articles

தில்லியில் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு காவல்துறை துன்புறுத்தல்கள்!

தில்லியில் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கு காவல்துறை துன்புறுத்தல்கள்!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிருந்தா காரத், அனுராக் சக்சேனா கடிதம்

 

புதுதில்லி, ஜூலை 12- தில்லியில் வாழும் வங்கமொழி பேசும் முஸ்லிம்கள், வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தில்லிக் காவல்துறையினரால் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அழைப்பாளரும், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிருந்தா காரத், தில்லி மாநில செயலாளர் அனுராக் சக்சேனா ஆகியோர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அந்தக் கடிதத்தின் சுருக்கம் வருமாறு: தில்லிக் காவல் துறையினரும் மற்றும் பல அமைப்புகளும், சட்டவிரோதமாக வங்க தேசத்திலிருந்து வந்துள்ள புலம்பெயர்ந்தோரை தேடுகிறோம் என்ற பெயரில் தில்லியில் வாழும் வங்கமொழி பேசும் முஸ்லிம்களை துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர். இது தொடர்பாக எண்ணற்ற புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.   ஜூலை 10ஆம் தேதியன்று நாங்கள் தில்லியில் உள்ள எங்கள் கட்சி தலைவர்களுடன் தில்லி பவானா ஜேஜே காலனிக்குச் சென்று, இவ்வாறு துன்புறுத்தல்களுக்குள்ளான பலரைச் சந்தித்தோம். அவர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள், சில இடங்களில் சிலரை மிரட்டி பணம் பறித்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். சில உதாரணங்களைக் கீழே பதிவிடுகிறோம்.

கைவிலங்கிட்டு இழுத்துச் சென்று பயங்கர குற்றவாளி போல...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்திலிருந்து முகமது நிசாமுதீன் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தில்லிக்குப் புலம்பெயர்ந்து வந்து, வசித்து வருகிறார். அவரும் அவருடைய மனைவியும் இப்போதும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். அவருக்கு 2004இல் பவானா ஜேஜே காலனியில் டிடிஏ குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு அதில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.   ஜூலை 5 அன்று காவல்துறையினர் சிலர் அவருடைய வீட்டிற்குச் சென்று, அவர் வங்கதேசத்தவருக்கு கள்ளத்தனமாக ஆவணங்களைப் பெறுவதற்காக உதவி செய்து வருபவர் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். அவர், காவல்துறையினரிடம் இங்கே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  ஒருவர் வாடகைக்குத் தங்கி இருந்தார் என்றும் இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தனக்குத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார். 6ஆம் தேதி காவல்துறையினர் மீண்டும் வந்து நிசாமுதீனைக் கைவிலங்கிட்டு, தெருவில் உள்ளவர்கள் அனைவரும் பார்க்கும் விதத்தில், அவரை ஒரு பயங்கரமான கிரிமினல் போன்று காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றிருக்கின்றனர். இந்தத் தடவை அவர்கள், அவரை வங்கதேசத்தவன் என்று குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

குடும்பத்தினர் அடைத்து வைப்பு துன்புறுத்தல்,  இளம் பெண்கள் உள்ளிட்டோர் புகைப்படம் எடுப்பு

அவருடைய மகள் சப்னம் காவல் நிலையத்திற்குப் பின்தொடர்ந்து சென்று, தங்களுக்கு தில்லியிலும், ஜார்க்கண்டிலும் உள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார். எனினும் காவல்துறையினர் நிசாமுதீனை அசிங்கமான முறையில் திட்டி, வங்கதேசத்தவருக்கு அடைக்கலம் தந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு நிர்ப்பந்தித்திருக்கின்றனர்.  இல்லையேல் அவரை வங்கதேசத்தவர் என்று பிரகடனம் செய்திடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் 11 வயது மற்றும் 8 வயது உடைய அவரது குடும்பத்தினரையும் அடைத்து வைத்து அவர்களையும் திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றனர். பின்னர் 1 மணியளவில் அவர்களை விடுவித்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் அடுத்த நாள் காலை 6 மணியளவில் விஜய் விகார் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் குடும்பத்தில் உள்ள இளம் பெண்கள் உட்பட அனைவரின் புகைப்படத்தையும் திரும்பத் திரும்ப எடுத்திருக்கின்றனர். பின்னர் கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் சில நாட்கள் கழித்து பல்வேறு காவல்நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டிற்குச் சென்று பல்வேறு வகைகளில் சட்டவிரோதமான முறையில் துன்புறுத்தல்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இந்தியக் குடிமக்களாகிய நிசாமுதீன் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் இழைத்த குற்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நிசாமுதீன் காவல் அடைப்பில் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார். அவ்வாறு தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தாக்குதலில் காது கிழிப்பு

இவ்வாறே பவானா சி பிளாக்கில் உள்ள சஜன் சௌதாகார் என்பவரும் காவல்துறையினரால் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் பிரிதம்புரா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தன்னை ஒரு வங்கதேசத்தவன் என்று ஒப்புக்கொள்ளுமாறு கூறி அடித்திருக்கிறார்கள். இவர்களின் தாக்குதலில் அவர் காது ஒன்றே கிழிந்துவிட்டது. பின்னர் ஒரு காவல்துறை அதிகாரி தவறுதலாக அவரை அழைத்து வந்துள்ளதாகக் கூறி அவரை விடுவித்திருக்கிறார்கள். அவர் வங்கமொழி பேசியதால் அவரை இழுத்து வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்கள்.

3 வயதான பெண்கள்... 3 நாட்கள் சித்ரவதை

அடுத்து, மூன்று வயதான பெண்கள். அவர்களின் வயது 60க்கும் 70க்கும் இடையிலானதாகும். அவர்கள் சிறுமிகளாக இருந்தபோதே வங்க தேசத்திலிருந்து அவர்களின் பெற்றோரால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு,  குழந்தைகள் பெற்று நல்லவிதமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த மூவரும் விதவைகள். அவர்களைக் காவல்துறையினர் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் சுமார் மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு வங்க தேசத்தில் எவரும் கிடையாது.

ஆவணங்கள் பறிப்பு திருப்பித்தர லஞ்சம்...

இதேபோன்று காவல்துறையினர் சாணக்யபுரியில் வசித்துவந்த வங்காளிகள் பலரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் ஆவணங்களை எடுத்துச்சென்றிருக்கிறார்கள். பின்னர் ஆவணங்களைத் திருப்பித்தர லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.  

வயது குழந்தையுடன் பெண் வங்கதேசம் அனுப்பி வைப்பு

இதைவிட மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் ஒன்றும் நடந்திருக்கிறது. நம் குடிமக்கள் சிலர், ஒரு பெண் மற்றும் ஒரு 5 வயது குழந்தை உட்பட வங்கதேசத்தவர் என்று முத்திரை குத்தப்பட்டு வங்கதேசத்தில் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது வங்கதேசத்தில் அவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்ற பெயரில் நாட்டின் தலைநகரிலேயே மிக மோசமான முறையில் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள் நடந்துகொண்டு வருகின்றன. இவற்றுக்கு எதிராக உள்துறை அமைச்சரான நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பிருந்தாகாரத்தும் அனுராக் சக்சேனாவும் அக்கடிதத்தில் கோரியுள்ளார்கள்.