டபுள் எஞ்சின் ஆட்சி: இது ஒடிசா கணக்கு
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி/கூட்டணியின் ஆட்சி இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் “நாங்கள் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம், வானத்தையே வில்லாக வளைத்து விடுவோம்” என்றும் திரும்பத் திரும்பத் தமிழகத்திற்கு வந்து புளுகிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுக உள்பட பாஜக அமைத்துள்ள அடிமைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளின் தலைவர்களும் “ஆமாம் சாமி” போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்லுகிற வளர்ச்சியானது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் வண்ணம் நடத்தப்படுகிற மத மோதல்களிலும், வகுப்புக் கலவரங்களிலும் தான் எப்போதும் இருந்து வருகிறது என்பதற்கான சமீபத்திய சாட்சியமாய் ஒடிசா மாநிலம் அமைந்துள்ளது. ஒடிசாவில் தங்களுக்கேயுரிய இனவெறி பொய்ப்பிரசாரத்தின் மூலம், நீண்ட காலம் பதவியிலிருந்த நவீன் பட்நாயக் அரசை அகற்றிவிட்டு, பாஜக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மத ரீதியிலான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. 20 மாதங்களில் 54 கலவரங்கள் பாஜக பதவியேற்ற பிறகு ஒடிசாவில் கடந்த ஜுன் 2024 முதல் பிப்ரவரி 2026 வரையிலான 20 மாதங்களில் மொத்தம் 54 வகுப்புக் கலவரங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளன. இவை தவிர, கும்பல் படுகொலைகள் மூலம் 6 பேர் உயிரிழந்த கொடூரமும் நிகழ்ந்துள்ளன. சிறுபான்மை மக்களும், பட்டியலின சமூகத்தவருமே பெரும்பாலும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். ஒடிசாவின் தியாகர் மாவட்டத்தில் கடந்த 03.09.2025-ல் கிஷோர் சாமர் என்கிற 35 வயது தலித் வாலிபர், பசுவைக் கொன்றதாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, ஆளுங்கட்சி ஆதரவு வன்முறைக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் சம்பல்பூர் மாவட்டத்தில் மேற்கு வங்கத்திலிருந்து வந்திருந்த ஜுயல் ரானா என்னும் 19 வயது முஸ்லிம் புலம்பெயர் தொழிலாளி, வங்கதேசத்தவர் என்று சந்தேகிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பாலசோர் மாவட்டத்தின் மகாரந்த் முகம்மதுவும், கடந்த ஜனவரியில் பசுக் குண்டர்களின் வெறித்தாக்குதலுக்கு பலியானார். இவற்றின் உச்சமாக, கடந்த மார்ச் 2-ம் தேதியன்று, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சம்பித் பிந்தானி என்னும் 14 வயதே ஆன தலித் சிறுவன், கழுதை திருடியதான சந்தேகத்தின் பேரில் கும்பல் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் ஒடிசாவின் ஆறு பெரிய நகரங்களில் அடிக்கடி ஊரடங்கு உத்தரவும், இணைய தள முடக்கமும் அமல்படுத்தப்பட்டிருந்தன. கடந்த அக்டோபர் 2025-ல் துர்கா பூஜையின் போது, விஎச்பி குண்டர்கள் போலிசுடன் நடத்திய மோதலையடுத்து, கட்டாக் மாநகரில் மூன்று நாட்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்வரே ஒப்புக் கொள்கிறார் இத்தகைய விவரங்கள் அனைத்தையும் எதிர்க்கட்சிகளோ, தனியார் முகமைகளோ திரட்டி வெளியிடவில்லை. மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மார்ச் 9-ம் நாளன்று சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தரவுகள் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, பிரதமர் மோடி புதுதில்லி தேவாலயத்திற்கு திடீர் விசிட் அடித்துக் கொண்டிருந்த அதே வேளையில் ஒடிசாவின் பல பகுதிகளிலும் இந்துத்வா கும்பல் கிறிஸ்தவர்கள் மீது வெறித்தாக்குதல் நடத்தியதும், கிறிஸ்துமஸ் தாத்தா பேனர் கூட கிழித்தெறியப்பட்டதும் இணையத்தில் வைரலாகி உலக அளவில் கண்டனத்துக்குள்ளானதும் யாவரும் அறிந்ததே. ஒடிசாவைப் போல, ஏனைய வட மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் மத மோதல்களையும், வகுப்புக் கலவரங்களையும் தூண்டிவிட்டுத் தேர்தல் ஆதாயம் காண வேண்டும் என்றே ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவும் துடித்துக் கொண்டிருக்கின்றன. மோடி, அமித்ஷா, பியூஷ் கோயல் என்று எல்லோரும் மீண்டும் மீண்டும் தமிழகத்திற்குப் படையெடுத்து வருகிறார்கள். எடப்பாடி, டிடிவி, அன்புமணி என்று எல்லா அடிமைத் தலைவர்களும் பாஜகவின் பிளவுவாத அரசியலுக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டு துணையாய் நிற்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் இங்கே இயற்கையாய் நிலவும் மத நல்லிணக்கச் சூழல் ஆர்எஸ்எஸ் - பாஜக வகுப்புவாதக் கும்பலால் சிதைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். டபுள் எஞ்சின் என்று கதைத்து வரும் டப்பா எஞ்சின் கூட்டத்தைத் தேர்தல் களத்தில் துரத்தியடிக்கத் தயாராகி வருகிறார்கள். - க. மன்னன்