cinema

img

பாரதி பாடல்களும் அவைமீதான உரிமைக்குரல்களும்... - நாம் இருவர்

இந்திய தேசத்தின் விடுதலைப் போர் வெற்றியடையப்போகிற தருணம் அது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறை யிலிருந்த சமயம். அவரது என்.எஸ்.கே. நாடக சபாவை மதுரம் அம்மையாரும் எஸ்.வி.சகஸ்ரநாமமும் நடத்திக்கொண்டிருந் தார்கள். 1946 ஆம் ஆண்டு பத்திரிகையாளரும் நாடகாசிரியருமான ப.நீலகண்டன் எழுதிய தியாக உள்ளம் நாடகம் அரங்கம் நிறைந்த காட்சியாக அப்போது சென்னையின் வால்டாக்ஸ் சாலையிலிருந்த ஒற்றைவாடை கொட்டகை என்றறியப்பட்டிருந்த வால்டாக்ஸ் தியேட்டரில் நடந்துகொண்டிருந்தது. அதை நடத்திக்கொண்டிருந்தது என்.எஸ்.கே. நாடக சபாதான்.  சகஸ்ரநாமத்தின் திறம்பட்ட கண்கா ணிப்பில் நடந்துகொண்டிருந்த அந்த நாட கத்தில் அந்நாளைய பிரபல நடிகரும் பாடகரு மான கே.ஆர்.ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்தார். உடன் அதிகம் பிரபலமாகாத வி.சி. கணேசன் - பின்னாளின் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலரும் அதில் நடித்தார்கள். 

ஒருநாள் ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமை யாளர் மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தைப் பார்த்தார். தன் மனதைப் பறிகொடுத்தவராக அதன் திரைப்பட உரிமையை வாங்கிவிட்டார். அதன் கதாசிரியர் ப.நீலகண்டனையே திரைக்கதையை எழுதச் சொன்னவர் அவரைத் துணை இயக்குநராகவும் சேர்த்துக்கொண்டார். அதுதான் எம்.ஜி.ஆரின் பிரதான இயக்குந ராகப் பின்னாளில் புகழ் பெற்ற ப.நீலகண்ட னின் முதல் சினிமா பிரவேசம்.  தியாக உள்ளம் நாடகத்தின் நாயகனான சகஸ்ரநாமத்தையே தனது படத்திலும் கதா நாயகனாக ஒப்பந்தம் செய்தார் மெய்யப்ப செட்டி யார். நாடகத்தில் நடித்த பலருக்கும் அதே  பாத்திரங்களில் படத்திலும் நடிக்க வாய்ப் பளித்தார். காரைக்குடியில் ஓலைக் குடிசை களால் அமைக்கப்பட்டிருந்த ஏ.வி.எம்.ஸ்டூடி யோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. ஆரம்ப நாளிலேயே சகஸ்ரநாமம் படப்பிடிப்பில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. நாடக சபாவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரால் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வர இயலவில்லை. செட்டியாருக்கு எந்தப் பதட்டமும் இல்லை. ஆனாலும் அவர் திட்டமிட்டபடி எதையும் செய்துவிடவேண்டும் என்று எண்ணுபவர். எனவே, உடனே அந்த வாய்ப்பினை அந்நாளைய பிரபல பாடக நடிகராகிய டி.ஆர்.  மகாலிங்கத்துக்குத் தந்தார் ஏ.வி. மெய்யப்ப செட்டியார். திட்டமிடப்பட்டபடி படப்பிடிப்பு தொடங்கி, நடந்து முடிந்தது. 

அது நாட்டின் விடுதலைக்கான யுத்தம்  உச்சத்திலிருந்த பொழுது. அதனால் அப்போ தெல்லாம் வாய்ப்பு கிடைக்கிற இடத்தி லெல்லாம் பாரதி போன்றவர்களின் விடுதலை வேட்கையைத் தூண்டுகிற பாடல்களைப் புகுத்துவது நாடக - சினிமாதுறையினரின் வழக்க மாக இருந்தது. எனவே, செட்டியாருக்கும் அந்த ஆசை வந்தது. பாரதியின் பாடல்களின் உரிமையை சுராஜ்மல் அண்ட் சன்ஸ் என்ற வடநாட்டுக்காரர்கள் நடத்திய நிறுவனம் வெறும் அறுநூறு ரூபாய்க்குப் பெற்று வைத்திருந்ததை அவர் அறிந்தார். உடனே அந்த உரிமையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று கிளம்பினார். கையில் எதற்கும் இருக்கட்டும் என்று பத்தாயிரம் ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டார்.  பாரதி பாடல்களின்மீதான ஏ.வி.எம்.மின் தீவிர விருப்பத்தை உணர்ந்த சுராஜ்மல் அண்ட்  சன்ஸ் நிறுவனத்தினர் பத்தாயிரம் ரூபாய்  தந்தால்தான் அந்த உரிமையைத் தரமுடியும் என்றார்கள். அதற்குமேலும் தாமதித்தால் இன்னும் விலையை உயர்த்தினாலும் உயர்த்து வார்கள் என்று எண்ணி உடனே பத்தாயிரம் ரூபாயைத் தந்து பாரதி பாடல்களின் உரிமை யினைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். எப்படியும் இந்தப் படத்தில் பாரதியின் பாடல்  இடம்பெற்றே ஆகவேண்டும் என்பது மெய்யப்ப செட்டியாரின் பெருவிருப்பமாக இருந்தது. படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், வி.கே.ராம சாமி, கமலா, சாரங்கபாணி, பி.ஆர்.பந்துலு,  டி.ஆர்.ராமச்சந்திரன் என்று ஒரு பெரும்  நட்சத்திரப் படையே இருந்தது. டி.ஏ.ஜெய லெட்சுமி நாயகியாக நடித்தார். தியாக உள்ளம் என்றிருந்த நாடகப் பெயர் நாம் இருவர் என்றானது. 

1947 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி நாம் இருவர் படம் திரைக்கு வந்தது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே, “என்னமோ காரைக்குடி பக்கம் மெய்யப்பன் பெரிய பெரிய கீத்துக் கொட்டகை போட்டிருக்காராம்... அது தான் ஸ்டூடியோவாம்... அதில் படப்பிடிப்பு நடத்துறாங்களாம்... இதெல்லாம் சரியா வருமா?” - என்றெல்லாம் திரைத்துறையில் பேச்சுக்கள் எழும்பியிருந்தன. எந்தவிதக் கேலி  கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தனது பணிகளைச் செய்து முடித்தார் மெய்யப்ப செட்டியார். படத்தில், ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு  முரசே...’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே...’, ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு...’, ‘விடு தலை விடுதலை விடுதலை...’ - ஆகிய மகாகவி பாரதியின் நான்கு பாடல்களை மகிழ்ச்சியோடு முழங்கச் செய்தார் ஏ.வி.எம். குறிப்பாக படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே குமாரி கமலாவின் நடனத்துடன் துவங்கும் ‘ஆடுவோமே பள்ளு  பாடுவோமே’ - பாடல் திரையரங்கை ரசிகர்களின் கரவொலியால் அதிரச் செய்தது. சுதர்சனம் இசையில் டி. கே.பட்டம்மாளின் குரலில் அந்தப்  பாடல் அந்த ஆண்டின் பாடலாக திசை யெட்டும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. 

“நாம் இருவர் படத்தை நேற்று பார்த்தேன். அப்படியே பிரமித்துவிட்டேன்!” - என்று தன் கைப்படக் கடிதம் எழுதி ஏ.வி. மெய்யப்ப செட்டி யாரின் காரைக்குடி முகவரிக்கு அனுப்பி வைத்தார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன். படம் அமோக வெற்றியடைந்தது.  இந்திய விடுதலை அதே 1947 ஆம் ஆண்டு  ஆகஸ்டில் சாத்தியமான நிலையில் இந்த நாம்  இருவர் படம் அதற்குச் சரியான விதத்தில் கட்டியம் கூறியதென்றே ரசிகர்கள் எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்கள். பாரதியின் பாட ல்கள் அதற்கொரு முக்கியக் காரணமாயின.  அதற்காகப் பெருமுயற்சியெடுத்து, பெருந்தொகை தருவதைக்கூடப் பெரிதாக எண்ணாமல் மெய்யப்ப செட்டியார் மேற் கொண்ட முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டது. இருந்தபோதிலும் பின்னாளில் பாரதியின் பாடல்களை மக்களின் உரிமையாக்க ஏ.வி.எம். உடன் ஒரு யுத்தம் நடத்தும் நிலையும் வந்தது என்பதும் நடந்தது.

;