articles

img

விவசாயத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என்ன?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரும் பயனாளிகள் எண்ணிக் கையை கருத்தில் கொண்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தி உள்ளது. அதே போல் தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, விலை  உயர்வுக்கு ஏற்றார் போல்  நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்;  100 நாட்கள் வேலை என்பதை மாற்றி 150 நாட்களாக உயர்த்த வேண்டும்; இதோடு சேர்த்து 33 பரிந்துரைகளை அமலாக்குமாறு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தை நாடாளுமன்ற நிலைக்குழு வலி யுறுத்தியுள்ளது.

தற்போது நடப்பது என்ன?

ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் திட்டத்தின் செலவுக ளுக்கும் முந்தைய ஆண்டுக்கான பாக்கி தொகையை வழங்குவதற்கும், கட்டுமானப் பணிகள், பொருட்களுக்குமே பெரும்பாலும் செலவிடப்படு வதாக தெரிய வருகிறது. வேலை வாய்ப்பு உத்தர வாதத்துக்கான மக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் மட்டும்  ரூ.21,000 கோடி வரையில் சம்பளப் பாக்கி இருக்கும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரையில்  சம்பளப் பாக்கி ரூ.12494 கோடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஒன்றிய அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் 20 சதவீதம் பழைய பாக்கியைச்  செலுத்துவதற்கே செலவிடப் பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிலுள்ள 12524 கிராம ஊராட்சிகளிலும் நூறுநாள்  வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பாதிப்பு- விவசாயம் வீழ்ச்சி என மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். சாதாரண ஏழை மக்களுக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ இன்றி தவிக்கும் மக்கள் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வை எப்படி தாக்குப்பிடிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். மளிகைப் பொருட்கள், எண்ணெய், பருப்பு, காய்கறி விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

வார்டு வாரியாக பார்ப்பது சரியல்ல

குடும்ப வருமானத்திற்கான மாற்று வேலைத் திட்டமாக உள்ள நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை கேட்டு வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூறுநாள் வேலையை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெளிவான சட்டம் இருந்தும்,  வேலை கேட்டு வரு பவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. வார்டு வாரி யாக வேலை, தெருக்கள் வாரியாக வேலை என ஏழை உழைப்பாளி மக்களை சாதியாக பிரிக்கும் சூழ்ச்சியை ஆளும் அரசுகள் நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.  சாதாரணமாக ஒரு கிராம ஊராட்சியில் குறைந்தது 7 வார்டுகள் இருக்கிறது என்றால் 1 வது வார்டில் உள்ள  மக்கள் மாதத்தின் முதல் வாரம் வேலை செய்வார் கள். ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் 6 நாட்கள் தான் வேலை செய்ய முடியும், அடுத்த வாரம் 2வது வார்டு மக்கள் இப்படி 3,4,5 வார்டு மக்கள் என 7 வது வார்டு மக்களும் வேலை செய்து முடிக்கும் போது, 1வது வார்டில் உள்ள மக்கள் மீண்டும் 2மாதம், 3 மாதம் கழித்துதான் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இப்படி பார்த்தால் பெரும்பாலான ஊராட்சிகளில் ஆண்டுக்கு  40 நாட்கள், 50 நாட்களுக்கு கூட வேலை கிடைக்காத நிலைக்கு  மக்கள் தள்ளப் படுகிறார்கள். 

நெட் கிடைக்காதது  மக்கள் குற்றமா?

மேலும் காலை 6 மணிக்கே வேலைக்கு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு மக்கள் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். ஆன் லைன் வருகைப் பதிவேடு மற்றும் புகைப்படம் எடுப்பதில்  முறையான கணினி வசதி பராமரிக்கப்படாததால் மக்கள் அலைக் கழிக்கப்படுகிறார்கள். கிராமங்களிலுள்ள ஏழை விவசாயத் தொழிலாளர்கள் காலை எழுந்தவுடனே வேலைத் தளத்திற்கு வந்துவிட வேண்டும் என அரசு நிர்வாகம் நிர்ப்பந்திப்பது என்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு விரோதமான  ஒன்று. ஏதாவது கணினி தொடர்பில் நெட் கிடைக்கவில்லை என்றால் அன்றைக்கு வேலை செய்ய முடியாமல் மக்கள் திரும்பி வீட்டிற்கு வந்து விடுவார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டு மென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மக்களைத் திரட்டி போராடி வருகிறது.

ஒருங்கிணைப்பாளர் பணிநியமனம்

தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் படித்த வேலை யற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, பொதுச் சொத்துகளை பாதுகாப்பது, சிறு சேமிப்புத் திட்டத்திற்கு உதவுவது, அரசு நலத்திட்டங்களின் பயனை மக்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட கிராம அளவிலான பல்வேறு  பணிகளுக்காக கடந்த 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி கிராம ஊராட்சிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்ப டையில் 12617 கிராம  ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நல பணியாளர்களை அப்போதைய  திமுக அரசு நியமனம் செய்தது. பின்பு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மக்கள் நல பணியாளர்கள்  நிய மனத்தை ரத்து செய்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் பணி அமர்த்துவது, அதிமுக அரசு அமையும் போது நீக்குவதுமாய்  ஏறத்தாழ 33 ஆண்டுகள் கடந்த நிலையில், தந்போது திமுக அரசு மாநிலத்திலுள்ள 12.524 கிராம ஊராட்சிகளில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்” என்றும் விருப்பம் தெரிவிக்கும்  முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதை விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் வரவேற்கிறது.

ஒரே நேரத்தில் இத்திட்டத்திற்கு பல்லாயிரக்க ணக்கானோர் நிர்வாக ஏற்பாட்டிற்கு வரும்போது இத்திட்டத்தை மெருகூட்டி விரிவான முறையில் அனைத்து பகுதி மக்களுக்கும் வேலை வழங்கக் கூடிய முறையில் அமல்படுத்த வேண்டும் என விவ சாயத் தொழிலாளர் சங்கம் எதிர்பார்க்கிறது.

சுழற்சி முறையை கைவிடுக!

ஆகவே, நூறுநாள் வேலைத்திட்டத்தில், வேலைக்கு வரும் அனைவருக்கும் 100 நாட்கள் முடியும் வரை தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்; வேலை கொடுப்பதில் சுழற்சி முறையை கைவிட வேண்டும்; தினக்கூலி ரூ.281 முழுமையாக கிடைப்பதை உத்தரவாதப்படுத்த  வேண்டும்; காலை ஆறு மணிக்கே பணியிடத்திற்கு வரவைத்து புகைப்படம் எடுக்கும் போக்கினை கைவிட வேண்டும்;  ஜாப்கார்டு கொடுப்பதற்கு வீட்டு வரி, தண்ணீர் வரி  செலுத்த நிர்பந்தம் செய்வதைத் தடுக்க வேண்டும்; மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் முழு மையான கூலி என்பதை அமலாக்க வேண்டும்; பணிக்கு சென்று திரும்பும்போதோ, பணித்தளத்திலோ விபத்து ஏற்பட்டு மரணம் நேர்ந்தால் ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; கட்டுமானப் பொருட்க ளுக்கு அதிகமாக நிதி ஒதுக்குவதை குறைத்து மனித உழைப்பிற்கு நிதியை கூடுதல் படுத்த வேண்டும்; தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்- என வலியுறுத்தி 2022 ஜூன்  28 (இன்று)  தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் ஏழை உழைப்பாளி மக்கள் பல்லா யிரக்கணக்கில் பங்கேற்கும் போராட்டத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் நடத்துகிறது. 

வறுமையை ஒழிக்க இடதுசாரிகளின் தீவிர முன்முனைப்பால் கொண்டுவரப்பட்ட; இன்றும் இந்திய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிற நூறுநாள் வேலைத் திட்டத்தை பாதுகாத்திட ஒன்றிய அரசும் மாநில அரசும் முன் வர வேண்டும். 

கட்டுரையாளர் : மாநில பொருளாளர்,  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்.


 

;