cinema

img

திவான் பகதூர் ஆங்கிலேயரை ஆங்கிலத்திலேயே விமர்சித்த படம்!

தமிழ் சினிமாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போன்றவையெல்லாம் அவ்வப்போது பேசு பொருளாக வந்துபோயிருக்கின்றன. ஆனால், அவை பளிச்செனத் தெரியா வண்ணம் சொல்லப்பட்டிருக்கும். விடுதலை உணர்வுகள் மேலோங்கி வந்த சமயத்தில் கலைகளிலும் இலக்கியங்களிலும் அது பிரதிபலிக்கத்தான் செய்தது. அதிலும் குறிப்பாக நாடகம், திரைப்படம் போன்ற வெகுமக்கள் சாதனங்களின் வாயிலாக அந்த உணர்வுக்கு தீனி போடுவதும் நடந்தது.  ஆனாலும், அடக்குமுறைகளுக்கு அஞ்சியும், பண முதலீட்டில் இயங்கும் சினிமா என்பதால் நட்டத்தை எதிர்கொள்ள இயலாது என்பதாலும் இப்படியான தயக்கங்களின் ஊடாகத்தான் அரச எதிர்ப்புக் கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பதிவாகி வந்தன. கடுமையான தணிக்கை முறைகள் அமலில் இருந்த காலம் அது. அப்படியானதொரு சூழலில் வெளிவந்த ஒரு தமிழ் சினிமாதான் திவான் பகதூர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரத்தின் இயக்கத்தில் 1943-ஆம் ஆண்டு வெளிவந்த படம் திவான் பகதூர். இதில் டி.ஆர்.ராமச்சந்திரன், ஜே.சுசீலா ஆகியோர் நாயகன் - நாயகியாக நடித்தார்கள். காளி என்.ரத்தினம் படிப்பறிவில்லாத பணக்காரராக நடித்தார். இவர்களோடு கே.கே.பெருமாள், இ.ஆர்.சகாதேவன், எம்.இ.மாதவன், வி.என்.குமாரசாமி, வி.எம்.எழுமலை, பி.எஸ்.சிவபாக்யம், டி.என்.ராஜலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், பி.ஆர்.மங்களம், பி.எஸ்.ஞானம் ஆகியோரும் நடித்தார்கள்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதியது எம்.ஹரிதாஸ். டபிள்யூ.ஆர்.சுப்பா ராவ் ஒளிப்பதிவை மேற்கொண்டார். டி.துரைராஜ் படத்தொகுப்பில் உருவான இந்த திவான் பகதூர் படத்தின் ஒலிப்பதிவை ஆர்.ஜி.பிள்ளை மேற்கொண்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு நிலையத்தில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை எஸ்.வேலுசாமி எழுதியிருந்தார். டி.ஏ.கல்யாணம் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் உதவியாளராகப் பணியாற்றினார்.   

கதைப்படி கல்வியறிவில்லாத பணக்காரர் ஒருவருக்கு (காளி என்.ரத்தினம்) திவான் பகதூர் பட்டத்தை அளிக்கிறது பிரிட்டிஷ் அரசு. மக்களுக்குத் தொண்டாற்றுவதாகச் சொல்லி பணக்கார நிலச்சுவான்தார்களுக்கு இப்படியான பட்டங்களைக் கொடுத்து, அவர்களைத் தங்களின் கைப்பாவைகளாக வைத்துக்கொள்வது அந்த நாளில் வெள்ளையர் அரசாங்கத்தின் வழக்கமாக இருந்தது. சாதாரண ஏழை, எளிய மக்களிடையே இதற்கு எதிரான உணர்வே இருந்துவந்தது. அந்த உணர்வைப் பிரதிபலிப்பதாக வெளிவந்ததுதான் இந்த திவான் பகதூர் சினிமா.

திவான் பகதூர் பட்டமளிக்கப்பட்ட காளி என்.ரத்தினத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார் கதாநாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன். அதுதான் கதையின் மையக் கரு. இதில் ஒரு புதுமையையும் துணிந்து செய்திருந்தார் இங்கிலாந்தில் படித்தவரான மாடர்ன் தியேட்டர்சின் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம். அதிகம் ஆங்கிலம் படிக்காத நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனிடத்தில் இருந்த திறன்மிக்க ஆங்கில உச்சரிப்பைக் கண்டு வியந்தார். அரைகுறையாகப் படித்தவரின் நாவில் இத்தனை அழகாக ஆங்கிலம் நடனம் புரிகிறதே என்று உணர்ந்த சுந்தரம் இந்தப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனின் பாத்திரத்தை ஒரு ஆங்கிலப் பிரசங்கியாகவே உருவாக்கியிருந்தார். நல்ல உச்சரிப்புடன் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பிரிட்டிஷாரின் திவான் பகதூர் பட்டத்தைக் கேலி செய்து மேடையில் உரையாற்றுகிறார் டி.ஆர்.ராமச்சந்திரன். கலைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இலைமறைக் காயாக இருந்துகொண்டிருந்த நிலையில், இப்படி அவர்களின் மொழியிலேயே அவர்களின் செயலை விமர்சிப்பதாக வந்த காட்சி துணிவுமிக்கதாகப் பார்க்கப்பட்டது.  ஏ.வி.எம். தயாரித்த சபாபதி படத்தின் நாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் அதன் வெற்றிக்குப் பின் சட்டென முளைத்த நட்சத்திரமானார். 1940-களில் சுறுசுறுப்பான நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தார். தேவகன்யா,  ஸ்ரீவள்ளி, வித்யாபதி, திவான் பகதூர், நாம் இருவர் போன்ற படங்கள் அவரது பெயர் சொல்லும் படங்களில் குறிப்பிடத்தக்கவை.

;