articles

img

பாலியல் குற்றத்திலிருந்து கணவனை விடுவிக்கும் பத்தாம் பசலிச் சட்டம்

மனைவியின் சம்மதமின்றி வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவு கொள்கிற கணவன் மீது வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர முடியாது என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 375வது பிரிவின் விதிவிலக்கு-2 கூறுகிறது. 160 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட இந்த விதிவிலக்கு இப்போதும் தொடர்வதை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தில்லி உயர்நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. ஏழாண்டு கால விசாரணைக்குப் பிறகு 2022 மே 11ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் முரண்பட்ட இரட்டைத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு நீதிபதி இந்த விதி விலக்கு தொடர்வது சரியல்ல என்று கூற, இன்னொரு நீதிபதி விதிவிலக்கு தொடர்வதற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே, சட்ட ஆலோசகர் கீர்த்தி சிங் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:

திருமண உறவில் வன்புணர்ச்சி சட்டவிரோதமா னது, நியாயமற்றது, திருமணமான பெண்ணின் சமத்துவ உரிமையை மீறுவது, பெண்ணின் பாலியல் தன்னுரிமைக்கும் கண்ணியத்திற்கும் எதி ரானது என்று அறிவிக்கக்கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தாக்கல் செய்திருந்த மனுவில் தில்லி உயர்நீதிமன்றம் முரண்பட்ட இரட்டைத் தீர்ப்பை அளித்திருப்பதில் சங்கம் ஏமாற்றம் கொள்கிறது.

ஆணுக்கு விதிவிலக்கு  அளிக்கும் சட்டப்பிரிவு

வன்புணர்ச்சி தொடர்பான தற்போதைய சட்டம், ஒரு ஆண் தனது மனைவியை வன்புணர்ச்சி செய்தால் வழக்குத் தொடுக்கப்படுவதிலிருந்து அவனுக்கு விலக்கு அளிக்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி-375/வன்புணர்ச்சி) விதிவிலக்கு-2ன் அடிப்ப டையில் இவ்வாறு கணவனுக்கு விதிவிலக்கு அளிக்கப் படுகிறது. மண உறவில் வன்புணர்ச்சியைக் குற்றச் செயல் அல்ல என்றாக்குகிற அந்த விதிவிலக்கு, ‘‘ஒரு ஆண் தனது மனைவியுடன் பாலியல் உடலுறவு கொள் வது அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, மனைவி 15 வயதுக்குக் குறைந்தவர் அல்ல என்கிற நிலையில், வன்புணர்ச்சி ஆகாது’’ என்று கூறுகிறது. முந்தைய வழக்கொன்றில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் (‘இண்டிபெண்டன்ட் தாட்’ என்ற குழந்தைகள் நல அமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான வழக்கு), வன்புணர்ச்சிக்கு கணவன் மீது மனைவி வழக்குத் தொடர்வதற்கான வயதை 15லிருந்து 18ஆக உயர்த்தியது. ஆக, ஒரு ஆண் தனது மனைவியை அவரது சம்மதம் இல்லாமல் பாலியல் உடலுறவுக்கு உட்படுத்தினால், மனைவியின் வயது18க்கு மேல் இருக்குமானால், அது வன்புணர்ச்சியாகாது.

பிரிட்டிஷ் கோட்பாடு

கணவனுக்கு இவ்வாறு விதிவிலக்கு அளிக்கும் சட்டம் 1860ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தை நிறைவேற்றிய பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்டதா கும். திருமணமான பெண்ணின் இடம் தொடர்பான பழைய ஆங்கிலேயக் கோட்பாட்டின் அடிப்படையில் அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. கணவனின் ஒரு சொத்தாக, அவனுக்கு கீழ்ப்பட்டவளாக மனைவி நடத் தப்பட வேண்டும், அவளை வன்புணர்ச்சி செய்தாலோ பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்தினாலோ அவன் மீது வழக்குத் தொடர முடியாது என்பதே அந்தக் கோட்பாடு. தில்லி உயர்நீதிமன்றத்தில் மாதர் சங்க வழக்குரை ஞர் மண உறவில் வன்புணர்ச்சிக்கான விதிவிலக்கு பத்தாம் பசலித் தனமானது, மண உறவுகள் குறித்த காலாவதியாகிப்போன கண்ணோட்டத்தின் அடிப்ப டையில் உருவாக்கப்பட்டது, ஒரு நியாயமான அரச மைப்பு சாசனக் கட்டமைப்பில் அதற்கு இடமில்லை என்று சுட்டிக்காட்டினார்.

பெண்ணின் தார்மீக உரிமை

விருப்பமில்லாத, கட்டாயப்படுத்தப்படுகிற உடலு றவுக்கு மறுப்புத் தெரிவிப்பது பெண்ணின் தார்மீக உரிமை; வேண்டாம் என்று சொல்வதற்கு மனைவிக்கு உள்ள உரிமை மதிக்கப்படவேண்டும்; திருமணம் என்பது சம்மதம் பெறுவதைப் புறக்கணிப்பதற்கான பொது உரிமம் ஆகாது என்றும் அவர் வாதிட்டார். தேசிய குடும்ப சுகாதாரத் திட்ட (என்எஃப்எச்எஸ்) 5வது அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்களைக் குறிப்பிட்ட அவர், திருமணமான பெண்களில் 15 முதல் 49 வயது வரையிலானவர்களில் 83 சதவீதம் பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள், ஆனால் 99.1 சதவீத பாலியல் வன்முறைகள் பற்றிப் புகார் கூட செய்யப்படு வதில்லை என்று அந்த அறிக்கை தெரிவிப்பதை எடுத்துக்காட்டினார். நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தனது தீர்ப்பில், ‘மனைவி கீழ்ப்பட்டவள், இரண்டாம் நிலையில் உள்ளவள் என்ற பழைய கண்ணோட்டங்கள் மாறிவிட்டன, திரு மணத்தில் பெண்கள் சமமான கூட்டாளிகளாக இன்று கருதப்படுகிறார்கள், அவர்கள் பாலியல் தனியுரிமை யும் உடல்சார்ந்த கட்டுப்பாட்டு உரிமையும் உடலின் செயல்பாட்டுக்கான உடைமை உரிமையும் உள்ள தனி மனிதர்களாக மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார். திருமண உறவில் வன்புணர்ச்சிக்கான விதிவிலக்கு 50 நாடுகளில் நீக்கப்பட்டுவிட்டது என்பதும் வாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது.

30 ஆண்டு காலப் போராட்டம்

மணவாழ்வில் வலுக்கட்டாய பாலியல் உறவை ஒரு வன்புணர்ச்சிக் குற்றமாக அங்கீகரிக்கக் கோரும் இயக்கத்தை ஜனநாயக மாதர் சங்கம் 1990ஆம் ஆண்டுகளிலிருந்து நடத்திவருகிறது. மண உறவில் வன்புணர்ச்சிக்கு விதிவிலக்கு அளிக்கும் வன்புணர்ச்சி சட்டத்தின் விதிவிலக்கு-2 பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிடம் மனு அளித்து வந்துள்ளது. இறுதியாக இந்த மனு ஏழு ஆண்டு களுக்கு முன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. 2013ஆம் ஆண்டில் வன்புணர்ச்சி சட்டத்தில் பெண்க ளின் உரிமைகளுக்கு வழிவிடும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது என்றாலும்கூட, மண உறவில் வன் புணர்ச்சிக்கு விதிவிலக்கு அளிக்கும் பிரிவு மட்டும் நீடிக்கிறது. இந்நிலையில், நீதிபதி ராஜீவ் ஷக்தேர் கூறி யிருப்பது போல, மக்கள்தொகையில் பாதிப்பேராகிய பெண்கள், அவர்களுடைய கணவர்கள் கொடூரமான முறையில் பாலியல் உறவு கொண்டால் கூட, வழக்குத் தொடுத்து தண்டனையளிக்கக்கூடிய வன்புணர்ச்சி சட்டத்தை நாட வழியற்றவர்களாக இருக்கிறார்கள். நமது அரசமைப்பு சாசனத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில் உள்ள 14, 15, 19, 21 ஆகிய சட்ட உரைகளின் அடிப்படையில், மண உறவில் வன்புணர்ச்சிக்கான விதிவிலக்கு என்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிபதி ஷக்தேர் கூறியுள்ள விளக்கங்களை மாதர் சங்கம் ஏற்கிறது.

மணமான பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பை மறுப்பதா?

அரசமைப்பு சாசனத்தின் 14வது சட்ட உரையின் கீழ் ‘‘சட்டங்களின் சமமான பாதுகாப்பு’’ என்ற உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது.  ஆகவே, வன்புணர்ச்சிக்கு விதிவிலக்கு அளிக்கும் பிரிவு 14வது சட்ட உரையை மீறுவதாகும் என்று நீதிபதி ஷக்தேர் கூறினார். திருமணமான பெண்களையும் திருமணம் ஆகாத பெண்களையும் பாகுபடுத்துவது அறிவுக்குப் பொருத்தமற்றது, நியாயமற்றது என்றார் அவர்.  சட்டப்பூர்வமான செயல், சட்டவிரோதமான செயல் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது விருப்பமும் சம்மதமும்தான். ஒவ்வொரு பெண்ணும், கூட்டாளியாக வாழ்கிறவர் உட்பட, வலுக்கட்டாயமாகப் பாலியல் செயல்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்போது கூட வன் புணர்ச்சி என குற்றம் சாட்ட முடியும் என்று நீதிபதி ஷக்தேர் சுட்டிக்காட்டினார். தற்போதைய சட்டப்படி, திரு மணமான ஒரு பெண் தனக்கு உடல் நலம் இல்லை என்றாலும் கூட, கணவனுக்கு ஒரு தொற்று நோய் இருக்கிறது என்றாலும் கூட, வேண்டாம் என்று சொல்லி விட முடியாது.  மீண்டும் மீண்டும் வலுக்கட்டாயமான பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் கூட வன்புணர்ச்சி என அந்தப் பெண்ணால் குற்றம் சாட்ட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், வன்புணர்ச்சி யால் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன.  ஆனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும் மண மான பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை என்று நீதிபதி ஷக்தேர் கூறினார்.

திருமண உறவு  கொடூரமானதாக மாறினால்...

வழக்கில் தங்களை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொண்டவர்கள் மாதர் சங்க மனுவுக்கு எதிராகப் பல வாதங்களை முன்வைத்தார்கள். திருமண உறவுகளைப் பாதுகாப்பதில் அரசுக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இருக்கிறது என்ற அவர்க ளது வாதத்தைக் குறிப்பிட்ட நீதிபதி ஷக்தேர், திருமண உறவு கொடூரமானதாக மாறுமானால் அதைப் பாது காக்கிற சட்டப்பூர்வமான பொறுப்பு எதுவும் அரசுக்கு இருக்க முடியாது என்றார். 

எதிர்வாதம் என்ன?

இதில் உடன்படாத தீர்ப்பை அளித்த நீதிபதி ஹரி ஷங்கர், மண உறவு வன்புணர்ச்சியைக் குற்றச்செய லாக்கக்கூடாது, அது திருமண உறவு என்ற கட்ட மைப்பைச் சீர்குலைத்துவிடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டார். முன்வைக்கப்பட்ட மற்றொரு வாதம், மனைவிக்கு எதிரான கொடுமைகள் பற்றி வரையறுக்கிற இந்திய தண்டனைச் சட்டத்தின் எஸ்-498-ஏ பிரிவின் கீழ் மனைவி எப்போது வேண்டுமானாலும் வழக்கு  தொடுக்கலாம் என்பதாகும். இந்த சட்டப்பிரிவு வன் புணர்ச்சிக் குற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை, வன்புணர்ச்சி ஒரு தனிப்பட்ட மாறுபட்ட குற்றச் செயல் என்றார் நீதிபதி ஷக்தேர். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் பாலியல் வன்முறை ஒரு வன்முறைதான் எனக் கூறுகிறது,  ஆனால் அது ஓர் உரிமையியல் (சிவில்) சட்டம் தானேயன்றி, குற்றவியல் (கிரிமினல்) சட்டம் போன்ற தல்ல என்று அவர் குறிப்பிட்டார். கணவனுக்கு சில தடைகளையும், குடும்ப வன்முறைச் சூழலில் சில பாதுகாப்பு ஆணைகளையும்தான் அந்தச் சட்டத்தால் பிறப்பிக்க முடியும், மனைவிக்குத் தேவைப்படும் நிதி நிவாரணங்களை வழங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வாதங்களில் வெளிப்படுத்தப்பட்ட மற்றொரு கவலை வழக்கமான ஒன்றுதான். அதாவது பெண்கள் வன்புணர்ச்சி நடந்துவிட்டதாகப் போலியான புகார் களைத் தாக்கல் செய்வார்கள், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதே அது. பெண்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் அமைப்புகளுக்கு இந்தப் பிரச்சாரம் எவ்வளவு போலியானது என்பது தெரியும். இந்தியாவில் பெண்களுக்கு மண உறவை முறித்துக்கொள்வதில் எந்தப் பங்கும் இருப்பதில்லை. ஏனெனில், சமூகப் பாதுகாப்பையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் பொறுத்தவரையில் ஆண்களைவிடப் பெண்க ளுக்குத்தான் இழப்பு அதிகம். நீதிபதி ஷக்தேர் போலி யான வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிற குற்றச்செயல்கள் தொடர்பாகவும் பதிவாகின்றன, அந்த வழக்குகளை சட்டமும் நீதிமன்றங்களும் கையா ளவே செய்கின்றன என்றார். எப்படியானாலும் மண உறவு வன்புணர்ச்சியை குற்றம் என்று அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

‘குடும்பம்’ என்பதில் சட்டம் தலையிடக் கூடாதா?

குடும்பம் என்ற தனிப்பட்ட வெளியில் சட்டம் தலை யிடக்கூடாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. இதற்கு, (அ) பெண்களின் உரிமைகள் பறிக்கப்படு கிறபோது அங்கே பொதுவெளி தனிப்பட்ட வெளி என்ற வேறுபாட்டுக்கான பொருத்தப்பாடு எதுவும் இல்லை, (ஆ) அரசமைப்பு சாசன உரிமைகள் மீறப்படும்போது குடும்பக் கட்டமைப்பை ஒரு தனிப்பட்ட வெளி என கருத இயலாது என சரியான முறையில் பதிலளிக்கப் பட்டது. நீதிபதி ஷக்தேர் இறுதியாக, ‘‘பெண்ணின்  உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் மையமாக, எந்த ஒரு கட்டத்திலும் சம்மதத்தை விலக்கிக் கொள்வதற்கான உரிமை இருக்கிறது, அது பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த பாது காப்புக்கான உரிமையை உள்ளடக்கியிருக்கிறது’’ என்று சுட்டிக்காட்டினார்.  ஆகவே, மண உறவில் வன்புணர்ச்சிக் குற்றத்திலி ருந்து கணவனுக்கு விதிவிலக்கு அளிக்கும் தற் போதைய சட்டப்பிரிவு அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை - 21ல் உள்ள உயிர் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகும் என்றார் அவர். பெண்ணுக்குத் தனது பாலியல் அமைப்பு உடைமையையும் தன்னாளுமை யையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் உரிமையை வழங்குகிற அரசமைப்பு சாசனத்தின் 19 (1) (ஏ)  [வெளிப் பாட்டுச் சுதந்திரம்] பிரிவையும் இந்த விதிவிலக்கு மீறு கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘புனிதம்’ பூசிய நீதிபதி

ஆயினும், நீதிபதி ஹரி சங்கர் அளித்த முரண் படும் தீர்ப்பு, மண உறவுக்கு உரிய மதிப்பு நிலை யையும் முக்கியத்துவத்தையும், மனைவிக்கும் கணவ னுக்கும் இடையேயான பாலியல் உறவு புனிதமானது என்பதையும் மண உறவு வன்புணர்ச்சி விதிவிலக்கு எதிர்ப்பாளர்கள் ஏற்கத் தவறிவிட்டார்கள் என்று கூறுகிறது.  ‘‘ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் பாலியல் உறவு கொள்கிறான் என்ற போதிலும் கூட’’ அவன் பாலியல் குற்றவாளியா கக் கருதப்படுவானேயானால், அது ‘‘மண உறவு என்ற கட்ட மைப்புக்கே முற்றிலும் நேரெதிரானதாகும்’’ என்றார் அவர். நீதிபதி ஷக்தேர், ‘‘குற்றத்தைச் செய்வது யாராக இருந்தாலும் கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் உறவு பாதிக்கப்படும் பெண்ணை உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் உணர்ச்சி சார்ந்தும் சீர்குலைக்கிறது’’ என்று கூறினார். அதற்கு முற்றிலும் நேர்மாறாக, நீதிபதி ஹரி ஷங்கர், ‘‘அந்நிய நபர்களால் (வன்புணர்ச்சிக்கு உட் படுத்தப்படும்) ஒரு பெண் அதே உணர்ச்சிக் கொந்த ளிப்பை (கணவனால் நிகழ்கிறபோதும்) உணர்வார் என்பது எதார்த்தமற்றது’’ என்று கூறியிருக்கிறார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், 160 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட பத்தாம் பசலித்தனமான ‘மண உறவு வன்புணர்ச்சி விதிவிலக்குச் சட்டத்தை’ எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும். இந்தச் சட்டம் பெண்ணின் கீழ்ப்பட்ட நிலையைத் தக்க வைக்க முயல்கிறது. திருமண உறவில் நுழைந்துவிட்டதாலேயே வலுக்கட்டாய பாலியல் உறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் கூட பெண்ணால் எதுவும் செய்ய முடியாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. ஒரு மனைவிக்குத் தனது உடல் மீது இருக்கிற சில அடிப்படை உரிமை களை மறுக்கிற இந்த நேர்மையற்ற, நியாயமற்ற சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்யும், ஒழித்துக்கட்டும் என்று மாதர் சங்கம் எதிர்பார்க்கிறது. 

தமிழில்: அ.குமரேசன்




 

;