articles

img

பானை நிறைய சோறு இருந்தும் பசிக்கு இல்லை.....

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக இந்தாண்டு குறித்த காலத்தில் ஜூன் 12 ல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் இதுவரை 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டதை விட 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டு 2020 –ல் அதாவது 30 ஆண்டுகளுக்கு பிறகு 1 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு அதிகம். டெல்டா மாவட்டங்களில் 2020 நடப்பாண்டில் நெல் சாகுபடி செய்துள்ள பரப்பளவு 15 லட்சத்து 99 ஆயிரம் ஏக்கர். டெல்டா மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களில் 17 லட்சத்து 64 ஆயிரம் ஏக்கரில் இதுவரை நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் 33 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் எண்ணெய் வித்து, பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பளவை யும் சேர்த்து தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பளவு 57 லட்சத்து 86 ஆயிரம்ஏக்கர் ஆகும் என்றும் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் கூடுதலாகி உள்ளது; அதாவது 4% சாகுபடி அதிகமாகியுள்ளது என்றும் வேளாண்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.இந்த அறிக்கையை பார்க்கும்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு பட்ட மரத்தில் பால் வார்த்ததுபோல் தெரிகிறது. ஆனால், ‘பசிக்கு இல்லை பானை நிறைய சோறு இருந்தும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி பட்டினி, பசி, வறுமை என்ற வட்டத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாக வாழ்ந்து வரும் சோகமான வாழ்க்கையை பார்க்க முடிகிறது. 

வைக்கோல் உருட்டும் வேலை கூட...
விவசாயப் பணியில் இயந்திரங்களை பயன்படுத்தும் நிலையை விவசாயிகள் கையாள முற்பட்டு அது அறுவடைப் பணிகள் வரையிலும், ஏன் வைக்கோல் உருட்டிக் கட்டும் வேலை வரை இயந்திரமயமானதும் மனித உழைப்பு நிராகரிக்கப்பட்டுவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் நடவு, அறுவடைக் காலங்களில் வயல்வெளிகளில் பார்த்தால் நாணல் பூத்தாற் போல் தலைப்பாகை கட்டிய ஆண்களும் நடவு வேலையின் போது மனதை அள்ளிக்கொள்ளும் வகையில் வாழ்க்கையில் பட்டுவந்த துயரக்கதையையும் பார்த்துவந்த கதையையும் பாடலாக பெண்கள் பாடும் பாட்டுச் சத்தத்தோடு கூட்டம் கூட்டமாய் மனிதர்களை பார்க்க முடிந்தது. அதற்கு மாறாக இன்று வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் இயந்திரங்களின் சத்தம் தான் கேட்க முடிகிறது, பார்க்க முடிகிறது. இரசாயன உரங்களை கூடுதலாக பயன்படுத்தி வருவதால் மண்புழு, நண்டு, நத்தை, ஊசிதட்டாண், போன்றவை அழிந்து போனது போல், இயந்திரமயமானதால் மனிதக் கூட்டமே விவசாயப் பணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் குறுவை, தாளடி, சம்பா விளைந்து நின்றாலும் விவசாயத் தொழிலாளர் வீடுகளில் நிறைப்படி நெல்லுக்கு வழியில்லாமல் போனதும் வேதனையான ஒன்று. காரணம், அறுவடை மிஷின்களை முழுமையாக பயன்படுத்துவதால். நாட்டில் நல்லநிலையில் விவசாயம் இருக்கும்போதே விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாய வேலை மறுக்கப்பட்ட நிலையில் மாற்று வேலையை நாடிச் செல்ல வேண்டிய அவலநிலையில் இன்று மோடி கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் ஒட்டுமொத்த விவசாயமும் கார்ப்பரேட் கைகளுக்கு சென்று அவை பணப்பயிர், பண்ணை சாகுபடிகளாக மாறும் போது கொஞ்ச நஞ்ச வேலையும் இழக்கும் நிலையும், வேளாண் சட்டத்தால் விவசாயிகள் தனது நிலங்களை அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு ஏழை விவசாயிகளாக - கூலித் தொழிலாளர்களாக மாறும் போக்கும் - என நாட்டு மக்கள் உணவு தட்டுப்பாட்டிற்கு உள்ளாகும் நிலையும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் உணவுக்காக ஒட்டுமொத்த மக்களும் கையேந்தும் நிலை உருவாகும் நிலைக்கு மோடியும், எடப்பாடியும் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார்கள். 

விவசாயப் பணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள சுமார் 1 கோடி மக்களை பாதுகாக்க இடதுசாரிகளின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம்தான் இன்று அவர்கள் பிழைத்திருக்க உதவிவருகிறது. அதற்கு ஏற்ப எடப்பாடி அரசு நூறுநாள் வேலையை நுடமாக்கி ஏறத்தாழ பல மாதங்களாக வேலை நிறுத்தப்பட்டு வருகிறது.இதுபெரும் ஆபத்தானது. எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தை நாடு முழுமையும் தங்கு தடையின்றி, பாரபட்சமின்றி 200 நாளாக உயர்த்தி கூலி 600 ரூபாயாக வழங்க வேண்டும். வேளாண் பணிகளில் இயந்திரத்தை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி மனிதஉழைப்பை பயன்படுத்தவும் 100 வேலை திட்டத்தை பேரூராட்சிகளிலும் விரிவுப்படுத்தி 1 கோடி மக்களை பாதுகாக்கவும் 110 விதியை பயன்படுத்திட தமிழக அரசு முன்வரவேண்டும்.

===கா.அபிமன்னன், தஞ்சை மாவட்டப் பொருளாளர், விவசாயத் தொழிலாளர் சங்கம் ===

;