் எனும் வங்கமொழிப் படம் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

மார்க்வெல் காமிக் தொடரில் டொமினிக் நடிப்பில் தயாரான அயர்ன் ஹார்ட் படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. பஜாவோ எனும் படம் ஜியோ சினிமாவில் வரவுள்ளது. இப்படி இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதென்பது திரையரங்குகளுக்கு மாற்றாக ஓடிடி வெகு வேகமாக வளர்ந்துள்ளதையும் இன்னும் அது பலம் பெற்றுவருவதையுமே காட்டுவதாகத் திரைத்துறையினர் கருதுகின்றார்கள். போதாக்குறைக்கு இப்போது திரையரங்குகளில் வசூலைக் குவிப்பதாகச் சொல்லப்படும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் பெற்றுள்ளதாம். அது அவர்களின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளிவரப் போகிறதாம்.  அத்துடன் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் பெரிய தொகையொன்றைக் கொடுத்து ஜெயிலர் படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளதாம். திரையரங்குகளில் வெளியாகி 28 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் ஒரு திரைப்படத்தை வெளியிட இயலும் என்பதால் செப்டம்பர் மாதம் 7 அன்று ஜெயிலரை ஓடிடியிலும் காணலாம் என்கிறார்கள்.