கைதான அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா ஆபத்தானது
ஆர். சச்சிதானந்தம் எம்.பி., நோட்டீஸ்
புதுதில்லி, ஆக.20 - அரசியலமைப்பின் 130வது திருத்த மசோதா புதனன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் சார்பில் நோட்டீஸ் அளித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த இந்த மசோதா, கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியலமைப்பு விதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மசோதாவின் முக்கிய விதி
புதிய திருத்தத்தின்படி, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் எந்தவொரு அமைச்சரும் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டால், 31வது நாளில் அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஒன்றிய அரசின் விஷயத்தில், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் அந்த அமைச்சரை நீக்க வேண்டும். பிரதமர் தானே கைதாகும் நிலையில், 31வது நாளுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். மாநில அரசுகளில் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் அமைச்சரை நீக்க வேண்டும். விடுதலையான பின் மீண்டும் நியமனம் செய்ய முடியும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பு ஏன்?
இந்நிலையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கட்சியின் சார்பில் அளித்த நோட்டீஸில் எதிர்ப்புக்கான ஐந்து முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார்: அடிப்படை நீதிக் கொள்கை மீறல்: “குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர்” என்ற கொள்கையை மசோதா மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். கைது மற்றும் தடுப்பு என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரம் அல்ல என்றும், அரசியல் நோக்கில் கைது நடத்தப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தவறான அரசியல் பயன்பாட்டின் அபாயம்: விசாரணை நிறுவனங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறுத்த பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், இந்த மசோதா அத்தகைய தவறான பயன்பாட்டுக்கு வாய்ப்பளிக்கும் என்று எச்சரித்துள்ளார். கூட்டாட்சி கட்டமைப்பின் பலவீனம்: அரசியலமைப்பு பிரிவுகள் 75, 164 மற்றும் 239AA ஆகியவை நிர்வாக அமைப்பின் முதுகெலும்பு என்றும், இவற்றில் மாற்றம் செய்வது கூட்டாட்சி கட்டமைப்பை பாதிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நிவாரண வழிகள் இல்லாமை: பின்னர் விடுவிக்கப்பட்டால் அல்லது குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டால், அவர்களின் நற்பெயர் மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்படும் சேதத்தை எவ்வாறு சரிசெய்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்: இந்த மசோதா அரசியலை சுத்தப்படுத்துவது என்ற பெயரில் வந்தாலும், உண்மையில் ஜனநாயகத்தையே அழிக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விதியை மக்களின் கைகளில் இருந்து விசாரணை அதிகாரிகளின் கைகளில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரித்துள்ளார்.
அரசு நிலைப்பாடு
அரசுத் தரப்பு இந்த மசோதாவை அரசியலமைப்பு நெறிமுறைகளை பாதுகாப்பதற்கும், நல்லாட்சியை மேம்படுத்துவதற்கும், அரசு நிறு வனங்களின் மீதான மக்கள் நம்பிக்கை யை பராமரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை என்று வாதிடுகிறது. இம்மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விரிவான ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகியவையும் இதே குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.