சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்து, ரூ.1,966க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்துள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர், தில்லியில் ரூ.1,804க்கும், மும்பையில் ரூ.1,756க்கும், சென்னையில் ரூ.1,966க்கும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.1,911க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஜெட் எரிபொருள் அல்லது விமான விசையாழி எரிபொருளின் விலையும் 1.54 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமான விசையாழி எரிபொருள் (ATF) விலை கிலோலிட்டருக்கு ரூ.1,401.37 குறைந்து, ரூ.90,455.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.