articles

img

மாதவிடாய் விடுப்பு – சலுகையல்ல, உரிமை! - உ. வாசுகி நேர்காணல்

மாதவிடாய் விடுப்பு – சலுகையல்ல, உரிமை! 

பெண்ணுடல் என்பது இயற்கை அறிவியலின் மகத்துவம். ஆனால், அந்த உடலியங்கியல் நிகழ்வான மாதவிடாயைச் சுற்றி இன்றும் மர்மங்களும், அசுத்தம் எனும் புனைவுகளும் பின்னப்பட்டே இருக்கின்றன. அண்மைக்காலமாக ‘மாதவிடாய் விடுப்பு’ குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.  ஏப்ரல் 2024-ல் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பள்ளிகளில் மாணவிகளுக்கு மாதவிடாய் கால வசதிகளைச் செய்து தருவது அவர்களது ‘கண்ணியமான வாழ்விற்கான அடிப்படை உரிமை’ என அறிவித்ததது. ஆனால், வேலை செய்யும் இடங்களில் விடுப்பு அளிப்பது தொடர்பாக மார்ச் 2026-ல் எழுந்த வழக்கில், இது கொள்கை முடிவு என்றும், பெண்களுக்குப் பாதகமாக முடியும் என்றும் கூறி அதே உச்சநீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து பெண்களின் சமத்துவ உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள சூழலில், இது குறித்துத் தெள்ளத்தெளிவான அரசியல் மற்றும் அறிவியல் பார்வையை முன்வைக்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ. வாசுகி.  முதலாளித்துவ மனநிலையா அல்லது சமத்துவக் கோட்பாடா? எதன் அடிப்படையில் இந்த உரிமையைப் பரிசீலிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தச் சிறப்பு நேர்காணல்.

கேள்வி: மாதவிடாய் என்பது இன்றும் சமூகத்தில் ஒரு ரகசியமாகவும், அசுத்தமாகவும் பார்க்கப்படுகிறதே? இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?  உ. வாசுகி: மாதவிடாய் என்பது அசுத்தம், தூய்மையற்றது என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையுமில்லை. இது பண்பாட்டு, மதவாத  மற்றும் சமூகப் புனைவுகளே. இதில் வேடிக்கை  என்னவென்றால், வெளியே சொல்லத் தயங்கு வார்கள்; ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுத் திண்ணையில் உட்கார வைப்பார்கள். எதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதைத்  தண்டோரா போட்டுச் சொல்லாத குறைதான் இது.  உண்மையில், இது பெண்ணின் ஆரோக்கி யத்திற்கான அறிகுறி. எதை அசுத்தம் என்கிறார்களோ, அது மாதா மாதம் முறையாக  நிகழாவிட்டால் மருத்துவமனைக்கு ஓடு கிறார்கள்.

இதில் பிரச்சனை என்றால் கருவுறுத லில் சிக்கல் ஏற்படும் எனக் கலங்குகிறார்கள். இது பெரும் முரண்பாடு இல்லையா? இது பெண்ணின் உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு சுழற்சி.  கேள்வி: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான சிரமங்களைச் சட்டம் எப்படி அணுக வேண்டும்? உ. வாசுகி: மாதவிடாய் சமயத்தில் பெரும் பாலான பெண்கள் முதல் ஓரிரு நாட்களில் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்படு கிறார்கள்.

வலி, சோர்வு, நீண்ட நேரம் நிற்பது அல்லது நடப்பதில் களைப்பு, அலுவலகப் பணி செய்வதில் சிரமம் போன்றவை யதார்த்தமான வை. இதைக் கணக்கில் கொண்டுதான் கேரள அரசு கடைகளில் வேலை செய்யும் ஊழியர் களுக்கு ‘உட்காரும் உரிமையை’ சட்டமாக்கி யது. பின்னர் தமிழகத்திலும் இச்சட்டம் வந்தது. இந்த உடல்நிலையைக் கருத்தில் கொள்வது அடிப்படை மனித உரிமை.  கேள்வி: மாதவிடாய் விடுப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய அணுகுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன? உ. வாசுகி: இங்கேதான் நாம் உச்ச நீதிமன்றத் தின் கருத்தைப் பரிசீலிக்க வேண்டியிருக் கிறது. ஒரு மாதத்திற்கு முன்புதான் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ‘அடிப்படை உரிமை’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் தற்போதைய அணுகுமுறையில் அதற்கு நேர் எதிரான போக்கே பிரதிபலிக்கிறது. மாதவிடாய் விடுப்பு அளித்தால் அது பெண் வேலைவாய்ப்பைப் பாதிக்கும், பெண்களே கூட தங்களைச் சமமாக உணர மாட்டார்கள் என்ற நீதிமன்றத்தின் கருத்து தவறானது. இது அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.  கேள்வி: சமத்துவம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகள்தானே? விடுப்பு கேட்பது அந்தச் சமத்துவத்தைப் பாதிக்காதா? உ. வாசுகி: சமத்துவம் என்பது ஒரே மாதிரியான வார்ப்பாக இருக்க வேண்டும் எனப் பொருள் படாது. அனைவருக்குமான பிரச்சனைகளை யும் கணக்கில் எடுத்து, சம வாய்ப்புகள் கிடைப் பதற்கான சமத்துவச் சூழலை ஏற்படுத்தவேண்டும். குழந்தை காப்பகம், பாலூட்டுவதற்கான இடைவேளை, பிரசவ கால விடுப்பு, மாற்றுத்திற னாளிகளுக்கான வசதிகள், தனி பேருந்து வசதி போன்றவை இப்படித்தான் வந்தன.

ஒரு காலத்தில் பிரசவ விடுப்பு கேட்டபோதும் முத லாளிகளின் கருத்து இப்படித்தான் இருந்தது. ஒரு தனியார் கல்லூரியில் ‘கோடை விடுமுறை யில் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியதை எல்லாம் பார்த்திருக்கிறோம். தொழிற்சங்கங்களும் பெண்கள் இயக்கங்களும் போராடித்தான் இவற்றை மாற்றின.  கேள்வி: பாதுகாப்பு மற்றும் உரிமைகளைக் காரணம்காட்டிப் பெண்களைப் பணியில் அமர்த்த நிறுவனங்கள் தயங்குவதை எப்படி எதிர்கொள்வது? உ. வாசுகி: இந்த உரிமைகளை வழங்க வேண்டுமே என்பதற்காகப் பெண்களையோ, மாற்றுத்திறனாளிகளையோ பணி நியமனம் செய்யாமல் இருப்பதுதான் தவறு, குற்றம்.

வீட்டுக்குள் பெண்களை பூட்டி வைக்கும் வழக்கத்தைப் பாரதி என்றைக்கோ வசை பாடி  விட்டார். நிர்பயா வழக்குக்குப் பின் அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா கமிஷன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டது: “பொதுவெளியில் பெண்களுக்கு பிரச்சனை வருகிறது, எனவே அவர்கள் வரக் கூடாது என்பது விஷயத்தைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.” பெண்களுக்குப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதுதான் சரியான அணுகு முறை. கேள்வி: இந்தச் சட்டப் பாதுகாப்பு அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறதா? உ. வாசுகி: துரதிர்ஷ்டவசமாக இல்லை. இந்த  உரிமைகள் பலவும் அமைப்புசார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கே ஓரளவாவது கிடைக்கிறது.

பெரும்பாலான பெண்கள் சட்டப்  பாதுகாப்பு வட்டத்திற்கு வெளியேதான் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். விவசாயத் தொழி லாளர்களின் நிலைமை இன்னும் மோசம். கேள்வி: இறுதியாக, ஒன்றிய அரசு மற்றும் நீதித்துறையிடம் உங்களின் கோரிக்கை என்ன? உ. வாசுகி: உச்சநீதிமன்றத்தின் அணுகு முறை அடிப்படை யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாத, முதலாளித்துவ மனநிலைக்கு வக்காலத்து வாங்குகிற கருத்தாக உள்ளது. உலக அளவில் சில நாடுகளில் மாதவிடாய் விடுப்பு, சிற்சில வேறுபாடுகளுடன் அமலில் இருக்கிறது. பாரதத்தையே தாயாக உருவகப் படுத்தி மூச்சுக்கு 300 முறை ‘ஜே’ போடுகிற மோடி யின் ஆட்சியில், பெண்களின் இந்த அடிப்படை உரிமையை அமலாக்க ஏன் முயற்சிக்கக் கூடாது?