articles

img

“சமூகப் பிரச்சனைகளில் கவனம்செலுத்துவது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தனித்துவம்”

“சமூகப் பிரச்சனைகளில் கவனம்செலுத்துவது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தனித்துவம்”

அசோக் தாவ்லே பெருமிதம்

தென்மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36வது மாநாட்டில் துவக்க உரையாற்றிய அகில இந்திய விவசாய சங்கத் தலைவர் டாக்டர் அசோக்தாவ்லே, 75 ஆண்டு கால பயணத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA)முன்னோடி தொழிற்சங்கமாக விளங்குவதில் பெருமிதம் தெரிவித்தார். சமூக அக்கறையில் தனித்துவம் “பொதுவாக தொழிற்சங்கங்கள் தனது உறுப்பினர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற நிலையில், சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் நாம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. குறிப்பாக நலிவுற்ற மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயல்படுவதில் காப்பீட்டு ஊழியர் சங்கம் தனித்துவமாக திகழ்கிறது” என்று அவர் கூறினார். கியூபாவுக்கு உதவி இதற்கு சமீபத்திய உதாரணமாக, அமெரிக்காவால் பல தடைகளுக்கு உள்ளாகியிருக்கும் கியூப மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு உதவியாக ரூபாய் 40 லட்சத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வழங்கியதைச் சுட்டிக்காட்டினார். “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் இந்த உதவி அமைந்தது” என்று அவர் பாராட்டினார். வரலாற்று முக்கியத்துவம் மாநாடு துவங்கும் இந்த நாள் (ஆகஸ்ட் 9) 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவக்கிய மகாத்மா காந்தியின் வழியில், “இன்றைய ஏகாதிபத்தியத்தை வெளியேற்ற நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்” என்று வலியுறுத்தினார். பூர்வகுடி பெண்களுக்கு நீதி இந்த நாள் உலக பூர்வகுடிகள் தினமாகவும் அனுசரிக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர், 2006ல் வாச்சாத்தியில் 18 பூர்வகுடி பெண்களின் மீது நடந்த கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில் 31 ஆண்டுகளுக்குப் பின் 269 அதிகாரிகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதை வரவேற்றார். எல்ஐசியின் சாதனை சமீபத்திய ஆய்வின்படி எல்ஐசி நிறுவனம், உலகின் மூன்றாவது வலிமைமிக்க காப்பீட்டு நிறுவனமாக திகழ்வதற்கு வித்திட்ட ஊழியர்கள் மற்றும் முகவர்களைப் பாராட்டினார். “இந்த வலிமையான சூழலிலும் அரசு இந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க துடிப்பது வேதனையானது. பங்கு விற்பனையின் மூலம் ஒரு பங்கிற்கு ரூபாய் 26.9 வருவாயை அரசுக்கு எல்ஐசி அளிக்கிறது” என்றார். “காப்பீட்டு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அரசியல் பார்வைகள் உடையவராக இருப்பினும், ஒரு பொறுப்பு மிக்க தொழிற்சங்க உறுப்பினர் என்ற வகையில் சாதி, மதம் கடந்து இந்தத் தேசத்தின் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முன் உள்ளது” என்று வலியுறுத்தினார்.