articles

img

‘இந்தியா ஓர் இந்து தேசமாக ஆக முடியாது’ இடித்துரைக்கிறார் தேசத் தந்தை - தி.வரதராசன்

இந்திய விடுதலைக்கு ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டி ருந்த மிதவாதத் தலைவர்களிடமிருந்து மாறுபட்டு  காந்திஜிதேச விடுதலைக்காக வெகுமக்கள் இயக்கத்தையே உருவாக்கினார். 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய காந்திஜி இந்தியாவின் பொதுவாழ்க்கையில் திட்டவட்டமாக ஈடுபட ஆரம்பித்தார். தீண்டாமைக்கும் நிறவெறிக்கும் எதிராகத் தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்ட வடிவங்களை இந்தியாவிலும் பிரயோகித்தார். தென்னாப்பிரிக்காவில் காந்திஜி தமது இயக்கத்தின் குரலாக ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பித்தாரென்றால் இந்தியாவில் ஹரிஜன், யங் இந்தியா ஆகிய இரண்டு பத்திரிகைகள் ஆரம்பித்தார்.

பத்திரிகை ஒரு மகாசக்தி!

“இந்தியன் ஒப்பீனியன் இல்லமற் போயிருந்தால் சத்தியாக்கிரகம் சாத்தியமில்லாமற் போயிருக்கக்கூடும். சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நம்பிக்கையான விவரங்க ளையும், தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உண்மை யான நிலைமையையும் அறிவதற்கு வாசகர்கள் இந்தப் பத்திரிகையை ஆவலுடன் எதிர்நோக்கினர். பத்திரிகைத் தொழிலின் ஒரே நோக்கம் சேவையாக இருக்க வேண்டும் என்பதை இந்தியன் ஒப்பீனியன் ஆரம்பமான முதல் மாதத்திலேயே அறிந்து கொண்டேன். பத்திரிகை ஒரு மகாசக்தி” என்று தமது சுயசரிதையில் எழுதினார் காந்திஜி. “ஆலைத் தொழிலாளர்களின் முக்கிய வாழ்க்கைப் பிரச்சனைகளை ஏற்றெடுத்தது போலவே விவசாயிகளின் முக்கிய வாழ்க்கைப் பிரச்சனைகளையும் ஏற்றெடுத்து அவற்றுக்குத் தீர்வு காண கிளர்ச்சிகளையும் போராட்டங் களையும் நடத்தி அரசியல் களத்தில் பிரவேசித்தார் காந்திஜி. பீகாரில் சம்பரான் மாவட்டத்தில் பிரிட்டிஷ் முதலாளிகளின் தேவைக்காக நீலச் சாய பயிர் அவுரிச் செடி சாகுபடி செய்தி ருந்த விவசாயிகளுக்கு நிறைய புகார்கள் இருந்தன. அவற்றைத் தீர்த்துவைக்கும் பணியிலிருந்த நண்பர்களின் அழைப்பை ஏற்று காந்திஜி அங்கே சென்றார். தமது தலைமையில் ஒரு  சத்தியாக்கிரகப் போராட்டமும் நடத்தினார். இதுவும், இதைத் தொடர்ந்து குஜராத்தில் கேடா மாவட்டத்தில் நிலவரி உயர்வை எதிர்த்து நடத்திய போராட்டமும் தென்னாப்பி ரிக்காவில் காந்திஜி பரீட்சித்துப்பார்த்த வழிமுறை (சத்தி யாக்கிரகம்) இந்தியாவிலும் பயன்படுத்துவதற்கான முன் மாதிரியாக இருந்தது. இந்த இரண்டு விவசாயப் போராட்டங்க ளுக்கிடையேதான் அகமதாபாத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கும் காந்திஜி தலைமை வகித்தார்.” (நூல்: இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’-அத்தியாயம் 36.)

சாதி-மதக் கட்டுப்பாடுகளை மீறினார்

வைசிய குலத்தின் ஒரு பிரிவாகிய மோத்பனியாவைச் சேர்ந்தவர்கள், கடல் பயணம் செய்யக் கூடாது என்பது குல வழக்கமாக இருந்தது. இந்த சாதிக் கட்டுப்பாட்டை மீறினார்  இளைஞர் கரம்சந்த் மோகன்தாஸ் காந்தி. கப்பல் மூலம் கடல் பயணம் செய்து லண்டனுக்குச் செல்வதில் மிக ஆர்வமுடன் இருந்த காந்தியிடம் சாதி நாட்டாண்மை சேத் என்பவர் ‘வெளி நாடுகளுக்குக் கடலில் கப்பல் பயணம் செய்வதை நமது மதம் அனுமதிக்கவில்லை; நமது சாதி வழக்கமும் அனு மதிக்கவில்லை’ என்று எச்சரித்தார். இதற்குக் காந்தி சொன்ன பதில்: “இங்கிலாந்துக்குச் செல்வது நமது மதத்திற்கு விரோதமானது என்று நான் கருதவில்லை. படிப்பதற்கா கவே நான் அங்கே செல்ல உத்தேசித்திருக்கிறேன்... இங்கி லாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துவிட்டதை நான் மாற்றுவதற்கில்லை.” என்று உறுதிபடச் சொல்லிவிட்டார். சாதி விலக்கம் செய்துவிடுவார்கள் என்று காந்தியின் சகோத ரரும் கவலையுடன் சொல்லிப்பார்த்தார். ஆனால், அதற் கெல்லாம் காந்தி இணங்கவில்லை. அப்போது காந்திக்கு வயது 18. இறுதியில் காந்தி மும்பையிலிருந்து லண்ட னுக்குக் கப்பலில் புறப்பட்டார். 

நிறவெறியை எதிர்த்து

அங்கு 1893-ல் சட்டக் கல்வியை முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பினார். பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதற்கி டையே தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்திய வர்த்தகர் ஒருவரின் வழக்கை நடத்துவதற்காக அவரது அழைப்பின் பேரில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அப்போது தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தியிருந்த நிறவெறி பிரிட்டிஷ் ஆட்சி அங்கு வாழும் இந்தியர்களையும் அந் நாட்டின் கருப்பின மக்களையும் பலவிதங்களில் கொடு மைப்படுத்தியது. இதுகண்டு மனம் வருந்திய காந்திஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து பிரிட்டிஷ் அரசின் அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் நிறவெறிக்கும் எதிராகப் போராடினார். தமது ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையை சத்தியாக்கிரகப் போராட்டத்தின் கருத்து ஆயுதமாகப் பயன்படுத்தினார். 

சேர்ந்து வாழும் கொள்கைக்காக...

காந்திஜி 1910-இல் எல்லா இனத்தவருடனும் சேர்ந்து வாழும் கொள்கையைப் பெரிய அளவில் பரிசோதனை செய்துபார்க்க விரும்பினார். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் அருகில் காலன்பர்க் என்பவர் 1100 ஏக்கர் நிலத்தை வாங்கி காந்திஜியின் செயல்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்காக இலவசமாக வழங்கினார். ஏராள மான இந்தியக் குடும்பங்களும் காந்திஜியும் காலன்பர்க்கும்  அங்குக் குடியேறினர். உலகப் புகழ்பெற்ற மிகச்சிறந்த ரஷ்ய நாவலாசிரியரும் சிறந்த சிந்தனையாளருமான டால்ஸ்டாய் பெயரில் “டால்ஸ்டாய் பண்ணை” என்று அதற்குச் சிறப்புப் பெயர் இட்டார் காந்திஜி. சத்தியாக்கிர கத்தில் ஈடுபட்ட ஆண்கள் சிறைக்குச் சென்றபோது அந்த டால்ஸ்டாய் பண்ணை அவர்களின் குடும்பங்களுக்கெல் லாம் புகலிடமாக அமைந்தது. டால்ஸ்டாயின் அகிம்சை சிந்த னைதான் காந்திஜிக்கு முதல் ஆதர்சமாக அமைந்தது.

ஏழைத் தமிழனுக்கு உதவி

ஒரு தென்னாப்பிரிக்க சம்பவத்தை தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார்: “காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான தெண்டுல்கர் ஒரு சம்பவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: துணி முழுவதும் கிழிந்தபடியும், இரண்டு முன் பல்லுகள் உடைந்த படியும், வாயில் இரத்தம் வழிந்தவாறும் ஒரு தமிழன் தனது தலைப்பாகையைக் கையில் பிடித்தபடி இந்த இளைய பாரிஸ்டரின் (காந்தியின்) முன்னால் நின்று கொண்டிருக் கிறான். இந்தக் காட்சியைப் பார்த்த காந்தி உணர்ச்சி வயப்பட்டார். தலைப்பாகையை வாங்கி காந்தி அவன் தலை யில் வைத்து சமத்துவ உணர்வுடன் பழகுவதற்கு அந்தத் தமிழனை ஊக்கப்படுத்தினார். அந்த ஏழைக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. பாலசுப்பிரமணியம்-இதுதான் அந்த ஏழையின் பெயர். டர்பனில் ஒரு ஐரோப்பியரின் கீழ் நிச்சயிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி அடிமைப் பணி செய்கிற ஒரு வேலையில்  அவன் இருந்தான். ஆதரவற்ற அவனை அவனது ஐரோப்பிய எஜமான் இரத்தம் சிந்தும் வரை அடித்திருக்கிறான்.  காந்தி ஒரு மருத்துவரை வரவழைத்து சான்றிதழ் வாங்கி, காயமடைந்த அவனை ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்றார். பாலசுப்பிரமணியத்தின் எஜமான் தண்டிக்கப்பட வேண்டுமென்பதற்காக அல்ல. அந்த எஜமானனிடமிருந்து அவன் விடுபட வேண்டும் என்பதையே காந்தி விரும்பி னார். நிச்சயிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி அடிமைப் பணி செய்கிற வேலைக்காரன் ஒரு சாதாரண அடிமையைப் போலவே எஜமானனின் சொத்து ஆவான். பாலசுப்பிரம ணியத்தை அவனது எஜமானனிடமிருந்து விடுவித்து மற்றொரு எஜமானனிடம் மாற்றியதில் காந்தி வெற்றி பெற்றார். அந்த பாலசுப்பிரமணியன் விஷயத்தில் நிகழ்ந்த சம்பவம் மதராஸ் (சென்னை) வரையுள்ள ஒப்பந்த வேலைக் காரர்களின் செவிக்கு எட்டியது. அவர்களெல்லாம் காந்தி யைத் தங்கள் நண்பராகவே மதிப்பிட்டனர்.” 

தமிழ் கற்றுத்தந்தார்!

தென்னாப்பிரிக்காவில் அன்றைய ஆப்பிரிக்க மக்கள் தொகை 60 லட்சம்; ஐரோப்பியர் மக்கள் தொகை 12 லட்சம். இந்தியர்கள் 2 லட்சம். ஏற்கெனவே தமிழ் கற்றிருந்த காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தமிழ்க் குழந்தைகளுக்கு இலக்கணத்துடன் தமிழ் கற்றுத்தந்தார். தமது பெயரை தமிழில் ‘காந்தி’ என்று எழுதுவார்!  “இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணில் வாழ்கிற அனைவருக்குமே இந்துஸ்தான் சொந்தமானது. அதனால் தான், இந்துஸ்தான் எந்த அளவு இந்துக்களுக்குச் சொந்த மோ அந்த அளவு பார்ஸிகளுக்கும் கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இதர மக்களுக்கும் சொந்தமானது. சுதந்திர இந்தியா ஓர் இந்து தேசமாக ஆகமுடியாது. மாறாக, அது இந்திய தேசமாக இருக்கும். அது எந்தவொரு பெரும் பான்மை மதத்திற்கோ, பெரும்பான்மை சமூகத்திற்கோ உரியதாக ஆகாது. மாறாக, மதவேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்குமானதாக இருக்கும். மதம் ஒரு தனிப்பட்ட விஷயமாகும். அதற்கு அரசியலில் இட மில்லை.”என்று காந்திஜி ‘ஹரிஜன்’ மாத இதழில் (1942 ஆகஸ்ட் 9) எழுதினார். மேலும், “ஒரு தேசத்தின் மக்கள் அனைவருமே ஒரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட வர்களாக இருந்தாலும் தேசத்திற்கு மதம் அவசியமில்லை” என்றார் காந்திஜி. தாம் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தையும் அரசாங்கத்தையும் பிரித்துவைப்பேன் என்றார். சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறினார். “தந்தை, அல்லது பிதா என்ற சொற்களை அவற்றின் நேர் அர்த்தத்தில் மட்டும்  பயன்படுத்துவதென்றால் எந்த நூற்றாண்டில் பிறந்தவராக இருந்தாலும் ஒரு மனிதர் தாம் வாழும் தேசத்தின் ‘தந்தை’ ஆக முடியாது. இந்நிலையில் ‘தேசத் தந்தை’ என்கிற கௌரவமே அர்த்தமற்றதாக ஆகி விடும். எனவே, பல நாடுகளிலும் சுதந்திரப் போராட்டத் தலை வர்களுள் மிகவும் புகழ்பெற்ற ஒருவரை ‘தேசத்தந்தை’ யாகச் சிறப்பிப்பது உண்டு. அந்த அர்த்தத்தில் மகாத்மா காந்தி தேசத் தந்தைதான் என்பதை பாஜக-வினர் போன்ற இந்து தேசியவாதிகள் தவிர மற்ற அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்” என்று தோழர் இஎம்எஸ் கூறினார்.

காந்திஜியும் லெனினும்

ரஷ்யப் புரட்சித் தலைவர் லெனின் காந்திஜி மீது பேரார் வம் காட்டினார். இவர்கள் இருவரின் உலகக் கண்ணோட் டங்கள் வேறுபட்டிருந்தாலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் பெருமதிப்பு வைத்திருந்தனர். லெனின் காந்திஜியை  தேசிய விடுதலை இயக்கத்தின் மாபெரும் தலைவராக-தீவிர தேச பக்தராக மதிப்பிட்டார். காந்திஜியும் லெனின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். 1928-ல் காந்திஜி ரஷ்ய போல்ஷ்விக் குகளை (கம்யூனிஸ்ட்டுகளை) பாராட்டி எழுதினார். “போல்ஷ் விக்குகளின் பதாகைக்குப் பின்னால் எண்ணற்ற ஆண்க ளின், பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற  உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்க ளின் இலட்சியத்திற்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது” என்று நம்பிக்கையுடன் மனதார வாழ்த்தினார் காந்திஜி.

ஆலயப் பிரவேசம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தினுள் சென்று வழி படுவதற்கு தாழ்த்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படாததற்கு காந்திஜி மிக வருந்தினார். இது மகாக் கொடுமை என்றார். 1937-இல் தமிழ்நாட்டுப் பயணமாக மதுரைக்கு வருகை தந்த காந்திஜி மீனாட்சி அம்மன் ஆலயத்தினுள் செல்ல மறுத்துவிட்டார். வைதீகவாதிகளின், வர்ணாஸ்ரமவாதி களின் எதிர்ப்பை மீறி 1939 ஜூலை 8 அன்று காலை அரிசன பக்தர்களை அழைத்துக் கொண்டு ஆலயப்பிரவேசம் நிகழ்ந்தது. அவர்கள் அனைவரும் அம்மனை வழிபட்டனர். இதை அறிந்த காந்திஜி மனம் மகிழ்ந்து வெகுவாகப் பாராட்டினார்.

தொழிற்சங்கத்திற்கு அடிக்கல்

1927-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வருகைதந்த காந்திஜி திருச்சி பொன்மலைக்கும் வருகைதந்தார். அங்கே தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் மத்திய தொழிற் சங்கக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். “தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் மத்திய சங்கம், பொன்மலை. மகாத்மா காந்தியடிகளால் அஸ்திவாரக்கல் நாட்டப்பெற்றது 17.9.1927. டி.கிருஷ்ணசாமி பிள்ளை, தலைவர்”- என்று அந்த நினைவுத் தூணில் தகவல் பதிக்கப்பட்டுள்ளது. 

காந்திஜி வாசித்த கவிதை

விவசாயியை உலகப் பிதாவாக உச்சத்தில் உயர்த்துகிற ஒரு கவிதையைப் பற்றிப் பெருமையுடன் கூறுகிறார் தேசப் பிதா காந்திஜி: “விவசாயியை உலகப் பிதாவாகச் சித்தரிக் கும் ஒரு கவிதையை நான் சில வருடங்களுக்கு முன் வாசித் தேன். எல்லாமும் வழங்குகிற விநியோக அதிகாரி கடவுள் என்றால் விவசாயி அந்தக் கடவுளின் கைகளாவார்” என்று 1946 ஆகஸ்ட் 25-ஆம் தேதிய ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதினார் காந்திஜி.   “நிலத்தின் உண்மையான உரிமையா ளர்கள் விவசாயிகள்தான் என்று நான் சிறுவயதில்  பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்தேன்” என்றும் எழுதினார்.

காந்திஜியின் ரயில் பயணம்

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தேசத்தை விடுவிப்ப தற்கான அரும்பணியில் இந்தியா முழுவதும் காந்திஜி பயணம் மேற்கொண்டது ரயில் மூலம்தான். அதுவும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில்தான். இத்தகைய ரயில் பய ணத்தைப் பற்றி அவர் இவ்வாறு எழுதினார்: “ரயில்வே அதி காரிகளுக்கு மூன்றாம் வகுப்புப் பயணிகளின் சௌகர்யங்க ளைப் பற்றி அக்கறையில்லை. பயணிகளே யோசித்துப் பார்க்காதபடி மாசு நிறைந்துள்ளது, சுத்தத்தை எதிர்பார்ப்ப வர்களுக்கு மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் சகிக்க முடி யாதுதான். உடன் பயணிப்பவர்களின் சௌகரியமோ சுகமோ பொருட்படுத்தாமல் ரயிலில் எச்சில் துப்புவது, எந்தச் சமயத்திலும் எங்கு வைத்தும் புகைப்பது, உரக்கப் பேசுவது, உரத்த சப்தமிட்டுக் கூப்பிடுவது, ஆபாசப் பேச்சுக்கள் பேசுவது போன்ற பழக்கங்கள் நிறைய உண்டு. இதற்கு ஒரு தீர்வு உள்ளதென்று நான் பார்க்கிறேன். சிறந்த கல்வியாளர்கள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதை வழக்கமாக்க வேண்டும். தேவையான சமயங்களி லெல்லாம் அதிகாரிகளிடம் சென்று அறிவுறுத்த வேண்டும். அவர்களைச் சும்மா இருக்க விடக்கூடாது. சொந்த வசதிக்காக லஞ்சம் கொடுப்பதையோ, மற்ற நியாயமற்ற வழி களை அங்கீகரிப்பதையோ, ரயில்வே சட்டங்களுக்கு மாறாக யாரேனும் செயல்படுவதையோ தடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பயணம் கண்ணியமாக, நன்றாக இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.” காந்திஜியின் ரயில் பயணத்தில் ஒரு சுவையான சம்பவம்: எவரும் அறியாத வண்ணம் ரயில் பயணம் செய்த காந்திஜியும் அவர் மனைவி கஸ்தூரிபா அம்மையாரும் பத்து நாட்கள் ரயில் பயணத்திற்குப் பிறகு மதராஸ் (சென்னை) வந்து சேர்ந்தனர்.மதராஸ் கிருஸ்தவக் கல்லூரி யில் ‘மதராஸ் சர்வீஸ் லீகின்’ ஆண்டு விழாவில் பேசுவ தற்காக காந்திஜியை வரவேற்று அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாகிய மாண வர்கள் ரயிலில் முதலாம் வகுப்புப் பெட்டியில் காந்திஜியைத் தேடினர். அங்கு காந்திஜி இல்லை. அடுத்து இரண்டாம் வகுப்புப் பெட்டியிலும் ஏறி தேடினர். அங்கும் காந்திஜி இல்லா ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏமாற்றத்துடன் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குள் ஏறிப் பார்த்தபோது, நான்கு நாட்கள் ரயில் பயணத்தில் சோர்வடைந்து முழுவதும் தூசி மூடிய ஆடைகளோடு காந்திஜியும் கஸ்தூரிபாவும் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு பதற்றத்துடன் வியப்படைந்த னர். ‘இவர்தான் காந்திஜியா!? பத்து நாட்களுக்கு முன்பு பனாரஸில் பிரபுக்களுக்கு முன்னால் அக்னியாய் வார்த்தைகளை வீசியவர்..!’ மாணவர்களின் மனம் ஆச்சரி யத்தால் திக்குமுக்காடியது. ரயில் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த குதிரை வண்டியில் காந்திஜியையும் கஸ்தூரி பாவையும் அமரவைத்தனர். பிறகு குதிரைகளைக் கழற்றி விட்டு அந்த மாணவ இளைஞர்களே குதிரைகளைப் போல் வண்டியை இழுத்துச் சென்றனர்! மறுநாள் கல்லூரியில் காந்திஜி உரையாற்றிவிட்டுப் பிறகு சொன்னார்: “ ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டி யில் பயணம் செய்யும் இளைஞர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அறிவுரை ஒன்று உண்டு. ஆட்கள் அணிந்தி ருக்கும் ஆடையைக் கண்டு, அவர்கள் உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று கருதக்கூடாது. அவ்வாறு கருதினால் நீங்கள் சமூக சேவைக்குத் தகுதி அற்றவர்களாக ஆவீர்கள்.”  

‘இந்து டீ’,  ‘முஸ்லிம் டீ’

காந்திஜி ரயிலில் பயணம் செய்யும்போது திருச்சி கோல்டன் ராக் ஒர்க்ஷாப்பில் 259 தொழிலாளர்கள் கையெ ழுத்திட்டு காந்திஜியிடம் விண்ணப்பம் ஒன்று அளித்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகள் அதில் நிறைய சொல்லப் பட்டிருந்தன. ரயிலிலும் ரயில் நிலைய நடைமேடைகளிலும் இந்து டீ என்றும், முஸ்லிம் டீ என்றும் தனித்தனியாக விற்ப தற்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர். இது காந்திஜிக்கு கடும் கோபமூட்டியது. இது பற்றி 1946-இல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதினார். “ரயில் பயணம் என்பது கெட்ட பழக்கங்களை அதிகரிப்ப தல்ல. அதை இல்லாமற் செய்வதாக ரயில் பயணங்கள் இருக்க வேண்டும். மதவாதம் குறைந்தபட்சம் ரயில்வே நிலையங்களில் சட்டவிரோதமாகும். மதநல்லிணக்கம்,  தீண்டாமையைத் தவிர்ப்பது, சகிப்புத்தன்மை, தூய்மை, நீதி போதனை ஆகிய இவையெல்லாம் இந்தியர்களுக்குக் கற்றுத்தருகிற இடம்தான் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டி” என்று உறுதியாக நம்பினார் காந்திஜி. (‘மாத்ருபூமி’ என்ற மலையாள நாளிதழ் 14.3.2016)

தண்டி யாத்திரையும் - காந்திஜி கைதும்

மக்கள் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் உப்பு மீது பிரிட்டிஷ் அரசு அநியாயமாக வரி விதித்தது. இந்த உப்புச் சட்டத்தை மீறவேண்டும் என காந்திஜி முடிவு செய்தார். அதன்படி 1930 மார்ச் 12 அன்று தமது 81 சீடர்களுடன் சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து அரபிக்கடலின் கரையோரமாக இருக்கும் தண்டிக்கு 241 மைல் தூரம் பாதயாத்திரை மேற் கொண்டார். இதில் வடமாநிலங்கள் மற்றும் தெற்கில் தமிழ் நாடு, கேரளம்  வரை மொத்தம் 24 மாநிலங்களிலிருந்து காந்திஜியின் சீடர்கள் பங்கேற்றனர். வழிநெடுக யாத்தி ரையில் மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5 அன்று அனைவரும் தண்டியை அடைந்தனர். மறுநாள் காலை 6.30 மணிக்கு உப்பங்கழியிலிருந்து காந்திஜி கீழே குனிந்து கைநிறைய உப்பை அள்ளி எடுத்து பிரிட்டிஷ் அரசின் உப்புச் சட்டத்தை மீறினார்! காந்திஜியின் தண்டி யாத்திரை இந்தியாவெங்கும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. நள்ளிரவில் காந்திஜி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்திஜி சர்க்காவும்  மோடிஜி சர்க்காவும்

‘காதி வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் கமிஷ’னின் வருடக் காலண்டரிலும் டைரியிலும் ஒவ்வோர் ஆண்டும்  சர்க்காவில் நூல் நூற்கிற காந்திஜியின் படம்தான் போடப்பட்டுவந்தது. ஆனால், அந்த வழக்கத்திற்கு மாறாக 2017-ஆம் ஆண்டு காந்திஜியின் படத்திற்குப் பதிலாக மோடியின் படத்தைப் போட்டார்கள். ஒரு வேட்டி மட்டுமே அணிந்து சர்க்காவுக்கு முன்னால் அமர்ந்து அமைதியாக நூல் நூற்கிற காந்திஜி யின் படம் எளிமையான வாழ்க்கையின், சுதேசிமயத்தின், அகிம்சையின் அடையாளமாகப் பல தலைமுறைகளாக மக்கள் மனதில் மறையாது இடம்பிடித்துள்ளதாகும். ஆனால், காந்திஜியின் இத்தகைய எளிய தோற்றத்திற்கு மாறாக குர்தாவும், பைஜாமாவும், வெஸ்ட் கோட்டும் அணிந்த தோற்றத்தில் பிரதமர் மோடி சர்க்கா முன் அமர்ந்தி ருப்பதாகக் காலண்டர் படம் இருந்தது. அந்த சர்க்காவும் காந்திஜி சர்க்கா அல்ல - நவீன சர்க்காவாக! இந்தக் காலண்ட ரைப் பார்த்தவர்களின் மனம் அதிர்ந்தது. இதை எதிர்த்து காதி நிறுவன ஊழியர்கள் தங்கள் வாயை கருப்புத் துணி யால் கட்டி கசப்பான மனதுடன் தங்கள் எதிர்ப்பைத் தெரி வித்தனர். பல அரசியல் தலைவர்களும் இத்தகைய காலண்டர் வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்த னர். ‘காந்திஜியின் சர்க்கா நாட்டில் பட்டினி கிடக்கும் ஏழையெளிய அப்பாவி மக்களுக்கு ஒரு வருமானத்திற் கான வழியாக இருந்தது. இப்போது அது ஒரு ஃபோட்டோ வுக்கான கருவியாகிவிட்டது’ என்று மனம் நொந்தார் அவரது கொள்ளுப் பேரன் துஷார்காந்தி. காந்தியின் இதயமெல்லாம் நிறைந்திருந்தது மத நல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் அமைதியான வாழ்க்கையுமே. அதற்காகவே தன்னை அர்ப்பணித்தார். தேசப் பிரிவினையின் போது நவகாளியில் ஒற்றை மனித ராணுவமாய்ச் செயல்பட்டார். இன்றைய ஆட்சியாளர்க ளின் இந்துராஷ்டிர- இந்து தேசமாக்கும் முயற்சியைத் தடுத்திடும் பெரும் பணிக்கு காந்திஜி நாட்டு மக்களுக்கு உத்வேகத்தைத் தருவார்.

 












 

;