articles

img

கல்வியின் வளர்ச்சியும் மத்திய அரசின் தலையீடுகளும்: தமிழ்நாட்டின் போராட்டம் வலுவடையட்டும்!

கல்வியின் வளர்ச்சியும் மத்திய அரசின் தலையீடுகளும்: தமிழ்நாட்டின் போராட்டம் வலுவடையட்டும்! 

மத்திய கல்வி அமைச்சர் தர் மேந்திர பிரதான் தமிழ் நாட்டிற்கு சமக்ர சிக்சா திட்ட நிதியை நிறுத்துவதாக அறிவித்ததும், மூன்று மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறியதும் வெறும் கல்விக் கொள்கை விவாதம் மட்டு மல்ல. இது இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய கல்வி வளர்ச்சியின் நீண்ட வரலாற்றில் வலதுசாரிப் பாதையில் கல்வியை பலவந்தமாகத் திருப்பும் முயற்சி ஆகும்.  

சுதந்திரத்திற்கு பின் கல்வி வளர்ச்சியின் அடித்தளம் ராதாகிருஷ்ணன் கமிஷன்  (1948-49): பல்கலைக்கழக கல்வியின் புனரமைப்பு:

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி ஆணையமான ராதாகிருஷ்ணன் கமிஷனை மத்திய அரசு நியமித்தது, ஆனால் அதன் பரிந்துரைகள் மாநி லங்களின் கல்வி உரிமையை வலுப் படுத்தும் திசையிலேயே இருந்தன. இக் கமிஷன் பரிந்துரைத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இன்று வரை உயர்கல்வியின் தரத்தை உறுதிப் படுத்தும் அமைப்பாகச் செயல்படுகிறது. ஆசிரியர்களின் சம்பளம், கல்வி தரம், ஆராய்ச்சி வசதிகள், பெண்களுக்கான கல்வி என அனைத்து அம்சங்களிலும் இக்கமிஷன் முற்போக்கான பார்வை யை வெளிப்படுத்தியது.

லட்சுமணசாமி முதலியார் கமிஷன் (1952-53): இடை நிலைக் கல்வியின் புரட்சி:

டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் தலைமையிலான இடைநிலைக் கல்வி ஆணையத்தையும் மத்திய அரசே அமைத்தது, ஆனால் அதன் பரிந்து ரைகளும் மாநில அரசுகளின் கல்வி உரிமையை வலுப்படுத்தும் திசையில் இருந்தன. சென்னை பல்கலைக்கழ கத்தில் 27 ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றிய லட்சுமணசாமி முதலி யார், இடைநிலைக் கல்வியை மேம் படுத்துவதற்காக விரிவான பரிந்துரை களை வழங்கினார். லட்சுமணசாமி முதலியார் கமிஷன்,  ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவ மான மாநில கல்வி வாரியங்களை அமைக்க வேண்டும் என்றது. தாய் மொழி வழிக் கல்வியை ஊக்குவித்தது. பள்ளிக் கல்வியில் தொழில் சார்ந்த பயிற்சியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியது. பெண் கல்விக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தது. மிக முக்கியமாக, கல்வியில் மத்திய தலை யீட்டை குறைத்து மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்க பரிந்துரைத் தது. இந்த கமிஷனின் பரிந்துரைகள் தான் இன்றைய தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையின் அடித்தளமாக அமைந்தன.

கோத்தாரி கமிஷன்  (1964-66): கல்வியின் தேசிய கட்டமைப்பு

கோத்தாரி ஆணையத்தையும் மத்திய அரசே நியமித்தது, ஆனால் அதன் பரிந்துரைகள் மாநில உரிமை களை மதித்து வகுக்கப்பட்டன. இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் 1968-இன் தேசிய கல்விக் கொள்கையின் அடித் தளமாக அமைந்தன. டாக்டர் டி.எஸ். கோத்தாரி தலைமையிலான இந்த  ஆணையம் கல்வியை “தேசிய முன் னேற்றத்திற்கான மிக சக்திவாய்ந்த கருவி” என்று வரையறுத்தது. கோத்தாரி ஆணையம், கல்வியில் மத்திய அரசின் பங்கு பொருளாதார உதவி மட்டுமே என்றும், கல்விக் கொள்கை வகுப்பதில் மாநில அரசுகளே முழு அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. பொதுவான பாடத்திட்டத்துடன் கூடிய பல்வேறு மொழி வழிக் கல்வியை ஊக்குவித்தது. அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொ டுத்தது. மிக முக்கியமாக, மூன்று மொ ழிக் கொள்கையை ஒரு “நெகிழ்வான பரிந்துரை” என்றே குறிப்பிட்டது, கட்டா யமான திணிப்பு என்று முன்வைக்க வில்லை. கல்வியில் சமூக நீதியை உறு திப்படுத்தவும் வலியுறுத்தியது. ஆனால் இன்று இந்த ஆணையத்தின் மாநில உரிமைகளை வலியுறுத்தும் பரிந்துரை கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, மத்திய அரசின் ஆதிக்கத்தை நிலை நாட்டும் கருவியாக கல்வி மாற்றப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விப் பாதை தமிழ்நாடு இருமொழிக் கொள்கை யை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுத்ததற்கு வலுவான அறி வியல் மற்றும் வரலாற்றுக் காரணங்கள் உள்ளன.  குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சியில் தாய்மொழியின் பங்கு அடிப்படையானது. யுனெஸ்கோவின் கல்விக் குழுவும், மொழியியல் ஆராய் ச்சிகளும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என்பதை நிரூபித்துள்ளன. தாய்மொழியில் அடித்தளம் வலுவாக இருந்தால் மட்டுமே இரண்டாம் மொழி யைக் கற்பதில் வெற்றி பெற முடியும். 1965-இல் இந்தி திணிப்பு எதிர்ப்புப்  போராட்டத்தின் போது தமிழ்நாடு உணர்ந்தது, மூன்று மொழிக் கொள்கை நடைமுறையில் இந்தி பேசும் மாநி லங்களுக்கு சாதகமாகவும், தமிழ் போன்ற செம்மொழிகளை படிப்படி யாக ஒதுக்கித் தள்ளும் கருவியாகவும் செயல்படுகிறது என்பதைத்தான். இந்தப் பின்னணியில் தான், இருமொ ழிக்கொள்கையுடன் கூடிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் அமைந்தது. மேலும், தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை சமூக நீதியை மையமாகக் கொண்டது. இட ஒதுக்கீட்டு கொள்கை மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகள் உறுதி செய்யப் பட்டன.  

தேசிய கல்விக் கொள்கை 2020: புதிய சவால்கள் மூன்று மொழிக்  கொள்கையின் திணிப்பு

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தி உட்பட மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்கள் தனித்துவமான கல்விக் கொள்கையை வெற்றிகரமாகப் பின்பற்றி வரும் நிலையில், இந்த திணிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. தர்மேந்திர பிரதானின் அறிக்கை மத்திய அரசின் அணுகுமுறையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. மாநில அரசுகள் மத்திய கொள்கையை ஏற்க வில்லை எனில் நிதி உதவியை நிறுத்து வதாக மிரட்டல் விடுப்பது கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு முரணானது.

ஆர்எஸ்எஸ் தலையீடு

2021-இல் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை மதிப்பாய்வுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் பங்கேற்றதன் மூலம் கல்விக் கொள்கை வகுப்பில் மதச் சார்பு அமைப்புகளின் தலையீடு தெளிவாக வெளிப்பட்டது. விதந்தா பாரதி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏவிபிவி) போன்ற அமைப்புகளின் பங்கேற்பு கல்விக் கொள்கையை வலதுசாரிக் கருத்தியல் திசையில் திருப்ப முயற்சித்தது. அது இப்போது வேகம் பிடித்துள்ளது. இந்த நிலையில்தான், சமக்ர சிக்சா அபியான் திட்டத்திற்கான நிதி விடு விப்பு தொடர்பான வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனின் கேள்வியும், அதற்கு பிரதான் அளித்த மாநில உரிமைக்கு எதிரான பதிலும் இந்த பிரச்சனையின் சட்டப்பூர்வ மான பரிமாணங்களை வெளிப்படுத்து கிறது. நீதிமன்ற உத்தரவுகளை செயல் படுத்தாமல் இருக்க மத்திய அரசு அரசியல் காரணங்களை முன்வைப்பது நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை இடையிலான உறவுகளை சிக்கலாக்கு கிறது. அரசியலமைப்புச்  சட்ட மீறலும் கல்வியின் மதவாதமாக்கலும் இந்திய அரசியலமைப்பின் 42-ஆவது திருத்தம் (1976) கல்வியை ஒரே நேரத்தில் மாநிலப் பட்டியல் மற்றும் மத்திய-மாநில ஒத்துழைப்புப் பட்டியலில் இடம் பெறச் செய்தது. இது கூட்டாட்சிக் கொள்கையின் அடிப்படை யில் மத்திய-மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசு, இந்த அரசியலமைப்பு விதியை தனது மதவாத நிகழ்ச்சி நிரலுக்காக துஷ்பிர யோகம் செய்கிறது. அரசியலமைப்பின் 25, 26, 28, 29, 30-ஆவது பிரிவுகள் மத சுதந்திரத்தையும், மதச்சார்பற்ற கல்வியையும் உறுதி செய் கின்றன. குறிப்பாக 28-ஆவது பிரிவு அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவ னங்களில் மதக் கல்வியை தடை செய்கிறது. ஆனால் தற்போதைய புதிய கல்விக்கொள்கை 2020, சமஸ்கிருதம் மற்றும் வேதக் கல்வியை ஊக்குவிப்ப தன் மூலம் மறைமுகமாக இந்துத்வ நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது.

வர்க்கப் பார்வையில்  கல்வி அரசியல்

முதலாளித்துவ கல்விக் கொள்கை யின் ஆழமான தாக்கம் புதிய கல்விக் கொள்கையில் தெளிவாக வெளிப் படுகிறது. பொதுத்துறை கல்வியை திட்ட மிட்டு பலவீனப்படுத்தி, தனியார் கல்வித் துறையை வளர்க்கும் நோக்கம் இதில் மறைந்துள்ளது.  கல்வி மேம்பாட்டிற்கான பொது நிதி ஒதுக்கீடு குறைந்து வரும் நிலையில், “புரிந்துணர்வு உடன்படிக்கை”களின் பெயரில் மாநிலங்களின் மீது நிதி அழுத்தம் கொடுப்பது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைக்கிறது. இது குறிப்பாக தலித், பழங்குடி, பிற் படுத்தப்பட்ட சமுதாயங்களின் கல்வி உரிமையைப் பாதிக்கிறது.

வலதுசாரி கல்விக் கொள்கையின் திணிப்பு

மூன்று மொழிக் கொள்கையின் பெயரில் நடத்தப்படும் அரசியல் அணுகு முறை நேரடியாக வலதுசாரி கல்விக் கொள்கையின் வெளிப்பாடாகும். ஒரு மொழியை கட்டாயமாகத் திணிப்பது ஒவ் வொரு மொழிச் சமூகத்தின் இயல்பான வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை வெறும் அரசியல் நிலைப் பாடு அல்ல, அது மொழியியல் அறிவிய லின் அடிப்படையிலான ஒரு முற் போக்கான கல்விக் கொள்கையாகும். ஒரு குழந்தையின் தாய்மொழி வளர்ச்சி முழுமையடைவதற்கு முன்பே மூன் றாவது மொழியை திணிப்பது அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறையாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்விக் கொள்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நீண்ட காலமாக வலியுறுத்தும் அடிப்படைக் கொள்கை - கல்வி முற்றிலும் மாநிலப் பட்டியலில் மட்டுமே இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் மூலக் கருத்தின்படி கல்வி மாநில பட்டியலில் தான் இடம் பெற்றிருந்தது. 1976-இல் 42-ஆவது திருத்தத்தின் மூலம் கல்வியை மத்திய-மாநில ஒத்துழைப்பு பட்டிய லுக்கு மாற்றியது கூட்டாட்சிக் கொள்கை யின் மீதான நேரடித் தாக்குதலாகும். மேலும், ஒவ்வொரு மாநிலத்து மக்களும் தங்கள் தாய்மொழியில் கல்வி பெற வேண்டும். இது வெறும் கல்விக் கொள்கை மட்டுமல்ல, மொழிச் சமூகத்தின் அடையாளம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஜனநாயக உரிமையாகும். எந்தவொரு மொழியையும் மத்திய அரசின் நிர்பந்தத்தால் திணிப்பது எதேச்சதிகார அணுகுமுறையாகும். ஒரு மொழியின் வளர்ச்சி அந்த மொ ழிச் சமூகத்தின் இயல்பான தேவையின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும், மேலிருந்து திணிப்பின் அடிப்படையில் அல்ல.  மொழித் திணிப்பு என்பது வர்க்க ஆதிக்கத்தின் கருவியா கும். இந்தி பேசும் மாநிலங்களின் மேல்வர்க்க நலன்களுக்கு சேவை செய்யும் வகை யில் மூன்று மொழிக் கொள்கை வடிவ மைக்கப்பட்டுள்ளது. இது மற்ற மாநில மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் அணுகுமுறையாகும். ஒவ்வொரு மாநிலத்து மக்களுக்கும் தங்கள் கல்விக் கொள்கையை தாங்களே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது. இந்த உரிமையை மத்திய அரசு பறித்து, ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை திணிப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். கல்விக் கொள்கை வகுப்பதில் ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறி அமைப்பு களின் தலையீட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. கல்வி என்பது மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான, ஜனநாயக மதிப்புகளை அடிப்படையா கக் கொண்டதாக இருக்க வேண்டும் என உறுதிபட வலியுறுத்துகிறது.

கல்வியின் வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல்

சுதந்திர இந்தியாவின் கல்விக் கொள்கைகள் ஜனநாயக சக்திகளின் அழுத்தத்தின் கீழ் உருவான முற் போக்கான விளைவுகளாகும். ஆனால் பெருமுதலாளித்துவத்தின் வர்க்க நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாஜக அரசு, இந்த ஜனநாயக சாதனை களை திட்டமிட்டு அழிக்க முயற்சிக்கிறது. கல்வியில் சமூக நீதியை நிலை நாட்டிய இட ஒதுக்கீடு, மதச்சார்பற்ற பாடத்திட்டம், அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கல்வி முறை - இவை அனை த்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்ட போ ராட்டத்தின் பலனாகும். இவற்றை அழிப் பது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு எதிரான நேரடித் தாக்குதலாகும். சர்வதேச முதலாளித்துவத்தின் கல்விக் கொள்கை உலகமயமாக்கல், தனியார்மய மாக்கல், தாராளமயமாக்கல் என்ற முத லாளித்துவ  -நவீன தாராளமயப் பின்ன ணியில் தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச முதலாளித்துவ நிறுவனங்க ளின் கல்விக் கொள்கைகள் இதில் வெளிப்படையாக பிரதிபலிக்கின்றன. கல்வியின் வணிகமயமாக்கல், தனி யார்மயமாக்கல், பொதுத்துறை கல்வி யின் சிதைவு - இவை அனைத்தும் உலகமயமாக்கலின் கல்விக் கொள்கை யின் வெளிப்பாடுகளாகும். அத்துடன், பாஜகவின் கட்சியின் கருத்தியல் அடித்தளமான ஆர்எஸ் எஸ்ஸின் மதவாத கல்விக் கொள்கைக ளும், தேசிய கல்விக் கொள்கை 2020-இல் நேரடியாக அமல்படுத்தப் படுகின்றன. 2024-இல் வெளியான அல் ஜசீரா ஆய்வறிக்கை, எப்படி ஆர்எஸ்எஸ் பாடப் புத்தகங்கள் இந்திய வரலாற்றை யும் அறிவியலையும் மோடி அரசின் கீழ் மறுவடிவமைத்து வருகிறது என்பதை விரிவாக எழுதியுள்ளது. மாபெரும் போராளிகளின் பங்களிப்புகளை குறைத்துக் காட்டுவதும், இந்துத்வ சித் தாந்தத்தை மகிமைப்படுத்துவதும் இந்த புத்தகங்களின் மூலம் செய்யப் படுகிறது. தொழில்நுட்பக் கல்வி, திறன் மேம் பாட்டுக் கல்வி என்ற பெயரில் தொழிலா ளர்களை திறமையான கூலிகளாக உரு வாக்கும் நோக்கம் இதில் மறைந் துள்ளது. உண்மையான அறிவுத் தேடல், விமர்சன சிந்தனை, சமூக உணர்வு ஆகியவற்றை வளர்க்கும் கல்வி முறை க்குப் பதிலாக சந்தைக்கு ஏற்ற “மனித வளம்” உற்பத்தி செய்யும் கல்வி முறை யை திணிக்க முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டின் எதிர்ப்பும் மாற்று வழியும்

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை வெறும் நிர்வாக முடிவு அல்ல, அது நீண்ட நெடிய சமூக நீதிப் போராட்டத் தின் பலனாகும். இந்த போராட்டத்தின் முக்கிய சாதனைகள்: தமிழ்மொழியின் வளர்ச்சி, சமூக நீதி, பெண் கல்வி, அறிவியல் சிந்தனையின் வளர்ச்சி, மதச் சார்பற்ற கல்வி, இவை அனைத்தும் இன்று பாஜக அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கல்வியின் மீதான மத்திய அரசின் தாக்குதல் வெறும் நிர்வாகப் பிரச்சனை அல்ல, அது வர்க்கப் போ ராட்டத்தின் ஒரு முக்கியப் பரிமாண மாகும். கல்வியை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆளும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்பு இந்த வர்க்கப் போராட்டத்தில் ஒரு முக்கிய மான கூறாகும். மதச்சார்பற்ற, ஜன நாயக, அறிவியல்பூர்வமான கல்வியை காப்பாற்றுவது, சமூக நீதியை நிலை நாட்டுவது, மொழி உரிமைகளை பாதுகாப்பது - இவை அனைத்தும் இன்றைய அவசரத் தேவைகளாகும். சுதந்திரத்திற்குப் பின்னான கல்வி வளர்ச்சியின் முற்போக்கான சாதனை களை காப்பாற்றுவதும், அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதும் இன்றைய ஜனநாயக சக்திகளின் வரலாற்றுப் பொறுப்பாகும். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தேசிய அளவில் ஒரு முக்கியமான வழி காட்டலாக அமையும்.