articles

img

முழங்குவோம்! வேலை எங்கள் பிறப்புரிமை! - எஸ்.கார்த்திக்

கண்ணியமிக்கதோர் வாழ்வை நாட்டின் குடிமக்கள் அனைவரும் பெறுவது நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. தேசத்தில் பிறந்த  அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதில் துவங்கி தனிமனித சுதந்திரம் வரை ஏராளமான உரிமைகள் சட்டமாக்கப்பட்டு நடைமுறையாக்கப்பட்டு வரு கின்றன. அவற்றில் மீறல் நிகழ்கிற போதெல்லாம் நீதிமன்ற அமைப்புகள் அவற்றை நிலைநிறுத்து வதற்கு முயற்சி செய்கின்றன.  இன்றும் பல உரிமைகளை நாம் பெற்றுள்ள போதி லும், ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை அரசின் பொறுப்பு என்பது இன்று வரை உரிமையாக்கப்பட வில்லை. தேசம் அடிமைத்தனத்தில் இருந்து எழுந்து  75 ஆண்டுகள் நிறைவுபெறப் போகும் நிலையிலும் ஆண்டோரோ, ஆள்வோரோ அது குறித்து எக்கவலையும் கொள்வதாக இல்லை. ஆனால் தேசத்தில் விடுதலைக்கனல் பற்றிய கனம் துவங்கி இன்று வரை இடதுசாரி அமைப்புகள் மட்டுமே முன்வைக்கும் பெரும் முழக்கமாக “ வேலையை உரிமையாக்கு” என்னும் முழக்கம் நிற்கிறது. 

இன்றைக்கும் இந்தியாவில் இருக்கும் எந்த பெரும் அமைப்புகளோ, அரசியல் இயக்கங்களோ, மாற்று  அரசியல் என்று சொல்லிக் கொண்டே நவதராளமயம் பேசும் இயக்கங்களோ பேசத் தயங்கும் - பேச  மறுக்கும் பேசு பொருளாகவே “வேலை உரிமை” இருக்கிறது. தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒரு வேலைவாய்ப்பு என்பது போட்டித் தேர்வுகளென்னும் பேரோட்டத்தில் முந்தும் திறன் கொண்டோருக்கான வழியாக உருவெடுத்துள்ளது. வேலைவாய்ப்பு அலு வலகங்களின் உருவாக்கமும் அதன் நோக்கமும், அதன் அடுத்த கட்ட பரிமாணத்திற்கான திட்டமிட லின்மையுமே இதற்கான பெரும் காரணிகள். தொடர்ந்து மிகத் தெளிவான முறையில் வேலை  உருவாக்கமோ, வேலை வாய்ப்போ தனி ஒரு மனி தனின் செயல்பாடுகள் குறித்த தெளிவு என்பதாக  முன்வைக்கப்படுவதும், அதை நம்மில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்வதுமே உலக மயத்தின் ‘உன்னத’ வடிவம். எப்போதும் எல்லாக்  காலத்திலேயுமே அரசின் கைகளில் வேலை வாய்ப்புகள் இல்லை என்பதும், பெரும் மக்கள் தொகைக்கு எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை அரசு மட்டுமே உருவாக்க முடியும் என்பதுமே ஆகப்பெரிய மாயைகள். 

ஐநாவின் மனித உரிமைகள் குறித்த ஆவணம் முதல் இந்தியாவின் அரசியல் சாசனம் வரை ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் வேலையை செய்ய லாம் என்பதை மிகத் தெளிவாகவே சொல்கின்றன. ஆனால் அந்த வேலைவாய்ப்பு உருவாக்கத்தை யார் செய்வார்கள் என்பதை மிகச் சரியாக சொல்ல மறந்தே செல்கிறது.  இன்றைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள ‘2020ல் உலக வேலை வாய்ப்பும் - சமூக வெளிப்பாடுகளும்’ என்னும் ஆய்வறிக்கை தருகின்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருபவையாக இருக்கின்றன. உலகப் பொருளாதாரம் சந்தித்து வரும் மந்த நிலை, வேலைவாய்ப்பில் உலக அளவில் ஒரு பெரும் தேக்கத்தை உருவாக்குவதாகவும் இந்த புதிய  நிலைமை வேலைவாய்ப்பினை ஒருவர் அணுகு வதையே சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது எனவும் கூறுவது உலகிற்கோர் எச்சரிக்கையே.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அது கொண்டுள்ள நோக்கங்களின் அடிப்படையில் 2030ல் அனைவருக்கும் கண்ணியமிக்கதோர் வேலை  என்னும் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைய முடியாது எனத் தெரிவிக் கிறது. உலக அளவில் தேசங்களின் மக்கள்தொகை உயர்விற்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்குமான விகிதம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 4.4 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறுகிறது. இந்தநிலை  அது வகைப்படுத்துகின்ற ஓரளவு நடுத்தர வரு மானத்தை வழங்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா போன்ற நாடுகளை மிகவும் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டுகிறது.  இன்றைய நிலையில் ஒட்டுமொத்தமாக உலக அளவில் 15 முதல் 25 வயது கொண்ட இளைஞர்களில் படித்து முடித்த 69.6 கோடி இளைஞர்களில் 42.9 கோடி பேருக்கு மட்டுமே ஏதோ ஒரு வகையில் வேலை வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடுகிறது. சுமார் 26.7 கோடி  இளைஞர்கள் எவ்வித வேலையும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். இன்னும் 50.9 கோடி இளைஞர்கள் படித்துக் கொண்டோ அல்லது ஏதாவது ஒரு பயிற்சியிலோ இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வறிக்கை. இது உலகம் சந்திக்கக்கூடிய பெரும் சவாலாக மாறி நிற்கிறது.  

இந்த பெரும் படை ஒவ்வொரு தேசத்தின் பெரும்  கனவுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இப்படியான வேலைவாய்ப்பற்ற பெருங்கூட்டம் தான் உலக போதைப் பொருள் சந்தைக்கான தேவையாக இன்று மாறி நிற்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் 2017 பிப்ரவரியில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10 வது அகில இந்திய மாநாட்டு தீர்மானம், இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 7 பேர் போதை பழக்கங்களால் தற்கொலை செய்பவர்களாக இருக்கின்றனர் என்று கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தது. ஒன்றிய சமூகநல அமைச்சகம் தெரிவிக்கிற தகவல்களின் அடிப்படையில், சுமார் 40 லட்சம் குற்றங்கள் போதைப் பொருள் பயன்பாடுகளால் நிகழ்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் 16 முதல் 35 வயதுடையோரே இத்தகைய போதைக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இப்படியான குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு ஒரே வழி கண்ணியமான வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துவதே; அதனை ஒன்றிய - மாநில அரசுகள் செய்ய முன்வர வேண்டுமென அத்தீர்மானம் வலியுறுத்தியது.  சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளி யிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், அதிகபட்ச மான வேலைவாய்ப்பினை குடிமக்களுக்கு வழங்குகிற நாடுகளின் பட்டியலில் கடைசி 30 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருப்பது பெரும் வேதனை. இந்தியா வெறும் 43.9% வேலைவாய்ப்பு வாய்ப்புகளையே தனது மக்களுக்கு தருவதாக அந்த அறிக்கை தெரி விக்கிறது. அருகில் இருக்கும் நேபாளம் கூட 77% வேலை வாய்ப்பு வாய்ப்புகளை வழங்கி முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறது. பெரும் மக்கள் தொகை யினை வேலைவாய்ப்பின்மைக்கான காரணியாக ஓர்  அரசு கடந்து செல்வது ஏற்க முடியாதது . மனித வளமும், மனிதவள நிர்வாகமுமே அசைக்க இயலாத பெரும் வெற்றிகளை உலகில் உருவாக்கியுள்ளன என்பதே வரலாறு.

எனவே தான் இந்தியாவின் குடிமக்கள் அனை வருக்கும் வேலையை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் கொல்கத்தாவில் 2022 மே 12 முதல்  15 வரை நடத்தியுள்ள தனது 11வது அகில இந்திய மாநாட்டின் முதன்மை முழக்கமாக வைத்திருக்கிறது.  நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை களில் ஒன்றாக வேலை உரிமை உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் யார் எங்கும் தொழில்களை செய்யலாம் என்பது உரிமையாக இருப்பது போல், இந்தியர் அனைவருக்கும் மதிப்புமிக்கதோர் வேலை அரசின் கடமை என்பது சட்டமாக்கப்பட்டு அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். நமது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு குடிமக்களுக்கான வாழ்வுரிமையைப் பற்றி பேசுகிறது. அதன் உட்பிரிவு கள் சுற்றுச் சூழல் உரிமை, தனிமனித பாதுகாப்பு என ஏராளமானவற்றை பேசுகிறது. ஆனால் ஒருவரின் வாழ்வுரிமைக்கான அடிப்படையான மதிப்புமிக்கதோர் வேலை குறித்து இதுவரை எந்த சட்டமும் உருவாக்கப்படவில்லை. இந்தியாவில் இதுவரை அதிகம் விவாதத்திற்கும் மாற்றத்திற்கும் உள்ளான அரசியல் அமைப்பின் 21வது பிரிவு கூட வேலையை வாழ்வுரிமையின் ஒருபகுதியாகக்கூட கருத்தில் கொள்ளாமல் கடந்து சென்றுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.வேலைக்குச் சேர்ந்த பிறகு உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள், சமவேலைக்கு சம ஊதியம் போன்றவை எல்லாம் சட்டமான தேசத்தில் வேலை அடிப்படை உரிமை என்ற சட்டம் இல்லாதது வெட்கக்கேடானது. 

ஐந்தாண்டுத் திட்டங்கள் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டது முதல் அது குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்டு முன்னேறி வந்தது. அவற்றில்  பல பயன்களை தேசம் பெற்றது என்பது மறுப்பில்லாத உண்மை. ஆனால் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்  துவங்கி பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் வரை  அனைத்திலும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது அரசாங்கங்களால் ஒரு முக்கிய குறிக்கோளாக முன்வைக்கப்பட்டது. அதில் முதல் 15 ஆண்டுகளில் குறிப்பிட்ட வெற்றி கிடைக்காத நிலையில் 11 ஆம்  ஐந்தாண்டுத் திட்டம் 700 லட்சம் வேலைவாய்ப்பு களை உருவாக்குவது என்ற இலக்கினை கொண்டு முன்னிறுத்தப்பட்டது. ஆனால் அதுவும்  தோல்வியையே தழுவியது. 25 ஆண்டுகள் அரசு இலக்கு நிர்ணயித்தும் கூட வேலைவாய்ப்பின்மைதான் உயர்ந்ததே தவிர, வேலைவாய்ப்பு உயரவில்லை. அரசு நிர்ணயிக்கும் லட்சியங்களை அதுவே நினைத்தாலும் அடையாமல் போனதற்கு இந்தியாவில் அனைவருக்கும் வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படாததும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் ஆளும் வர்க்கம் பற்றி நிற்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுமே காரணம். தேசம் நேர்கொண்ட பெரும் சவாலான கல்வி இடைநிற்றலை தவிர்க்க அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் வழிகாட்டியது. சட்டமாகாத எதுவும்  நிலைப்பதற்கில்லை என்பதற்கு இதுவே ஒரு உதா ரணம். அனைவருக்கும் கல்விச் சட்டம் என்பதற்கு கூட முதலாளித்துவத்தின் தேவை என்பதும் ஒரு காரணமாக இருந்தது. ஏனெனில் குறைந்தபட்ச கல்வி அறிவு பெற்ற உதிரித் தொழிலாளிகள் அதன் கெட்டித்தன்மைக்கு தேவைப்பட்டனர். ஆனால் அனைவருக்கும் வேலை என்பதற்கு இந்த அரசு பின்பற்றும் கொள்கைகளுக்கு நேர்முரணானது என்பது நாம் அறிந்ததே. 

ஒரு நல்வாழ்வு ஒரு  மனிதனுக்கும், தேசத்திற்கும் உரு வாக்கும் பயன்கள் எண்ணிடலங்காதவை. அந்நல் வாழ்வு அடிப்படையில் ஒரு சமூகப்பாதுகாப்பான வேலையின் மூலமே சாத்தியமாகிறது. அவ்வேலை உருவாக்கும் மூலதன சுழற்சி, வாங்கும் சக்தி உயர்வு ஆகியவை உள்ளூர் தொழில்களையும், சந்தை களையும் வலுப்படுத்தும் காரணிகளாக அமையும்.  மூலதனத் திரட்சியை விரும்பும் அரசின் கொள்கை கள் நிச்சயம் இதனை ஏற்கப் போவதில்லை. மூலதனக் குவியலை ஏற்கா வாலிபர் சங்கம் போன்ற  இயக்கங்கள் இக்கோரிக்கையில் இருந்து பின்வாங்கப் போவதுமில்லை.  வேலை உரிமை என்பது பெருமக்கள் திரளின் போர்க்குரல்.  மீண்டும் முழங்குவோம். வேலை எங்கள் பிறப்புரிமை!

கட்டுரையாளர் : மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

;