articles

img

சாத்தியமாகட்டும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு...

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மழை வெள்ளக் காலங்களில் 40டிஎம்சிக்கும் அதிகமானஉபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்தநீரை கால்வாய் மூலம் வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர்,தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 1958-ல் காவிரி-வைகைகுண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்குரூ.189கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல்நாட்டினார். ஆனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு பிறகு அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த திட்டத்தை பற்றி கவலைப்படவில்லை. தொடர் போராட்டங்களுக்குப்பிறகு மத்தியில் இப்போது இதற்கு ஒரு வெளிச்சம் கிடைத்துள்ளது வரவேற்க தகுந்ததாகும்.

காவிரி நதியை வைகை மற்றும் குண்டாறு நதிகளோடு இணைக்கும் திட்டம் ரூ.3ஆயிரத்து 290கோடியில் நிறைவேற்றலாம்  என்று 2008-ல்திட்டமிடப்பட்டது. இதன் மூலம் புங்கா ஆறு, நப்பண்ணை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினியாறு, கொண்டாறு, வெள்ளாறு, பம்மாறு, விருசுழியாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, உப்பாறு, வைகை, கிருதுமால்நதி, கானல்ஓடை என 15 நதிகளை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதல் பயனாக காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். இதில், கிடைக்கும் உபரி நீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7மாவட்டங்களில் உள்ள சுமார் 8லட்சம் ஏக்கர் பாசன நிலம் விவசாய சாகுபடிக்கு பெரும்அளவில் பயன்பாடு உள்ளதாக இருக்கும். இதன் மூலம் 50லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்; மேலும் நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருக்கும்.         

இந்த 7 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனை தீர வழிவகுக்கும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள இன்னும் சில  மாவட்டங்களும் பயன்பெறமுடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை அரசு நிறைவேற்றுவது மிக எளிதுதான்.ஆனால் இந்த பிரச்சனைக்காக விவசாயிகள் அமைப்பு போராடும் ஒவ்வொரு சமயமும் அதிகாரிகளும் அப்போதைய அமைச்சர்களும் அரசுக்கு பரிந்துரைப்பதாகவே தெரிவித்துவந்துள்ளனர். பிறகு கிடப்பில் போட்டுவிடுகின்றனர். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி விவசாய சங்க அமைப்புகள் பல கட்ட போராட்டத்தை நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில் உள்ளிட்ட இன்னும் சில ஒன்றியங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் எந்த காலத்திலும் தூர்வாரப்படுவதில்லை. தப்பித் தவறி தூர்வாரினால் அரையும் குறையுமாகத் தான் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்று அந்த மாவட்ட மக்கள் புலம்பி தீர்க்கின்றனர். இதன்காரணமாக நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக கடலில் கலக்கும் நிலையுள்ளது.அது மட்டுமில்லாமல் பல்வேறு கிராமங்களில்குடிநீரில் உப்புநீர் கலந்து நூற்றுக்கணக்கானோருக்கு சிறு நீரக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் அங்குள்ள மக்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இத்தகைய பாதிப்பால் 25-க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு புறம் காவிரி நீர் பிரச்சனையால் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் சிறுகுறு விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

 இந்நிலையில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம்  செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.700கோடி நிதி ஒதுக்கப்பட்டு நில அளவீடு உள்ளிட்ட பணிகள் தொடங்கின. திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விராலிமலை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்தது. அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகளும் தொடங்கின.  புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 350மீட்டர் நீளம்110மீட்டர் அகலத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. விவசாய அமைப்புகள் இதை வரவேற்றன. மூன்று முனைகளிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வைகை குண்டாறு இணைப்பை வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் நடை பயணத்திற்கு கிடைத்த வெற்றியாக மக்கள் இதைப் பார்த்தனர். 

 இதே அளவுக்கு மற்றொரு பகுதியான திருச்சி மாவட்டத்திலும் கால்வாய் வெட்டப்பட்டது. இடையில் பாறை குறுக்கிட்டதால் அதை வெடி வைத்து தகர்க்க கனிமவளத்துறை அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் அனுமதி கேட்டு பணிகள் தொடங்குவதற்குள் சட்ட மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. இது புதுகை மாவட்ட விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தியது. தற்போது தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவியேற்ற நிலையில், காவிரி-வைகை- குண்டாறு திட்டப்பணிகள் தொடர்ந்து நடக்கும் என்று முதல் சட்ட மன்றக் கூட்டத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்தார். இதையடுத்து கால்வாய் வெட்டும் பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியை காவிரி-வைகை –குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மற்றும்தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டன. அடுத்து வந்த கருணாநிநி முதல்வராக இருந்த காலத்தில் 40-க்கும் மேற்பட்ட நடுத்தர சிறிய நீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டன. திட்ட முன்னுரிமையில் சில மாற்றங்கள் இருக்கலாம். திட்டங்களை நிறைவேற்றுவதிலும் சில குறைபாடுகள் வரலாம். அதனாலேயே தமிழ்நாடு அரசுக்கோ பொதுப்பணித் துறைக்கோசரியான புரிதல் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொறியாளர்கள் தமிழ்நாட்டு பொதுப்பணித்துறையில் உள்ள பொறியாளர்கள்தான். மிகப்பெரிய திட்டங்களை குறுகிய காலத்தில் குறைந்த செலவில் செயல்படுத்தி இன்றும் நீர் மேலாண்மை செய்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுப் பணித்துறை பொறியாளர்களே. அந்த வகையில் காவிரி –வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகசெயல்படுத்திட முடியும்.அதை வேகப்படுத்திடுவதே இன்றைய தேவையாகும்.

மேலும் தற்போது காலதாமதமாக துவங்கியஇத்திட்டத்தை விரிவுபடுத்தி விரைவாக முடிக்கவும், திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திடவும் தமிழக அரசும் பொதுப்பணித்துறையும்  கவனம் செலுத்திட வேண்டும். பாசன வாய்க்கால் பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இழப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசுபுதிதாக தொடங்கியுள்ள நீர்வளத்துறை அமைச்சகம் மூலம் அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் தலைமையில் குழு அமைத்து நீராதாரத்தை முறைப்படுத்தி   பாசன விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட வேண்டும்.

கட்டுரையாளர்: ஐ.வி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்) 

;