நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். பாக்கியராஜ் இயக்கத்தில் 1991 ல் வெளிவந்த பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து நகைச்சுவைப் பாத்திரங்கள் உள்பட சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். 2019 ல் வெளிவந்த தனிமை படத்திலும் நடித்திருக்கிறார். இவர் தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவும்படி கோரிக்கை எழுந்துள்ளது. செய்தியை அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் மருத்துவம் குறித்துக் கேட்டறிந்தார். அவருக்கான முழு செலவையும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என்றும் உறுதி கூறினார்.