மகாகவி பாரதி நினைவு நாள் இன்று. இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய மகத்தான தலைவர்களில் ஒருவர் பாரதி. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதைகளும், பாடல்களும் படைத்திட்ட மகாகவி, 1921 செப்டம்பர் 11 அன்று தனது 39 வயதிலேயே மறைந்தாலும், அவரின் வீரியமிக்க படைப்புகள் மக்கள் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்க வைத்துள்ளது.
பாரதியின் கனவு என்னானது?
ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருத்தல் ஆகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக் கொள்ளுப் பாப்பா
என்ற பாடலும், ஜாதிகள் இல்லையடிப் பாப்பா என்ற பாடலும், இன்றைய சமூகச் சூழல் குழந்தை களுக்கு பொருந்தாமல் செய்துவிட்டது. இன்றைய தினம் குழந்தைகள் 1.பொருளாதார சிக்கல், 2. சாதி, மத ரீதியான தாக்குதல், 3. ஊடகங்களின் தாக்கம் என மூன்று வகையான தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டு இருக்கிறார்கள். இன்றைய சமூகச்சூழலில் குடும்பங்களிலும் பொதுவெளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா? சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், இருப்பதாக குழந்தைகள் உணர்கிறார்களா? மகிழ்ச்சியாக வாழ வேண்டிய பருவம் குழந்தைப் பருவம். ஆனால், வேலையின்மையும் வறுமையும் தாண்டவமாடும் குடும்பங்களால் குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்? குறிப்பாக, பெண் குழந்தைகள் கூடுதலாக பாதிக்கப்படு கிறார்கள்.
வறுமையில் தவிக்கும் குழந்தைகள்
உலக நாடுகளில் அதிகமான குடும்பங்கள் வறுமையில் வாழும் பட்டியலில் இந்தியா முந்திச் செல்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் 3-ல் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கிறார்கள். 42% மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். 7.45% பேர் வேலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை களும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. இந்தியாவில் 17 வயதிற்கு உட்பட்ட 1.50 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்; இதில் 20% குழந்தை தொழிலாளர்கள் ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற விபரங்கள் அதிர்ச்சி யைத் தருகின்றன. கொரோனா தொற்று காலத்தில் மட்டும் 20 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். சிறு வயதிலே தொழிலாளர்களாக மாற்றப்படும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறி யாகிறது.
வறுமையும் வேலையின்மையும் பெண் குழந்தைகளை குடும்பத்தின் சுமையாக பார்க்க வைக்கிறது. அதற்கு வறுமை மட்டுமே காரணம் அல்ல; பாதுகாப்பும், சமத்துவமின்மையும் காரணமாக உள்ளது. இதன் நீட்சியாக, இந்தியாவில் தடை செய்யப்பட்ட குழந்தைத் திருமணங்கள் மறைமுக மாக அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண் துணை இல்லாத குடும்பங்கள், வறுமையில் வாழ்பவர்கள், இடம் பெயரும் தொழிலாளர்கள், மூட நம்பிக்கை கள், சொத்து பிறர் கையில் போகாமல் இருக்க இப்படிப்பட்ட காரணங்களால், அந்த குடும்பங்களின் பெண் குழந்தைகளின் வாழ்வு, சிறு வயதிலேயே திருமணம் என்று சூறையாடப்படுகிறது. இந்தியாவில் 3ல் 2 குழந்தைகள் உடல் ரீதியாக அத்துமீறலுக்கு உள்ளாகிறார்கள். 88.60% மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தலை தடுக்க போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்த வன்முறை முழுமையாக தடுக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்களில் வகுப்பறை, தங்கும் இடங்களில் ஊழியர்கள் மூலம், குடும்பங்களில் உறவினர் மூலம் வன்முறைக்கு உள்ளாகின்றனர். பாதுகாப்பான, நம்பிக்கையான இடங்கள் என்று கருதக் கூடிய இடங்களே பாதுகாப்பற்றதாக இருக்கிறது.
ஊடகங்களின் தாக்கம்
கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் செல்போன் வாயிலாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. எனவே, பாரபட்சம் இல்லாமல் இருப்பவர். இல்லாதவர் என எல்லா குழந்தைகளும் செல்போன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வகுப்பு முடிந்த பிறகு வெளியில் போக முடியாத சூழலில், செல்போன் மட்டுமே பொழுது போக்காக மாறியது. இந்தக் கால கட்டத்தில் குழந்தைகள் சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் என எல்லாம் மாறிவிட்டது. இன்று வரை அதில் இருந்து குழந்தைகளால் மீள இயலவில்லை. பல குடும்பங்களில் கணவன் குடித்துவிட்டு அடிப்பது, திட்டுவது, வெட்டுவது போன்ற வன்முறைகளை நேரடி யாக குழந்தைகள் பார்க்கிறார்கள். விளம்பரங்கள் மூலமாகவும், திரைக்காட்சிகள் மூலமாகவும் வன்முறை, பாலியல் சார்ந்த காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் நிலை, செல்போன் செயலிகள் வாயிலாகவே கிடைத்து விடும் நிலை உள்ளது. அந்தக் காட்சிகள், குழந்தை கள் மற்றும் வளரிளம் குழந்தைகளின் மனங்களில் நஞ்சையே விதைக்கின்றன.
சாதிய சமூகத்தின் தாக்கம்
சாதி மதத்தின் தாக்கம் காரணமாக குழந்தை களே நடத்தும் வன்முறை அதிகமாகி உள்ளது. கல வரங்கள் நடக்கும் போது குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஒரு புறம். அதில் குழந்தைகளும் ஈடுபடுகிறார்கள் என்பது ஆபத்தான அம்சமாகும். குறிப்பாக, சிறுபான்மை சமூகக் குழந்தை கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகள் இத்த கைய வன்முறைகளால் மன ரீதியாக பாதிக்கப்படு கிறார்கள். பள்ளிக் கூடங்களிலும் இது வெளிப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. வகுப்பறையை சுத்தம் செய்யச் சொல்வது, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது, மாணவர்களை அடையாளப் படுத்திட கைகளில் வண்ண கயிறுகள் கட்டுவது போன்ற சம்பவங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் சில ஆசிரியர்களாலேயே ஊக்குவிக்கப்படு கிறது. அரசாங்கத்தின் மூலமாக சட்டங்கள் போட்டு தடுக்கப்பட்டாலும் மாற்றத்தை ஏற்படுத்த பொது வெளியில் சாதிக் கொடுமை ஒழிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
குழந்தைகளின் தனி உலகம்
இதையெல்லாம் தாண்டி குழந்தைகளுக்கு என்ற ஒரு உலகம் இருக்கிறது. அது கவித்துவமானது. ஏற்றத்தாழ்வற்றது. பாரபட்சம் இல்லாமல் எல்லா குழந்தைகளும் மனித நேயம் மிக்கவர்களாக வாழ வேண்டும். அதற்கு சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் வளர்க்க வேண்டும். குழந்தைகள் படிப்பதற்கே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். குழந்தைகள் என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள்தான் முடிவு செய்கிறார்கள். பள்ளிகள் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களாலும் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படு கிறார்கள். இதனால் பல குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. வேறு திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. குடும்பத்தில் குழந்தை களுக்கும் ஜனநாயக உரிமை உண்டு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். அதற்கேற்ப குழந்தை களுடன் கூடுதலான நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்களை பேச வைத்து கேட்க வேண்டும். அன்றாடம் அவர்கள் சந்தித்த நல்லவை, கெட்டவை என்ன வென்று விவாதிக்க வேண்டும். பெண் குழந்தை களுக்கு பிறரின் தொடுதல் பற்றி (குட் டச், பேட் டச்) விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் பிரச்சனைகளை நாம் தீர்த்து வைப்போம் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை யாக இருந்தாலும் ஒரே மாதிரியாக அணுகுமுறை இருக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற பொறுப்பை பிள்ளைகளிடமே விட்டு விட வேண்டும். இந்த சமூகத்தில் அக்கறை உள்ள ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், நேர்மையான தலைவர்கள் உருவாக அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. குழந்தைகள் தேர்ச்சி பெற வில்லை அல்லது அதிக மதிப்பெண் பெறவில்லை அல்லது தேர்ச்சி பெற முடியாது, இப்படி பல்வேறு கார ணங்களால் வாழ வேண்டிய குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும். வருங்காலங் களில் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றால் குடும்பம், அரசு, சமூகச் சூழல் இவர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். குழந்தைகளை அதிகம் நேசித்த மகாகவி பாரதியின் நினைவு நாளை, குழந்தைகளின் உலகிற்காகவே அர்ப்பணிப்போம்!
கட்டுரையாளர் : தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)