articles

img

மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்! ‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்

மாற்றம் என்பது சொல் அல்ல... செயல்!  ‘ஜென் சி’ இளைஞர்களுடன் பெ.சண்முகம் உரையாடல்

அரசியல் என்பது சாக்கடையா? கம்யூனிஸ்ட்களிடம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இடம் உண்டா? மாற்றுக் கொள்கை இல்லாத நடிகர்கள் பின்னால் இளைஞர்கள் செல்வது ஏன்? - இப்படி இன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் தேங்கிக்கிடந்த தார்மீகக் கோபங்களையும், சந்தேகங்களையும் கேள்விகளாக வீச, அவற்றுக்குத் தன் அனுபவச் செறிவோடு நிதானமாகவும் நேர்த்தியாகவும் பதிலளித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். சிபிஐ(எம்) சமூக வலைதளக் குழுவின் காட்சிப் பதிவாக வெளியிடப்பட்டுள்ள “GenZ with comrade shanmugam” உரையாடலில், அரசுப் பள்ளியில் கபடி வீரராகத் தொடங்கி, மாணவர் சங்கப் போராட்டங்கள் வழியாக மக்கள் தலைவராக உயர்ந்த அவரது பயணமும், சமகால அரசியல் குறித்த அவரது பார்வையும் ஆழமாகப் பதிவாகின. அதன் பகுதிகள்:

கேள்வி: இடதுசாரி இயக்கத்துக் குள்ள நீங்க எப்படி வந்தீங்க? உங்க காலத்துல இளைஞர்கள் அரசியல் புரிதல் எப்படி இருந்தது? பெ.சண்முகம் : எங்க காலத்துல அரசுப் பள்ளி களைத் தவிர வேற பள்ளிகளே கிடையாது. பள்ளியில் படிக்கும்போதே எங்க ஊர்ல ‘இளைஞர் நற்பணி மன்றம்’னு நானாவே ஒன்னு ஆரம்பிச்சேன்.

அப்போ எங்க ஊர்ல கபடி போட்டி நடத்துறதுதான் பெரிய விஷயம். அதுதான் கிராமப்புற விளையாட்டாவே இருந்தது. அப்புறம் தமிழ்நாட்டுல வரக்கூடிய எல்லா  நாளிதழ்கள், வார இதழ்களை நன்கொடை பெற்று வாங்கி மக்களை படிக்க வைப்போம். அந்த மன்ற ஆண்டு விழாக்களுக்கு எல்லா கட்சித் தலைவர்க ளையும் கூப்பிடுவோம். ஆனா, மத்த கட்சித் தலைவர்கள் எல்லாம் வந்துட்டுப் போயிடுவாங்க. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.என்.கே. தங்கராஜ் மாதிரி ஆளுங்கதான் என்னோடு ரெகுலரா பேசுவாங்க. அவர் ஒரு சர்க்கரை ஆலைத் தொழிலாளி. அவரோட உரை யாடல்தான் என்னை ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ வாசிக்க வச்சது. அப்புறம் காரைக்குடி அழகப்பா கல்லூரியில சேர்ந்த முதல் வருஷமே, ஒரு மாணவியோட சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிரா போராட்டத்தை முன்னெடுத்தேன். அந்தப் போராட்டத்தை எப்படி வெற்றிகரமா முடிக்கணும்னு எனக்குத் தெரியல.

அப்போதான் இந்திய மாணவர் சங்கம் (SFI) அறி முகமாகி, மதுரையில இருந்து அப்போ மாநிலத் தலை வராக இருந்த ராமலிங்கம் போன்ற தலைவர்கள் வந்து வழிகாட்டினாங்க. அந்தத் தொடர்பும், 10 வருஷ மாணவர் இயக்கப் பணியும்தான் என்னை மக்கள் பணிக்காக முழுநேரமா மாத்துச்சு. கேள்வி: நீங்க எப்பவுமே இந்த சிவப்புத் துண்டு போட்டுட்டு இருக் கீங்களே... நீதிமன்றம் மாதிரி இடங் கள்ல உங்களைத் தடுத்ததில் லையா? பதில்: இந்தத் துண்டை தோளில் போடுவதற்கு ஒரு பெரிய போராட்ட வரலாறே இருக்கு.

ஒரு காலத்துல செருப்பு போடுறதுக்கும், நல்ல துணி உடுத்துறதுக்கும், துண்டை தோள்ல போடுறதுக்குமே இங்க போராட்டம் நடந்திருக்கு. தோழர் தமிழ்ச்செல் வன் எழுதின ‘திருப்பி அடித்த வரலாறு’ படிச்சீங் கன்னா அது புரியும். குறிப்பாக தஞ்சை மாவட்டத்துல இதற்காக உயிரைத் தியாகம் செஞ்சவங்க ஏராளம். சமீபத்துல கூட நாமக்கல் நீதிமன்றத்துல ஒரு மாஜிஸ்திரேட் முன்னாடி நான் போனப்போ, அங்க இருந்த ஊழியர்கள் “சார் துண்டை எடுங்க”ன்னாங்க. நான் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டுதான் உள்ள போனேன். ஏன்னா, தஞ்சாவூர்ல ஓ.எஸ். சத்யநாராய ணன் என்ற ஒரு தலைவர், நீதிமன்ற விசாரணைக்கு போனப்போ துண்டை எடுக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவே 15 நாள் ரிமாண்ட் ஆகி ஜெயி லுக்குப் போனார். அந்தத் தியாகத்தின் அடையா ளம்தான் இந்தச் சிவப்புத் துண்டு. இப்போ வாச்சாத்தி டாக்குமெண்டரி பார்த்த பிறகுதான் பல வழக்கறிஞர்க ளுக்கே இப்படி ஒரு வரலாறு இருக்கிறது தெரியுது.

கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகங்கள்ல சாதி மறுப்புத் திரு மணம் நடத்தலாம்னு சொல்லியி ருக்கீங்க... இதனால வோட்டுப் போயிடும்னு மத்த சாதிக்கட்சிகள் உங்களை எப்படிப் பார்க்குறாங்க? பதில்: கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்தே சாதி ஒழிப்புதான் மிக முக்கி யமான கொள்கை. சாதி வலுவா இருக்குறதுக்கு காரண மான ‘அகமண முறையை’ தகர்க்காம சாதியை ஒழிக்க  முடியாது. பி. ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அப்பவே 1952-ல தாலி கட்டாம, வெறும் ரெண்டு மாலையை மட்டும் மாத்திக்கிட்டு பதிவுத் திருமணம் செஞ்சவங்க.

இன்னைக்கு சமூகத்துல சாதி ஆணவக் கொலைகள் நடக்குது. காதலிக்கிறவங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கு. பெற்றோர்கள், சமூகம் எதிர்க்கிற நிலைமையில அவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒரு பாதுகாப்பான இடம்னு நம்பிக்கை கொடுக்கத்தான் அந்த அறிவிப்பு. இதனால வோட்டு வருமா, போகு மான்னு நாங்க கவலைப்படுறது இல்லை. வோட்டுக்காக மட்டும் அரசியல் பண்ணுனா, தீண்டா மை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ எங்களால வீரியமா போராட முடியாது.

வாக்குகளைப் பற்றி கவலைப்படாததால்தான் எங்களால சாதியத்துக்கு எதிரா கம்பீரமா நிற்க முடியுது. கேள்வி: நடிகர் விஜய் இப்போ ஒரு ‘அல்டர் நேட்டிவ்’ அரசியலை முன்வைக்கிறாரே? இளைஞர்கள் அவர் பின்னாடி ஒரு பெரிய கூட்டமா  போறதை எப்படிப் பார்க்குறீங்க? பதில்: சினிமாவுல ஒரு பெரிய நடிகரா இருக்கி றவரை நேர்ல பார்க்க ஒரு கூட்டம் போகத்தான் செய்யும். ஆனா, அது கொள்கை மாற்றமா? ஆள் மாற்றமா? திமுக, அதிமுக-வோட பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றா அவர் என்ன கொள்கையை வச்சிருக்கார்? இதுவரைக்கும் அவர் வாய் திறந்து ஒரு மாற்று கொள்கையைச் சொன்னது கிடையாது. இப்போ இளைஞர்கள் அவர் பின்னாடி போறது உண்மைதான். ஆனா, அப்படிப் போற கூட்டம் எல்லாமே ஆட்சி மாற்றத்துக்காகப் போறாங்களா, இல்ல நடிகரைப் பார்க்கப் போறாங்களான்னு 2026 தேர்தல்  முடிவுக்குப் பிறகுதான் தெரியும். இப்போதைக்கு அவரிடம் எந்த மாற்றத்துக்கான அறிகுறியும் தெரியல. அரசியல் கட்சின்னா அதுக்குத் தத்துவமும், திட்டமும் இருக்கணும். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சப்போ கூட ‘அண்ணா இசம்’னாரு, ஆனா அவரால விளக்கம் சொல்ல முடியல.

கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை திட்டம், அமைப்புச் சட்டம் இது ரெண்டும் ரொம்ப முக்கியம். கேள்வி: அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கிற நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீங்க? உங்கள் வருமானம் எவ்வளவு? பதில்: அரசியல்ங்கிறது சம்பாதிக்கிறதுக்கான தளம் இல்லைங்கிறதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் நிரூபிச்சிருக்காங்க. ஜோதிபாசு, இ.எம்.எஸ், ஹர்கி ஷன் சிங் சுர்ஜித் போன்ற தலைவர்கள் சொத்துக்களை  மக்களுக்காகக் கொடுத்தவங்க. தமிழ்நாட்டுல பி. ராம மூர்த்தி, ஆர். உமாநாத், நல்லசிவன் இவங்க யாரும் சம்பாதிக்கலையே. வருமானத்தைப் பொறுத்தவரை, நான் 1983-ல முழுநேர ஊழியரா வந்தப்போ எனக்குக் கொடுத்த ஊதியத் தொகை 250 ரூபாய். இன்னைக்கு அது  14,500 ரூபாயா இருக்கு.

எம்பி, எம்எல்ஏ-வாக  போற கம்யூனிஸ்ட் தோழர்கள் அவங்க சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்திடணும். கட்சிதான் அவங்க ளுக்கு அலவன்ஸ் கொடுக்கும். இதுதான் இந்திய நாடு முழுக்க கம்யூனிஸ்ட் வழக்கம். பாஜக மாதிரி க்யூ-ஆர் கோடு வச்சோ, மிஸ்டு கால் கொடுத்தோ நாங்க மெம்பர் சேர்க்கிறது இல்ல. மக்கள்கிட்ட வசூல் பண்ற ‘உண்டியல் நிதி’யும், உறுப்பினர்கள் கொடுக்குற ‘லெவி தொகையும்தான் எங்க பலம். கேள்வி: அம்பேத்கரும் பெரியாரும் இருக்கும்போது, எதற்காக ஜெர்மனி யில் பிறந்த மார்க்ஸை நாம் படிக்க வேண்டும்? பதில்: உழைப்புச் சுரண்டலுக்கு எதிரா ‘உபரி மதிப்பு’ (Surplus Value) என்ற கோட்பாட்டைக் கண்டுபிடிச்சவர் காரல் மார்க்ஸ். இது உலகளாவிய தத்துவம்.

அம்பேத்கர், பெரியாரோட சமூகப் பணி களை நாங்க மதிக்கிறோம். அதே சமயம், பொரு ளாதார ரீதியா இந்தச் சமூகத்தை மாற்றியமைக்க மார்க்சியம் அவசியம். கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிறந்த சிந்தனையாளர்னு பிபிசி-யே மார்க்ஸைத் தான் சொல்லுது. சில பேர் கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கரை வாசிக்க லன்னு சொல்றாங்க, அது தவறு. 80-களிலேயே பி.டி. ரணதிவே அம்பேத்கரைப் பற்றி எழுதியிருக்கார். தலித் மக்கள் ஒடுக்கப்படுற இடத்துல கம்யூ னிஸ்ட்கள்தான் முன்னாடி நிக்கிறாங்க. அடையாள அரசியலைத் தாண்டி, உழைக்கும் வர்க்கமா எல்லோரையும் இணைக்கிறதுதான் மார்க்சியம். கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியில கடவுள் நம்பிக்கை உள்ளவர்க ளுக்கு இடமுண்டா? பதில்: நிச்சயமாக உண்டு.

கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மட்டும்தான் சேரணும்னு எந்த விதியும் கிடையாது. ஆனா, ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வரும்போது அறிவியல்ப் பூர்வமா தங்களை வளர்த்துக் கணும்னு சொல்றோம். யார் வேணாலும் கட்சியின் திட்டத்தை ஏத்துக்கிட்டு உறுப்பினராகலாம். கேள்வி: போலீஸ் லாக்-அப் டெத் பற்றி என்ன நினைக்கிறீங்க? நீங்க திமுக கூட்டணியில இருந்துட்டு அவங்களை எதிர்க்க முடியுமா? பதில்: போலீஸ்காரங்க சட்டம் நம்மைக் காப்பாத்தும்னு நினைச்சு அத்துமீறுறாங்க. ‘ஜெய் பீம்’ படத்துல வர்ற அநீதிக்கு தண்டனை வாங்கிக்  கொடுத்தது சி.பி.எம் தான். அப்போ மாவட்டச்  செயலாளரா இருந்த தோழர் கே. பாலகிருஷ்ணன் தான் அந்தப் போராட்டத்தை நடத்துனார்.

திமுக கூட்டணியில இருக்கோம்ங்கிறதுக்காக எல்லாத்துலயும் உடன்படுறது இல்லை. ஒத்துப் போற விஷயங்கள்ல ஒத்துப்போறோம், முரண்படுற இடத்துல சாம்சங் போராட்டம் மாதிரி வீதியில நின்னு போராடுறோம். தனியார்மயத்தை நாங்க எதிர்க்கிறோம். பிஜேபி-யோட வகுப்புவாத அரசியலை வீழ்த்தணும்னா இப்போ இந்த அணி அவசியமா இருக்கு. கேள்வி: கம்யூனிசம் பத்தி தெரிஞ் சுக்க என்ன புக்ஸ் படிக்கணும்? பதில்: நான் முதல்ல படிச்சது மக்சிம் கார்க்கி யோட ‘தாய்’ நாவல். அப்புறம் ‘கூலி, விலை, லாபம்’. அப்புறம் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நிச்சயமா படிக்கணும். இதுதவிர ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ போன்ற புத்தகங்கள் தேவையானது. ‘படிப்போம் போராடு வோம்’ (Study and Struggle) - இதுதான் மாணவர்க ளுக்கான எங்களது முழக்கம்.