சமீபகாலமாக நீதிபதிகள் சாட்சிகள், ஆதா ரங்கள், அடிப்படையில் சட்டப்படி தீர்ப்பு வழங்குவதைத் தாண்டி தீர்ப்பின் ஒரு பகு தியாக தங்களது சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் தவறில்லை. ஆனால், அந்த சிந்தனைத் துளிகள் கடையரிலும் கடையராக இருக்கிற மக்களின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் உகந்த தாக இருந்தால் நிச்சயமாக அனைவரும் வரவேற்பர். ஆனால், ஆராயாமல் தீர்ப்பு வழங்கினால் என்ன விளை வுகள் ஏற்படும் என்பதற்கு சிலப்பதிகாரம் துவங்கி பல்வேறு சம்பவங்கள் கண்முன் சாட்சியாக இருக்கிறது.
வனம் யாருக்குச் சொந்தம்?
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மார்ச்-4 அன்று மாநிலம் முழுவதும் வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்ப்பதை தடை செய்ய வேண்டுமென்று அதிகாரி களுக்கு அறிவுறுத்தி ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு மாநிலம் முழுவதும் உள்ள மக்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், வனம் வனவிலங்களுக்குத்தான் சொந்தம்; மலைகளில் கால்நடைகள் மேய்வதால் வனவிலங்கு களுக்கு அது தொந்தரவாக இருக்கிறது; எனவே, மாநிலம் முழுவதும் வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க தடைவிதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர். வனம் விலங்குகளுக்குத்தான் சொந்தம் என்று இந்தியாவில் எந்த சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது? பொதுநலவழக்கு போட்டவரின் கோரிக்கை தேனி மாவட்டம் மேகமலையில் மலைமாடுகள் என்ற நாட்டு மாடுகள் மேய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று! ஆனால், தீர்ப்பு மாநிலம் முழுவதும் வனங்களில் எந்த கால்நடைகளும் மேய்க்கக்கூடாது என்று! இதைத்தான் அதிக பிரசங்கித் தனம் என்று மக்கள் கூறுவர். நிச்சய மாக இந்த தீர்ப்பு நடைமுறை சாத்தியமற்றது என்பது பளிச்சென்று தெரியும்.
இயற்கைச் சமன்பாடு
இயற்கை சமன்பாடு என்று ஒரு விதி உள்ளது. ஒரு நாள் ஒரு அரசன் இயற்கையை ரசிப்பதற்காக காட்டிற்கு சென்றான். எல்லாவிதமான விலங்குகளும் வாழக் கூடிய வனம் அது. அழகான மான்கள் துள்ளிக் குதித் தோடியதை கண்டு ரசித்தான். மான்களைப் பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது! மன்னன் ரசித்துக் கொண்டி ருக்கும் போதே ஒரு புலி அந்த மானின் மீது பாய்ந்து இழுத்துச் சென்று கொன்றது. இதைப் பார்த்தவுடன் மன்னனின் மனம் பதைத்தது. உடனடியாக தனது படைவீரர்களை அழைத்து மான்களை வேட்டையா டக்கூடிய புலி, சிறுத்தை ஆகியவற்றை கொல்லுமாறு உத்தரவிட்டான். இப்போது மான்கள் பயமின்றி அவ்வனத்தில் வாழ்ந்தன. அந்த மான்கள் குறிப்பிட்ட ஒரு வகை மலர்களை உண்டு வாழக்கூடியவை. மான்க ளின் எண்ணிக்கை பெருகியது. அதனால் அது உண் ணக்கூடிய மலர்கள் போதுமான அளவு கிடைக்காமல் மான்கள் இயற்கையாகவே பட்டினியால் செத்து மடிந்தன. மன்னனிடம் வந்து மக்கள் இந்த நிலை மையைச் சொன்னார்கள். பிறகு மன்னன் தனது தவறை உணர்ந்து உத்தரவை திரும்பப் பெற்றானாம். மலர்களை மான்கள் சாப்பிடுவதும், மான்களை புலி, சிறுத்தை வேட்டையாடி உண்பதும், இந்த விலங்குக ளை மற்ற விலங்குகள் வேட்டையாடுவதும் வழக்கமான ஒன்று, அதை மாற்ற நினைத்தால் இயற்கை அழிந்து போகும். ஒன்று; மற்றொன்றை சார்ந்து வாழ்வது என்பது தான் இயற்கையானது.
என்ன வழக்கு?
மதுரை நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் 8466/2020 மற்றும் 7852/2020 என்ற பொதுநல வழக்கை திரு.திரு முருகன் (எ) தீரன் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். பிரதிவாதியாக அதிகாரிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்போகும் பயனாளிகள் எவருமே பிரதிவாதி யாக சேர்க்கப்படவில்லை. வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ள செய்தியை பத்திரிக்கையில் பார்த்து விட்டு மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் மற்றும் சில தனி நபர்கள் இந்த வழக்கில் தங்களை பின்னர் இணைத்துக் கொண்டனர். இதனால் மனுதாரரும், அதிகாரிகளும் சேர்ந்து இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும், கால்நடைகள் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்ற ஒருவரை நீதி மன்றம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறுகிறது. அந்த நபரும் பயனாளிகள் எவரிடமும் கருத்துக் கேட்கா மல் அவர்களிடம் உள்ள ஆதார, ஆவணங்களைக் கூட பெற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார். மனுதாரருக்கு சாதகமா கவே அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இத்துடன் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வன உரிமைச்சட்டம்
மற்றொன்று, தீர்ப்பு அளிப்பதற்கு நீதிபதிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கும் சட்டம் 1882ஆம் ஆண்டு வனச்சட்டம், 1972ஆம் ஆண்டு வனஉயிரின பாது காப்புச் சட்டம் ஆகும். இந்த சட்டங்கள் எல்லாம் பாரம் பரியமாக வனத்தில் வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை ஆக்கிரமிப்பாளர்க ளாக சித்தரிக்கிறது என்பதை ஒப்புக் கொண்டு தான், இடதுசாரிகளின் வலுவான வற்புறுத்தலால் “ஆதிவாசி கள் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கு காடுகளின் மீதான உரிமை களை அங்கீகரிக்கும் சட்டம் 2006” என்பது நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக, இந்த சட்டம் தான் “காடு மக்களுக்கு சொந்தம்” என்று சொன்ன முதல் சட்டம். காடுகளின் மீதான மக்களின் பாரம்பரிய உரிமைகளை அங்கீ கரித்த சட்டம். 1952ல் ஜவஹர்லால் நேரு அவர்கள் பழங்குடி கள் குறித்த பஞ்சசீலக்கொள்கையை வெளியிட்டார். அதில் ஒன்று “நிலம் மற்றும் வனத்தில் பழங்குடி யினருக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்பது. இது சட்டமாக்கப்பட அம்மக்கள் 55 ஆண்டு கள் காத்திருக்க வேண்டியிருந்தது. போராடிப் பெற்ற இந்த சட்டத்தை நீதிபதிகள் கணக்கிலெடுத்துக் கொள் ளவே இல்லை. வனஉரிமைச்சட்டம் 2006ல் “தற்போது நடைமுறையில் இருக்கும் வேறெந்த சட்டத்திலும் இது பற்றி கூறப்பட்டுள்ள போதிலும் கூட தற்போது இயற்றப்படும் இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்கிய வகையில் காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கீழ்கண்ட காடுகளுக்கான உரிமையை ஒன்றிய அரசானது இதன் மூலம் அங்கீகரித்து வழங்குகிறது” (பகுதி III, 4 (1)) இதை வழக்கில் கவ னத்தில் கொண்டிருந்தால் இப்படியொரு மோசமான தீர்ப்பு வந்திருக்காது.
மேகமலை வனம்
வனஉரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தான் 2009ஆம் ஆண்டு மேகமலை “ரிசர்வ் பாரஸ்ட்” ஆக அறிவிக்கப்பட்டு 31.05.2010 அன்று தான் நடைமுறை க்கு வருகிறது. பிறகு வனஉயிரின சரணாலயமாக 2011ல் அறிவிக்கப்படுகிறது. பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயத்தையும் இணைத்து ஸ்ரீவில்லி புத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயமாக 2021ல் தான் அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் வந்த போதெல்லாம் தேனி மாவட்ட மக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அமைச்சர்கள், அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மொத் தத்தில் 101657.13 ஹெக்டேர் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கர். இந்தப் பகுதிக்குள் வாழும் மக்கள் எப்படி பிழைப்பது? ஏற்கனவே வனத்துறையினரின் அத்துமீறிய நட வடிக்கைகளால் தினந்தோறும் செத்துப்பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எதிராக வெள்ளை யர்கள் காலத்தில் போட்ட சட்டத்தை எடுத்துக் கொள்ளும் நீதிபதிகள் மக்களுக்கு சாதகமாக நமது அரசாங்கம் போட்ட சட்டத்தை கணக்கிலெடுத்துக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள்? இந்த தீர்ப்பு அம்மக் களை அடியோடு அழித்தொழிக்க வழி செய்கிறது.
வனஉரிமைச்சட்டம் 2006, மேய்ச்சல் உரிமையை அங்கீகரித்திருக்கிறது. மலைகளில் நிரந்தரமாக வாழும் மக்களுக்கு மட்டுமல்லாமல், நாடோடி சமூகமாக கால்நடைகளை மேய்த்து வாழ்பவர்கள், பருவ நிலையையொட்டி தங்கி கால்நடைகளை மேய்ப்ப வர்கள் உரிமையை அது அங்கீகரித்திருக்கிறது. ஆனால், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எவருமே இந்த சட்டத்தைப் பற்றி கடுகளவும் கணக்கி லெடுத்துக் கொள்ளாததன் விளைவு தான் இத்தகைய மோசமான தீர்ப்புக்கு அடிப்படையான காரணம். அனை வரும் கூட்டுச்சேர்ந்து வேண்டுமென்று திட்டமிட்டே இதை தவிர்த்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. வனச் சரணாலயங்களுக்கு உட்பட இச்சட்டம் பொருந்தும். கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் இத்தகைய தீர்ப்பின் போது அரசு வழக்கறிஞர் என்ன செய்து கொண்டிருந்தார்? வனஉரிமைச் சட்டத்தை அமல் படுத்தும் பொறுப்பில் உள்ள பழங்குடியினர் நலத்துறை செயலாளர் இப்போது என்ன செய்ய போகிறார்?
நீதிபதிகள் உணர்வார்களா?
ஏனென்றால், மாநிலம் முழுவதும் மலைகளிலும் மலை அடிவாரப்பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் தான் உள்ளது. வனங்களில் ஆடு, மாடுகள் மேய்க்க தடை செய்தால் மலைகளில் உள்ள மக்கள் அன்றாடம் தங்களின் கால்நடைகளை லாரி களில் ஏற்றி சமவெளிப்பகுதிக்கு கொண்டு வந்து மேய்க்க முடியுமா? அல்லது அனைத்தையும் கொன்று புதைக்கவா? காலங்காலமாக மக்கள் வனங்களில் ஆடு- மாடுகளை மேய்த்து வருகின்றனர். இப்போ தென்ன புதிதாக இவைகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து என்று நீதிமன்றம் பீதியை கிளப்புகிறது. ஆதிவாசி மக்கள் விதைப்பின் போது ஒரு பாடலை பாடுவார்கள்.
“கண்டவர் தின்னது போக
காத்தவர் தின்னது போக
விலங்குகள் தின்னது போக
வெளையனும் வெளையனும் சாமி” என்று! இந்தப் பண்பாட்டை நீதிபதிகளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
நாட்டு மாடுகளைப் பாதுகாக்க...
நாட்டுமாட்டு இனம் இன்றும் அழியாமல் இருப்பது மலைகளில் தான். மலைப்பகுதிகளில் உழவு செய்வ தற்கு மக்கள் இன்னமும் ஏர்மாடு தான் பயன் படுத்துகின்றனர். ஏனென்றால் பல பகுதிகளில் டிராக்டர் கொண்டு செல்ல பாதையே இல்லை. மலைப் பகுதிகளில் இயற்கை விவசாயம் மக்களின் இயல்பான ஒன்றாக இருப்பதற்கு இந்த கால்நடைகள் தான் கார ணம். ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் போராட்டத்தை நடத்தி வரலாற்றில் இடம்பிடித்தது தமிழகம். மலை மாடுகள் என்ற இனத்திலிருந்து தான் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த தீர்ப்பை அமல்படுத்தினால் இந்த இனம் முற்றிலும் அழிந்து போகும். மக்களின் வாழ்வாதாரம் இழந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, அரசு இந்தப் பிரச்சனையில் அவசரமாக தலையிட வேண்டும்.
தமிழக அரசு தலையிட வேண்டும்
வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்ப்பதை தடை செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. இப்போது தமிழ்நாடு அரசு செய்ய வேண்டி யது, இதை எதிர்த்து,
1. அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய் யப்பட வேண்டும். அல்லது அரசு வழக்கறிஞர் மூலம் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதிகளிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
2. வனஉரிமைச் சட்டம் 2006ஐ தீவிரமாக அமல் படுத்தி சட்டத்தில் உள்ள உரிமைகளை மக்களுக்கு வழங்க அரசு தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, பழங்குடியினர் நலத்துறையின் செயலற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
3. தீர்ப்பை நிறுத்திவைக்க இயலவில்லை யென்றால் தமிழ்நாடு அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்புக்கு தடையுத்தரவு பெற வேண்டும்.
4. இந்த வழக்கில், அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்த போது அரசிடம் கலந்தாலோசித்துத் தான் அறிக்கை சமர்ப்பித்தார்களா என்பது குறித்து விசா ரித்து அரசின் சார்பில் விளக்கமளிக்க வேண்டும். ஏனென்றால் சில அதிகாரிகள் நீதிமன்றம் கேட்டவற்றி ற்கு மேலாக அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் தங்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த வும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சட்டப்படியான உரிமையை தக்க வைக்கவும் அணிதிரண்டு போராட முன்வரவேண்டும். அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேய்ச்சல் உரிமையை மீட்டெடுப்போம்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்