articles

img

சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் மீது ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்

புதுதில்லி, ஜன.28- சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், சத்தீஸ்கர் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) தர்மராஜ் மகாபத்ரா  ஆகியோர் மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடை பெறுவதையொட்டி, ஆர்எஸ்எஸ்/பாஜக மதவெறியர்கள் கிறிஸ்த வர்கள் மீது தாக்குதல்களை நடத்தி மக்கள் மத்தியில் பதற்ற நிலையை  ஏற்படுத்தத் தொடங்கிவிட்டனர். தாக்குதல்கள் நடைபெற்ற இடங்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) தர்மராஜ் மகாபத்ரா, ஆதிவாசி ஏக்தா மகாசபா-வின் மாநிலச்செயலாளர் பால் சிங், நஜீப் குரேசி, வாசுதேவ் தாஸ் ஆகியோரடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் நடந்த விவரங்கள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி நடத்திவரும் மாநில முதல்வர் பூபேஷ் பாகலை கடந்த  ஞாயிறு அன்று சந்தித்து, கடிதம் ஒன்று அளித்தனர். மாநிலத்தில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவ சமூகத்தினர் எதிர்கொண்டுவரும் இக்கட்டான நிலையினை விளக்கி, அவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்கள்  தொடர்பாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியுள்ளனர்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:

சத்தீஸ்கர் மாநிலத்தில் வடக்கு பஸ்தார் மாவட்டத்தில் கான்கர், கொடேகான், நாராயண்பூர் முதலான இடங்களில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப் பட்டிருப்பது குறித்தும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் இந்த மனுவைத் தங்களுக்கு அளிக்கிறோம். நாங்கள் அனைவரும், தாக்குதல் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு ஜனவரி 20-22 தேதிகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித் தோம். அவர்களுக்கு எங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தோம்.  நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்தித்தோம். இதுவரை அங்கேயுள்ள பழங்குடியினர் அனைவருமே அனைத்துத்தரப்பு மக்களுடனும் சுமூக மாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள்  கிறிஸ்தவப் பாதிரியார்கள், தலைமை மத குருமார்கள், பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டா ளர்கள், சத்தீஸ்கர் முற்போக்கு கிறிஸ்தவக் கூட்டணித் தலைவர்கள் முதலானவர்களைச் சந்தித்தோம். கான்கர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், நாராயண்பூர் மாவட்ட ஆட்சியர், கொடேகான் சார் ஆட்சியர் மற்றும் சில அதிகாரிகளையும் சந்தித்தோம்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க  அமைச்சர்கள் குழுவை அனுப்பிடுக

1 தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்திட அரசுத்தரப்பில் எந்தவொரு அமைச்சரோ அல்லது மூத்த தலைவர்களோ அனுப்பி வைக்கப்படவில்லை என்பதை  அறிந்து மிகவும் அதிர்ச்சிய டைந்தோம். சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கூறும்போது அவர்கள் அவை தொடர்பாக மிகவும் குறைத்து மதிப்பிடுவதால்தான் இவை குறித்து தங்களுக்குத் தெரிவிக்கிறோம். குறிப்பாக, தாக்குதலின்போது பெண்களும் குழந்தைகளும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களின் வீடுகள், தேவால யங்கள், உடைமைகள், வாழ்வாதாரங்கள் கடுமையாகச் சேதம டைந்திருக்கின்றன. எனினும் எந்தக் குடும்பத்தினருக்கும் எவ்வித மான இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் ஏற் பட்டுள்ள சேதம் குறித்தும் அரசுத்தரப்பில் மதிப்பிடல் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவும் இல்லை. 

வீடுகளிலிருந்து கட்டாய வெளியேற்றம்

சுமார் 1,500 பேர் தங்கள் கிராமங்களிலிருந்து விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறார்கள். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த வர்கள் இப்போது வலுக்கட்டாயமாக ‘அவர்களின் வீடுகளுக்கு’ செல்லு மாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அரசுத்தரப்பில் உயிருக்கு உத்த ரவாதம் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், இவ்வாறு திரும்பவந்த வர்கள் மீண்டும் தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவினர்களுடனோ அல்லது தேவாலயங்களிலோ தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், தெம்ப்ருகான் (Tembrugaon) கிராமத்தில், நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு டிரக்கில் ஏற்றி, அவர்களின் கிராமத்திற்கு அழைத்துவந்தபோது, அவர்க ளை ஒரு குழு சந்தித்து, ஒவ்வொருவரும் “திலகம்” (“tilaks”) அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்றும், இதன் பொருள், “நீங்கள் மீண்டும் தாய்வீட்டிற்குத் திரும்புகிறீர்கள்” என்று பொருள் என்றும் கூறியி ருக்கிறார்கள். இல்லையேல் கிராமத்திற்குத் திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு சட்டவிரோத நிபந்த னைகளுக்கு அவர்கள் உட்படாததால் இவர்களில் எவரும் இதுவரை தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப ஒப்புக்கொள்ளவில்லை.

ஊரை விட்டு ஒதுக்குதல்

சில கிராமங்களில், இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு  சமூக பகிஷ்கார நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். தீண்டத்தகாத வர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு எதிராக, உயர்சாதியினர் புனிதத்து வப்படுத்தும் சடங்குகள் மேற்கொள்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். எனினும், ஆதிவாசிகள் மத்தியில் அப்படி ஒரு பழக்கம் எப்போதும் இருந்தது கிடையாது. இப்போது ஆதிவாசிகள் சமூகத்தினர் மத்தியி லும் இதனைத் திணித்திருக்கிறார்கள். பொதுமக்களுக்காக உள்ள தண்ணீர் கை-பம்புகளை கிறிஸ்தவ ஆதிவாசிகள் தொடக்கூடாது என்று பல இடங்களில் கூறப்படுகிறது. அவ்வாறு தொட்டார்கள் என்றால், அந்த இடத்தைப் பலமுறை ‘சுத்தப்படுத்த’ வேண்டுமாம். சில கிராமங்களில், கடைக்காரர்கள், கிறிஸ்தவ ஆதிவாசிகளுக்கு எதுவும் விற்பனை செய்யக்கூடாது என மிரட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைக ளும் அளிப்பதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். எனினும், இவ்வாறு  அடாவடித்தனமாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத்  தடுத்திட, அரசு நிர்வாகம் எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ள வில்லை.

 நாங்கள் பாதிப்புக்கு உள்ளான பலரைச்சந்தித்தபோது அவர்கள், காவல்துறையினர் மட்டும் வந்து தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் கொல்லப்பட்டிருப்போம் என்று எங்களிடம் கூறி னார்கள் என்பதை நாங்கள் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களுக்கு, அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை  அனுப்பி, நிலைமைகளை மேற்பார்வையிட வேண்டியது அவசியமாகும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை மதிப்பிட்டு, உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். இது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

கர்ப்பிணிகள் மீதும் தாக்குதல்

2அடுத்து, பெண்களின் அவலநிலை குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. மிகவும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்ட பெண்கள் பலரை நாங்கள் சந்தித்தோம். அவர்களில் இரு கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர். ராம்வந்த் கிராமத்தில் குறைந்தபட்சம் 11 பெண்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மிகவும் கொடூரமான ஒரு சம்பவத்தை அவர்கள் குறிப்பிட்டார்கள். ஒரு குண்டர் கும்பல் மூன்று பெண்களின் ஆடைகளைக் கிழித்தும், தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்று, கடைசியில் முள்புதர்களில் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.  ஆல்மெர் கிராமத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், கிறிஸ்தவர்களின் வீடுகளைத் தாக்கிக் கொண்டிருந்த குண்டர் கும்பலால் அவர் இல்லத்திலிருந்து, காட்டிற்குள் கடத்திச் செல்லப்பட்டி ருக்கிறார்.   எனினும் துணிச்சல் மிகுந்த அவருடைய பாட்டி, கயவர்களைத்  துரத்திச்சென்று, அந்தச் சிறுமியைக் காப்பாற்றி இருக்கிறார். அந்தச் சிறுமியின் உடைகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. இவரை தலையிலும், கைகளிலும், கால்களிலும் கயவர்கள் அடித்து நொறுக்கியிருக்கின்றனர். இவை அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் இருக்கிறது.

தாக்கப்பட்ட தேவாலயங்கள்

3 2022 டிசம்பர் 18 அன்று, ஐ.நா.மன்றத்தால் சிறுபான்மையினர் தினம் என்று கூறப்பட்டிருந்த அன்று,  கொடேகான் மற்றும் நாராயண்பூர் கிராமங்களில் இருந்த தேவாலயங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. கம்புகளை ஏந்தி வந்த கும்பல், தேவாலயங்களுக்குள் புகுந்து, அங்கே தங்களுக்கு எதிரே வந்த ஆண், பெண் அனைவரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இவர்கள் குழந்தைகளையும் விட்டுவைக்க வில்லை.  ஊனமுற்ற விதவையான ஒருவரும் மிகவும் மோசமாக அடித்து நொறுக்கப்பட்டு, அவர் வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். கயவர்கள் வருவதைப்பார்த்து அவர் தன் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்திருக்கிறார். அதை உடைத்துக்கொண்டு இவ்வாறு அவர்கள் செய்திருக்கின்றனர். தன்னுடைய நிலத்தையும், வீட்டை யும் அபகரித்துக்கொள்ள  வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்  என்று அந்தப் பெண்மணி எங்களிடம் கூறினார்.

பெண்கள், குழந்தைகளுக்கு உதவி செய்திடுக 

4 குழந்தைகள் பள்ளிகளுக்குப் பல வாரங்களாகச் செல்லவில்லை. அரையாண்டுத் தேர்வு எழுதுவது மிகவும் சிரமம் என்று  அவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். பெண்களுக்கும் குழந்தைக ளுக்கும் உதவிகள் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசிய அவசரமாகும்.

 5 எங்களுக்கு கூறப்பட்ட முதல் வன்முறை வெறியாட்டம் என்பது கன்கர் மாவட்டத்தில் அமாபேதா ஒன்றியத்தில் குர்ருடோலா என்னு மிடத்தில் நடந்துள்ளது. 2022 நவம்பர் 1 அன்று, சுமார் 50 வயது டைய சட்டிபாய் நரேடி என்னும் பெண்மணி, மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் கிராமத் தலைவர்களின் ஒப்புதலுடன் அவருடைய சடலத்தை, தங்களு டைய சொந்த நிலத்தில் புதைத்துள்ளார்கள். எனினும் ஜன்ஜத்தி சுரக்சா மஞ்ச் (Janjati Suraksha Manch) என்னும் அமைப்பின் சார்பில் ஒரு குழுவினர் இதனை ஆட்சேபித்துள்ளார்கள். 

காவல் நிலையத்திலேயே தாக்குதல்

அவர்கள், “ஒரு கிறித்துவச்சி, கிராமத்தில் இவ்வாறு புதைக்கப் பட்டால், அது ஜன்ஜத்தி தெய்வங்களை அவமதித்ததாகும்” என்றும், “கிராமத்திற்கே பேரழிவைக் கொண்டுவரும்” என்றும் சொல்லி யிருக்கிறார்கள். இவ்வாறு புதைக்கப்பட்டதற்கு எதிராக மக்களை அணிதிரட்டத் தொடங்கினார்கள். காவல் நிலையத்திற்கு முன் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே பேசிய பாஜக-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போஜ்ராஜ் நாக், அந்த சடலம் தோண்டி எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். காவல்துறையினர் இறந்த பெண்ணின் மகன், முகேஷ் நரேடியை காவல்நிலையத்திற்கு வரச் சொல்லியிருக்கின்றனர். அவர் வரும்போது, கும்பல் அவரை அடித்து நொறுக்கியதாகவும், சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் நீ “என்கவுண்ட்டர்” செய்யப்படுவாய் என்று கூறியதாகவும் தெரிய வருகிறது. அவருடன் வந்த அவர் சகோதரி யோகேஷ்வரி உட்பட அவர் குடும்பத்தாரும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றனர்.

சடலத்தை தோண்டி எடுத்து...

நவம்பர் 3 அன்று இரவு, ஒரு கும்பல் சடலத்தைத் தோண்டி எடுத்திருக்கிறது. அடுத்தநாள் காவல்துறையினர் அந்த சடலத்தை 100  கிலோ மீட்டர் தூரத்திலிருந்த கிறிஸ்தவர்களின் கல்லறைக்கு எடுத்துச் சென்று புதைத்திருக்கின்றனர். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமலேயே இது நடந்திருக்கிறது. அவர்கள் அச்சத்தின் காரணமாக கிராமத்தை விட்டே ஓடிவிட்டார்கள். பாஜக தலைவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு அங்கே ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். மாறாக, இந்தக் கயமைத்தனத்தில் ஈடுபட்ட கயவர்கள் தங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்ற எந்தப் பயமுமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று மாநிலம்  முழுதுமே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் மதத்தின் பெயரில் பழங்குடியின ரைப் பிரித்திட, திட்டமிட்டு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.

ஜன்ஜத்தி அமைப்பின் அட்டூழியம்

6 இதேபோன்று அக்டோபரிலும் கிறிஸ்தவர்கள் மீது மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் நடந்துள்ளதாகவும், ஆயினும் அரசுத் தரப்பில் எவ்விதத் தலையீடும் காலத்தே மேற்கொள்ளப்படவில்லை என்றும் நம்மிடம் சிலர் கூறினார்கள். இதுபோன்று நடைபெற்ற எல்லா சம்பவங்களிலும் ஜன்ஜத்தி சுரக்சா மஞ்ச் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதனுடன் பாஜக தலைவர்கள் தங்களை இணைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.  முன்பு இதே பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது பஜ்ரங் தள் அமைப்பும் மற்றும் சங்கிகளின் பல அமைப்புகளும் தாக்குதல்களை மேற் கொண்டன. இப்போது “ஜன்ஜத்தி” என்ற பெயரில் பழங்குடியினரை மதத்தின் பேரால் பிளவுபடுத்தும் வேலையைச் செய்துகொண்டிருக்கி றார்கள்.  தாக்குதல் ஒவ்வொன்றிலும் பழங்குடியினர் மத்தியில் வேலை செய்யும் பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

தேவாலயம் மீது தாக்குதல்

நாங்கள் சந்தித்த பழங்குடியினரில் சிலர் ஒரு நிகழ்வை எங்களிடம் விவரித்தார்கள். அந்த சம்பவத்தை நாங்கள் சந்தித்த மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தினார். அதாவது, ஜனவரி 1 அன்று கோரா என்னும் கிராமத்தில் இரு தரப்பினர் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இதில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த சம்ப வத்தில்தான் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப் பட்டுள்ளனர்.  இந்த சம்பவம்தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சம்ப வத்திற்குப் பொறுப்பானவர்களில், “இருதரப்பில் இருந்தவர்களும்” கைது செய்யப்பட்டார்கள் என்று எங்களிடம் கூறினார்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனவரி 2 அன்று, நாராயண்பூரில் பாஜகவின் மாவட்டத் தலைவர் தலைமையின்கீழ் ‘ஜன்ஜத்தி சுரக்சா மஞ்ச்’ இந்த சம்பவத்தை “எதிர்த்து” ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது. இந்தக் கூட்டம் நடைபெற்றதைத்தொடர்ந்து நாராயண்பூரில் இருந்த தேவாலயம் மீது குண்டர் கும்பல் தாக்குதல் தொடுத்தி ருக்கிறது.  நாங்கள் அந்த தேவாலயத்திற்குச் சென்று பார்த்தோம். சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன, அனைத்துப் பொருட்களும் சின்னாபின்ன மாக்கப்பட்டிருந்தன. ஜன்னல்கள், கதவுகள் தகர்க்கப்பட்டிருந்தன. இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப் பட்டுள்ள போதிலும்,  இதற்குப் பின்னிருந்து செயல்பட்ட தலைவர்க ளுக்கு எதிராகவும் அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்காக வன்முறை வெறியாட்டம்

இவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று மதவெறியர்கள் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்தில் உண்மை எதுவும் இல்லை. அதிகாரிகள் அளித்த கூற்றுகளின்படி, இதுவரை எவரொருவரும் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை. இந்த ஆண்டின் இறுதியில் இம்மாநிலத்தில் சட்டமன்றத் திற்கான தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதால், இந்த வன்முறை வெறியாட்டங்களுக்குப்பின்னணியாக ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரல் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

7 நாங்கள் பழங்குடியினரின் பல்வேறு தரப்பினரைச் சந்தித்தோம். அவர்கள் அனைவருமே எங்களிடம், வன உரிமைகள் சட்டம் இங்கே அமல்படுத்தப்படவில்லை என்று கோரி தங்களின் ஆழ்ந்த கவ லையை எங்களிடம் கூறினார்கள். இவர்களின் நியாயமான கோரிக்கை களை, நாங்கள் சந்தித்த அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம்.

2 -இரும்புத் தாது சுரங்கம்

நாராயண்பூரில் இரு இரும்புத் தாது சுரங்கம் கொண்டு வந்திருக்கி றார்கள். இதனை பழங்குடியினர் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கி றார்கள். அங்கேயுள்ள கிராம சபைகளின் கருத்துக்களைப் பெறாமல், அரசாங்கம் இந்தத் திட்டங்களை அமல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கி றது. இது மிகவும் ஆட்சேபகரமானது. இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவரும்போது அங்கேயுள்ள கிராம சபைகளின் கூட்டங்களை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின்படி கட்டாயமாகும். இத்திட்டங்க ளுக்கு எதிராகப் பழங்குடியினர் ஒன்றுபட்டு நின்று போராடி வருவதை பலவீனப்படுத்த வேண்டும் என்பதும் இப்போது மதவெறி அடிப்படை யில் நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்களுக்கு ஒரு காரண மாகும்.   இந்த அரசாங்கம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு நாங்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை கள் எடுப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  இந்தக் கடிதத்தில் தர்மாஜ் மகாபத்ரா, ஆதிவாசி ஏக்தா மகாசபா வின் மாநிலச்செயலாளர் பால் சிங், நஜீப் குரேசி மற்றும் வாசுதேவ் தாஸ் முதலானவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.      (ந.நி)










 

;