புதுதில்லி:
பெட்ரோலியப் பொருட்களுக் கான விலையை குறைக்க முடியாததற்கு, எண்ணெய் முதலீட்டின் பத்திரங்களின் பெயரில் முந்தைய மன்மோகன் சிங் அரசு பெற்ற ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்களே காரணம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு உண்மையான காரணம், எண்ணெய்ப் பத்திரங்கள் அல்ல; மாறாக, மானியத்தை 12 மடங்கு குறைத்ததும், கலால் வரியை 3 மடங்கு உயர்த்தியதும்தான் என்று காங்கிரஸ் செய்திதொடர்பாளர் அஜய் மக்கான் பதிலடி கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர், மேலும் கூறியிருப்பதாவது:2014-15 ஆண்டு முதல் ஒன்றியபாஜக அரசு எண்ணெய் பத்திரங்களுக்காக ரூ. 73 ஆயிரத்து 440 கோடிசெலவிட்டுள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருட்கள் மீது வரியாக ரூ. 22 லட்சத்து 34 ஆயிரம் கோடியைவசூலித்துள்ளது.2020-21-இல் மட்டும் பெட்ரோல், டீசல் வரியாக ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 812 கோடியை சுருட்டியுள்ளது. இது 2013-14-இல் ஐமுகூ அரசுக் காலத்தை விட 3 மடங்கு அதிகம்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாக 2012-13-இல் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 387 கோடியும், 2013-14-இல் ரூ.1லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடியும் செலவிடப்பட்டது. ஆனால், தற் போதைய பாஜக ஆட்சியில் அது ஆண்டுதோறும் குறைக்கப்பட்டு 2020-21-இல் வெறும் ரூ. 12 ஆயிரத்து231 கோடியாக சுருங்கி விட்டது.மறுபுறத்தில், கடந்த 15 மாதங் களில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு முறையே 32 ரூபாய் 25 காசுகள், 27 ரூபாய் 58 காசுகள் என உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வுக்கு உண்மையான காரணம், எண்ணெய் பத்திரங்கள் அல்ல,மானியத்தில் 12 மடங்கு குறைத்ததும், 3 மடங்கு வரி போட்டதும்தான்.இவ்வாறு அஜய் மக்கான் குறிப்பிட்டுள்ளார்.