cinema

img

அந்தநாள் நினைவுகள்...­­ புதுமை வசனம் எழுதிய புதுமைப்பித்தன்... - சோழ. நாகராஜன்

ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளவையார் படத்திற்கு வசனம் எழுத முதலில் தமிழின்  பிரபல நவீன சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தனை நியமித்தார்களாம். சில காட்சிகளுக்கு அவர் எழுதிய வசனங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாம். ஒரு காட்சியில் அதியமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக் கனியை தான் உண்ணாமல் ஒளவைக்குத் தர எண்ணி அவரைச் சந்திக்கிற காட்சி.  அந்தக் காட்சியில் அதிய மான் ஒளவையிடம் கூறுவது: “ஒளவைப் பிராட்டியே..! இந்த நெல்லிக்கனி சாகாவரம் தரவல்லது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். எனவே, இதனை அருந்தும் தகுதி தங்களுக்கே உண்டு. நீங்களே நீண்டநாட்கள் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்ற வேண்டியவர்!” அதற்கு ஒளவையின் வியக்க வைக்கும் அறிவார்ந்த பதில்: “அதியமானே! மனிதர்கள் பிறப்புக்கு ஒரேயொரு வழி. ஆனால், இறப்புக்கோ எத்தனையோ வழிகள். ஆமாம்... அந்த அத்தனை வழிகளையும் இந்த ஒரு சிறு நெல்லிக்கனி அடைத்துவிடுமா என்ன?” இப்படி ஒளவையின் கதையைத் தனது வசனத்தால் இன்னொரு தளத்திற்கு இட்டுச்செல்ல முயன்ற புதுமைப்பித்தனின் வசனங்கள் மிகவும்  உயர்ந்த தரத்தில் இருந்ததால் பாமர ரசிகர் களால் அவற்றைப் புரிந்து ரசிக்க இயலாது என்று கருதி அவருக்குப் பதிலாக படத்தின் திரைக்கதை  ஆசிரியர் கொத்தமங்கலம் சுப்புவே  வசனத்தையும்  எழுதும்படி ஆனது. புதுமைப்பித்தனின் ஒருசில வச னங்களையும் படத்தில்  பயன்படுத்திக்கொண்டார்கள்.  ஆனால், முழு திரைப்படத்திற்கும் புதுமைப்பித்தன் உரையாடல் எழுதும் வாய்ப்பு எம்.கே. தியாகராஜ பாகவதர் தயாரித்து, நடித்த ராஜமுக்தி படத்தில் அவருக்குக் கிட்டியது.