தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்: வரலாறும் வழிகளும்
“நாத்தமுன்னா.. கை பிடிக்குது மூக்க... அந்த நரகலிலே.. கெடக்குது எங்க வாழ்க்க...” - கவிஞர் தனிக்கொடியின் இந்த வரிகள் தூய்மைப் பணியாளர்களின் வேதனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்தப் பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் இன்று நீண்ட காலமாக அழுந்தி அழுந்தி, சகித்துக் கிடந்த அந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கமாக திரண்டு கொதித்து எழுந்து தமிழ்நாடு முழு வதும் நடத்தும் போராட்டங்கள் எல்லோரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. சுரண்டலின் வரலாறு 1990களுக்கு முன்பு வரை, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மாற்றுப் பணியாளர்கள் (substitute) என்கிற பெயர் களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தூய்மைப் பணியாளர்களைத் தேர்வு செய்து வைத்துக் கொள்வார்கள்.
அவர்களுக்கு நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் கணக்கிட்டு வழங்கப் பட்டு வந்தது. பின்னர் பணி நிரந்தரமும் செய்யப்பட்டார்கள். பின் இந்த நிலையிலிருந்து மாறி, பெய ரளவு மஸ்டர் ரோல் (NMR), தொகுப்பூதியம் என்கிற பெயர்களில் தூய்மைப் பணியாளர்கள் குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டப்பட்டார்கள். பல்வேறு முறைகேடுகள் ஊழல்களும் நடந் தன. இதற்கு எதிராக 2000 இருந்து 2006 வரை, சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 2006-இல் அரசாணை மூலம், மூன்றாண்டுகள் வேலை செய்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட் டார்கள். இந்த போராட்டங்களில் சிஐடியு முக்கி யப் பங்கை வகித்தது. தூய்மைப் பணிகள் நிரந்தரம் - தூய்மைப் பணியாளர் நிரந்தரமில்லை காலங்காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட எளிய அடித்தட்டு உழைப்பாளிகள், தூய்மைப் பணி யாளர்கள். அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு, பணி நிரந்தரமும், ஊதியமும் முக்கியமானது.
இதை மறந்த அரசுகள், தங்கள் பொறுப்பில் இருந்து 2006-இல் இருந்தே நழுவிக் கொள்ள ஆரம்பித்தன. தூய்மைப் பணியாளர்கள் நியமனத்தையும், பணி நிரந்தரத்தையும், நிரந்தர ஊழியர்களுக்கு சமமான ஊதியத்தையும் ஒழித்துக் கட்டி, சுய உதவிக் குழு மூலம் தேவைக்கேற்ப 30% லிருந்து 50% வரை தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களை நியமிக்கும் முறையைச் செயல்படுத்த ஆரம்பித்தன. பின்பு, திட்டமிட்டு சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்களாக மாற்றப்பட்டார்கள். எந்தவிதமான ஊதிய நிர்ணயமோ, சட்டச் சலுகைகளோ இல்லாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் தினசரி ஊதியம் கூட வழங்காமல் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இதனை எதிர்த்து சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் தனித்தும், மற்ற சங்கங்களை இணைத்துக் கொண்டும் பல்வேறு போராட்டங்களை நடத்தி யதுடன், நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங் களையும் நடத்தியது. இந்த சட்டப் போராட்டத் தின் மூலம் 2014-இல் நீதிமன்றம் உத்தரவிட்டு அமைக்கப்பட்டது தான் உள்ளாட்சி நிர்வாகங் களில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் குழு. தொழிலாளர் துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட 11 பேர் கொண்ட இந்தக் குழுவில் சிஐடியு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர். கணேசனும் இடம் பெற்றிருந்தார்.
இக்குழு 2015-இல் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி யது. ஆனால் அன்றைய மாநில அரசு இதைக் கிடப்பில் போட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று சட்டமாக்க வேண்டும் என, சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர்களாக இருந்த முனுசாமி, வேலுமணி ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தினார். திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்கள் சட்ட மன்றத்தில் இது குறித்துக் கேள்வியை எழுப்பி னார். அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து பின்பு, 11.10.2017-இல் வெளியிடப்பட்டது தான் உள்ளாட்சி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணை 2(D) எண்: 62. இந்த அரசாணையில் மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என வகைப் படுத்தி, தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட 54 வகையான நிரந்தரமற்ற ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஊதியம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையும் அமலாகவில்லை. நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சிகள் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தனியார்மயத்தின் தாக்குதல் குதிரை குப்புறத் தள்ளியதுடன், குழியும் பறிப்பதைப் போல பணி நிரந்தரம் செய்யாமல், சட்டப்படி குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங்காத உள்ளாட்சி நிர்வாகங்கள் தூய்மைப் பணியை முற்றிலும் தனியார்மயமாக்கும் விதமாக, தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்காக வரிசையாக தமிழ்நாடு அரசு அரசாணைகளை வெளியிட்டது: அரசாணை கள் 111, 113 (17.8.2022), அரசாணை 116 (24.8.22), அரசாணை 152 (20.10.2022), 2023-இல் வெளியிட்ட அரசாணை 139.
இவை அனைத்தும் அரசாணைகள் அல்ல. தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களை வஞ்சிக்கும் அநியாயங்கள்! இதில் முக்கியமானது அரசாணை 116. தொழிலாளர் துறை வழங்கிய குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு மாறாக, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் ஊதியத்தை நிர்ண யிக்கும் அதிகாரம் பெற்றது. மாவட்ட ஆட்சியர், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, இந்த மூன்றும் அறிவிக்கும் தினக்கூலியில் எது குறைவாக இருக்கிறதோ அந்தக் குறைந்த கூலியைத்தான் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கச் சொல்கிறது (எவ்வளவு கருணை). இது சட்டத்திற்குப் புறம்பான தாக்குதலாகும். மற்றொரு தாக்குதலாக, அரசாணை 2(D)62-இல் வழங்கப்பட்ட அகவிலைப்படி ரூ.37.25-ஐ ரூ.31.00-ஆகக் குறைத்து அர சாணை 2(D) 36, நாள்: 16.6.2023 வெளி யிடப்பட்டது. நீதிமன்ற வெற்றி உடனடியாக, சிஐடியு மாநில மையத்தின் வழிகாட்டுதலுடன் திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, 28.8.2023-இல் தடையாணை பெற்றது. பின் உழைப்பவர் உரிமை இயக்கமும் இணைந்து கொண்டது. சென்னை உயர்நீதிமன்றம் 11.9.2023-இல் அரசாணை (2D)62 இன் படி ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 27.10.2023-இல் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களுக்கு அரசாணை 2(D) 62இன் படி ஊதியம் வழங்கிடச் சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, மாநகராட்சியில் ரூ.878, நகராட்சிகளில் ரூ.744, பேரூராட்சி களில் ரூ.655 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் மாத ஊதியமாக ரூ.12,780 வழங்க வேண்டும். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங் களோ, அவுட்சோர்சிங் நிறுவனங்களோ, சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவையும் மதிக்கத் தயாராக இல்லை. அவுட்சோர்சிங்: கொள்ளைக் கணக்கு திடக்கழிவு மேலாண்மையில் அவுட்சோர் சிங் நிறுவனங்களுக்கு டன்னுக்கு (1000 கிலோ) ரூ.6,800 வரை வழங்கப்படுகிறது. உள்ளாட்சி வாகனங்கள் சொற்பமான வாடகைக்கும், அலு வலகங்கள் வாடகை இல்லாமல் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் குறைந்தபட்ச ஊதிய சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், பி.எஃப், போனஸ் சட்டம் மதிக்கப்படுவதில்லை. ஆண்டு தோறும் நிறுவனங்களுக்கு டன்னேஜ் தொகை கள் அதிகரிக்கும், தூய்மைப் பணியாளர் களுக்கு மட்டும் ஊதியம் உயராது. கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் இந்த அநீதிக்கு எதிராக திருப்பூரில் 2024இல் 2 நாள் காத்திருப்புப் போராட்டம், 2025 ஜூன் 30இல் துவங்கி 3 நாள் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. மதுரையில் 2 நாள் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 13 நாள் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் நியாயங்களை ஏற்காமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து 18.8.2025-இல் தமிழ்நாடு முழுவதும் சிஐடியு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
திருப்பூரிலும், மதுரையிலும் காத்திருப்புப் போராட்டமாக மாறியது. மதுரை யில் நடந்த 5 நாள் போராட்டத்தில் 23 சிஐடியு ஊழியர்கள் மீது அவுட்சோர்சிங் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் திருமுருகன்பூண்டி நகராட்சியில், அவுட்சோர்சிங்கிற்கு விடும் தீர்மானம் சிஐடியு-வின் போராட்டத்தால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடரும் போராட்டம் தூய்மைப் பணியாளர்களின் போராட்ட அலையைக் காவல்துறையின் மூலமும், பழிவாங்கல் நடவடிக்கைகள் மூலமும் அடக்கிட முடியாது. தூய்மைப் பணிகளில் தனியார் மயத்தை எதிர்த்து முறியடிக்கிற வலிமையான நீண்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்டப்படியான போனஸ் உரிமைகளுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்களைத் திரட்டிச் சக்தியான போராட்டங்களை வெல்லும் வரையில் தொடர்ந்து முன்னெடுப்போம். விலைவாசியும், வாழ்க்கைச் செலவுகளும் நாளுக்குநாள் அதிகரிக்கும்போது பணி நிரந்த ரமும், குறைந்தபட்ச ஊதியமும், சட்ட உரிமை களும் வழங்காமல் தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் எப்படி வாழும்? போராட்டங்களில் உள்ள சட்டப்படியான, நியாயமான உண்மை களை அரசும், அதிகார வர்க்கமும் உணர வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களின் நல னுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குப்பையில் பற்றும் நெருப்பு அணைந்துவிடாது. நரகத்திலிருந்து மீள்வோம். தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கான போராட்டம் வெல்லும் வரை தொடரும்!
