‘சத்தம் போடும் மூங்கில் காடு’
முன்னொரு காலத்தில் மூங்கில் மலைக்காடு என்னும் ஒரு மலைப்பகுதியில் ஓர் கிராமம் இருந்தது. அது மூங்கிலால் சூழப்பட்டுள்ள மலை என்பதால்தான், அதற்கு மூங்கில் மலைக் காடு என்னும் பெயர் வந்தது. அந்த கிராமத்தில் 30,40 வீடுகள் தான் இருக்கும். 10,20 சிறுவர்கள் தான் இருப்பார்கள். அங்கு இருக்கும் பெரிய பசங்களும், பெரிய பிள்ளைகளும் அந்த மூங்கில் காட்டிற்கு விளையாடச் செல்வார்கள். பின்னாலேயே சின்னஞ்சிறு சிறுவர்களும் செல்வார்கள்.
நம் பின்னே வருவது நமக்கு விளையாடுவதற்கு தொந்தரவாக உள்ளது” என்றான் ஒரு பையன். அதற்கு நாம் என்ன செய்வது என்று மற்றொருவன் கேட்டான். அவர்களை போகச் சொன்னால் போய்விடுவார்கள் என்றான் இன்னொருவன். அதற்கு ஒரு பெண், “ம்க்கும்... நாம போகச் சொன்னா, அவங்க போக மாட்டாங்க! நாம ஏதாவது திட்டம் போடணும்” என்று அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டனர். மறுநாள், சிறுவர்கள் அவர்கள் பின்னே சென்றனர். அப்பொழுது ஒரு பையன் திரும்பி, “இந்தக் காட்டிற்குள் வராதீர்கள்! ஏனென்றால், இந்தக் காட்டில் பேய் உள்ளது!! அது பெரியவர்களை ஒன்றும் செய்யாது. ஆனால், சின்னஞ்சிறு குழந்தைகள் வந்தால் அது பஸ்... பஸ்... என்று சத்தமிட்டு, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு போய்விடும். அதனால் எங்கள் பின்னே யாரும் வராதீர்கள்” என்று கூறினான். அதற்கு அந்த குழந்தைகள், எதுவும் பேசவில்லை. பின்னால் திரும்பி கூட பார்க்காமல் ஒரே ஓட்டம் தான். வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு கட்டிலின் அடியில் சென்று ஒளிந்து கொண்டனர். பிறகு கிராமத்தில் ‘மொட்டை தாத்தா’ என்னும் தாத்தாவிடம் சென்று நடந்தவற்றைக் கூறினர். அந்த தாத்தா சற்று சந்தேகத்துடன் அவர்களை கூட்டிக்கொண்டு அந்த மூங்கில் காட்டிற்குள் சென்றார். அவர் அங்கு நுழைந்து சற்று தூரம் சென்றதும் பஸ்... பஸ்... என்று சத்தம் கேட்டது. குழந்தைகள் அச்சத்துடன் தாத்தா பின்னே ஒளிந்து கொண்டனர். அப்போது தாத்தா, “சற்றுப் பொறுங்கள்” என்றார். சிறிது நேரம் கழித்து அங்கு இனிமையான ஓசை கேட்கத் தொடங்கியது. குழந்தைகள் ஆச்சரியமாக கேட்டனர். அப்போது தாத்தா, “இது பஸ்... பஸ்... சத்தம் போடும் பேய்கள் இல்லை. இதெல்லாம் பொன்வண்டுகள். இவை பறக்கும் போது பஸ்... பஸ்... என்று சத்தமிடும். இவை பறந்து கொண்டே மூங்கில் கம்புகளில் துளையிட்டு, அதன் உள்ளே பறந்து செல்லும்போது அந்த பஸ்... பஸ்... சத்தங்கள் இனிமையான ஓசை போன்று ஒலி எழுப்பும். நம் முன்னோர்கள் இதை வைத்துதான் புல்லாங்குழலைத் தயார் செய்தனர்”என்று கூறினார். பின்னர் ஆளுக்கொரு புல்லாங்குழலை செய்து கொடுத்தார். குழந்தைகள் அதை வைத்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். இதனால் பெரிய பிள்ளைகளுக்கும், பசங்களுக்கும் தொந்தரவும் இல்லை, சிறுவர்களுக்கு பஸ்... பஸ்... பேய் பற்றிய அச்சமும் இல்லை. அதன் பிறகு, மூங்கில் மழைக்காடு முழுவதும் ஒரே புல்லாங்குழல் இசைதான்.