articles

img

பொதுத்துறை சொத்துக்கள் தனியாருக்கு 25 ஆண்டு குத்தகைக்கா?

கொரோனா கொடிய நோய்த் தாக்குதல்கள் உலகின் பெரும்பாலானநாடுகளின் பொருளாதாரவீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது. பொருளாதார சரிவைக்  கட்டுப்படுத்தப் பல நாடுகளில் பல அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன.மக்கள் தொகையில் இந்தியாவை விட அதிக எண்ணிக்கையில் உள்ள சீனா சில வாரங்களுக்கு முன்பு மக்களிடம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் தனியார் நிறுவனங்களின் சொத்தைக் கட்டுப்படுத்தும், மீட்கும் கொள்கை முடிவை அறிவித்திருக்கிறது.அதாவது தனியார்த் துறையின் சொத்துக்கு  உச்ச வரம்பு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இன்றும் சீனாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.அங்கும் பல பிரச்சனைகள் இல்லாமலில்லை. ஆனால் அவைகள் சீரமைப்பு செய்யப்படுகின்றன.

இந்தியாவில் நடப்பது என்ன? பிரதமர் நேரு காலத்தில் உருவாக்கிய பொதுத் துறை கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நேருவுக்குப் பிறகுவந்த காங்கிரஸ் ஆட்சியினருக்கும் இந்தத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் பங்கு உண்டு. மோடி ஆட்சியில் இது உச்சத்திற்கே சென்றுள்ளது.பொதுத் துறைகளையும், அதன் சொத்துக்களும் தங்களுக்கு நெருக்கமான சில பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முயற்சி செய்வதை இன்றையகாங்கிரஸ் தலைமை சுட்டிக்காட்டியதற்கு, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதில் முழுக்க முழுக்க தரம் தாழ்ந்து வரும் பாஜக அரசியலின் ஒரு அடையாளம் ஆகும்.

பெரும் முதலாளிகளுக்குப் பொதுத்துறை சொத்துக்களைக் குத்தகை விடுவது சரி என்றால் அடுத்த கட்டமாகஅரசு நிர்வாகத்தைத் தனியாருக்கு 25 ஆண்டுகள் குத்தகைவிட்டுவிடுவார்களா? நாட்டிற்கும் மக்களுக்கும் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் பாஜக காங்கிரஸ் அரசியல் சண்டையாக மாற்றும் செயல் கண்டனத்திற்கு உரியது. நீங்கள் யாருக்குப் பொதுத் துறை சொத்தைக் குத்தகைக்கு விடுவதாக முடிவு செய்துள்ளீர்களோ அந்த முதலாளிகளின் கடந்த கால, நிகழ்கால செயல்கள் எத்தகையன என்பதேநாளும் செய்திகளாக வெளி வந்த வண்ணமே உள்ளனவே!

அமெரிக்க நாட்டின் இலக்கிய படைப்பாளியும் நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் பால்க்குனரின் (William Faulkner) கருத்து இங்குப் பொருத்தமாக அமைகிறது.“கடந்த காலம் ஒருபோதும் இறந்தது இல்லை. அதைக்கடந்த காலம் என்று கூடக் கூற முடியாது.” “ The past isnever dead. It is not even  past” நமது நாட்டில் கடந்த75 ஆண்டு கால தனியார்த் துறை நாட்டிற்குச் செய்த நன்மைகள் என்ன, தீமைகள் என்ன எனப் பார்க்க வேண்டும் அல்லவா? சான்றாக,தனியார் துறையில் இயங்கி வந்தஆயுள் காப்பீட்டுத் துறையை- 1956 ஆம் ஆண்டு  ஜூன் திங்களில் ஒன்றிய அரசு நாட்டுடைமையாக்கியது. ஏன்?இந்தியப் பிரதமர் நேருவின் மருமகன்- இந்திரா காந்தியின்கணவர் பெரோஸ் காந்தி 1955 ஆம் ஆண்டு தனியார்காப்பீடு கழகத்தில் நடந்த மோசடிகளை நாடாளுமன்றத்தில் தரவுகளோடு வெளிப்படுத்தினார்.புலன் விசாரணைமேற்கொள்ளப்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழின் உரிமையாளரும் பெரும் முதலாளிகளில் ஒருவருமான சச்சீன்தேவ் கேக்கா பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட இந்திய ஆயுள் காப்பீடு கழகம் நாட்டிற்கு என்ன தந்தது? இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இந்திய ஆயுள் காப்பீடு கழகம்வழங்கிய நிதி -ரூபாய் 184 கோடியாகும்.  3 வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூபாய் 285 கோடி, 4வது திட்டத்திற்கு ரூபாய் 1530 கோடி, 5வது திட்டத்திற்கு ரூபாய் 2942கோடி, 6வது திட்டத்திற்கு ரூபாய் 7140 கோடி, 7வது திட்டத்திற்கு ரூபாய் 12969 கோடி, 8வது திட்டத்திற்கு ரூபாய்.56097கோடி, 9வது திட்டத்திற்கு ரூபாய் 1,70,929 கோடி,10வது திட்டத்திற்கு 3,94,799 ரூபாய் கோடி, 11 வது திட்டத்திற்கு ரூபாய் 7,04 720 கோடி, 12வது திட்டத்திற்கு ரூபாய் 14,230,55 கோடி. ஐந்தாண்டுத் திட்டத்திற்கு மூடுவிழா மோடி அரசால் நடத்தப்பட்டப் பின்பும் 2017-2022-ஐந்தாண்டுகளுக்கு ரூபாய் 28,01,483 கோடி வழங்கியுள்ளது. பல கோடிக்கணக்கான நபர்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் தங்களின் சேமிப்பை அளித்துள்ளார்கள்.பல ஆயிரக்கணக்கானோர் பல நிலைகளில் பணி புரிகிறார்கள். பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் போவதற்கு இவர்களிடம் கருத்துக் கேட்டுத்தானே  நிதி தொடர்பான கொள்கைமுடிவை எடுத்திருக்க வேண்டும். அது தானே மக்கள் ஜனநாயகம்.தனியார்த் துறை நிறுவனங்கள் கூட பங்குதாரர் ஆண்டுகூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிதி முடிவு
களை எடுக்கிறார்கள். அரசு முடிவுகள் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டதா?1991ஆம் ஆண்டிற்குப் பிறகு தாராளமயமாக்கல், தனியார் திட்டத்தைப் பயன்படுத்திப் பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதற்கு வழிகள்வகுக்கப்பட்டன.

பல பொதுத் துறை நிறுவனங்கள் சான்றாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 3 ஜி, 4ஜி தொழில்நுட்ப வசதிகளை வேண்டுமென்ற வழங்கப்படவில்லை. இதற்கு மாறாக அம்பானி நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியே நின்றார். பிரெஞ்சு ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவதில் கூட்டாளியாக பெங்களூரில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம் எச்.ஏ.எல் நிறுவனம் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தும்,தொழில்நுட்ப முன் அனுபவமில்லாத, தகுதியில்லாத  அம்பானி நிறுவனத்தை இணைத்துக் கொண்டு அதிக விலை கொடுத்துப் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. ஊர் வாயை மூடினாலும் உலகத்தின் வாயை மூட முடியவில்லை. பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் ரஃபேல் ஊழல் விசாரணையைத் தொடங்கி உள்ளதல்லவா! இது போன்ற எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனியார் பெரு நிறுவனங்கள் தானே இன்றைய ஆட்சியாளர்களின் உற்ற தோழர்கள். இவர்கள் தானே குத்தகைதாரர்கள்!பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடியவர்கள் யார்? எப்படித் தப்பி ஓடினார்கள்? வரி ஏய்ப்பு, வங்கி மோசடி, பங்குச்சந்தை மோசடிகளுக்கு காரணமாக இருப்பவர்கள் யார்?

கடந்த 75 ஆண்டுகாலமாகப் பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் தங்கள் மாநிலங்களில் அமைய வேண்டும் என்பதற்காக ஏழை சிறு குறு நடுத்தர வேளாண்குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை, சொத்து மதிப்பு பல மடங்குகள் உயர்ந்து வரும் நிலையில்  25ஆண்டுகள் குத்தகை விடுவது, அப்பட்டமான மக்கள்விரோத நாட்டு விரோத செயல்கள் அல்லவா! சான்றாகஉதகை மலை தொடர் வண்டியும் குத்தகை பட்டியலில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டுஅரசின் சுற்றுலாத் துறைக்கு இந்த உதகை தொடர்வண்டியை அளிக்கலாமே! இது போன்ற எண்ணற்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பொதுத் துறை சொத்துகளைத் தனியார் முதலாளிகளுக்கு, அதுவும் மோசடியே செய்யும் முதலாளிகளுக்கு25 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவது கூட்டாட்சி இயலுக்கும், அரசமைப்புச் சட்டத்தில் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிச கொள்கைக்கும் மக்களாட்சி மாண்பிற்கும்முற்றிலும் விரோதமானதாகும். இன்னும் மூன்று ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆட்சி  எதிர்வரும் 25 ஆண்டுகள் பொதுச் சொத்தை  முதலாளிகளுக்குக்  குத்தகை விடுவது சட்டத் தார்மீக நெறிகளை அப்பட்டமாக மீறும் சர்வாதிகாரச் செயலாகும் அல்லவா!அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசமைப்புச் சட்டவல்லுநர்கள் ஆய்ந்து ஓர் ஆக்கப்பூர்வமான முடிவைமேற்கொள்ள வேண்டும். இந்தச் சீரழிவு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லலாம் அல்லவா!

கட்டுரையாளர்: பேரா.மு.நாகநாதன், பொருளாதார அறிஞர், மாநிலத் திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர்

;