காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், விடுதலைப்போராட்ட வீரரும், தமிழகத்தில் அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்தபோதிலும் எளிய வாழ்க்கை வாழ்ந்த கக்கன் அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தின் டிரெய்லரை அண்மையில் தமிழக முதல்வர் வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கக்கனின் போராட்டம், அவரது அரசியல் வாழ்க்கை, அவரின் எளிமை போன்றவற்றை விவரிக்கின்றது படம். ‘‘குடிக்கிற தண்ணியில மனுசனுக்கு மனுசன் என்னப்பா தீட்டு?’’ - போன்ற கூர்மையான சமூக விமர்சன வசனங்கள் உள்ளன. ஜோசப் பேபி தயாரித்து, அவரே கக்கனாக நடித்துள்ளார். பிரபு மாணிக்கம் மற்றும் ரகோத் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டுத் தேதி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.