நம்புவது கடினம் என்றாலும் உண்மை. நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பு பூமி பனிப் பந்து (snowball) போல மாறியது. பூமி முழுவதும் உறைந்து போனது. இதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். சுமார் எழுநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்தது. வளி மண்டலத்திற்கு ஆவியாகச் செல்லும் நீர் என்ற திரவம் காணப்படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் கூட சிறிய கடல், ஏரிகள் அப்போது இருந்ததற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. தாவரங்கள் இல்லாமல் இருந்த சூழ்நிலை, பிரம்மாண்ட மான எரிமலை வெடிப்புகள் பூமியை ஒரு ஒற்றை ராட்சத பனிப் பந்தாக மாற்றியது. இவ்வாறு நிகழக் காரணம் என்ன? குளிர்ந்த காலநிலை மற்றும் பெருவாரியான எரிமலை வெடிப்புகள் இதற்கு காரணம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. பிராங்க்ளின் (Franklin) வெடிப்புகள் என்று அழைக்கப்படும் இந்த வெடிப்புகள் சுமார் 72 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்நிகழ்வு இன்றுள்ள அலாஸ்கா, வடக்கு கனடா முதல் கிரீன்லாந்து வரை புதிய பாறைகளை கக்கியது. இதேபோன்ற பெரிய வெடிப்புகள் மற்ற காலகட்டங்களிலும் நடந்துள்ளன. ஆனால் இந்நிகழ்வு ஏற்கனவே குளிர்ச்சியான காலநிலை இருந்த நேரத்தில் நடந்தது. அப்போது தாவரங்கள் பரிணாமம் அடைந்து தோன்றவில்லை. அதனால் இந்த பெரு வெடிப்புகள் பாறைச் சிதைவிற்கு வழிவகுத்தது. இந்தச் சிதைவுகள் தொடர்பாக நடந்த வேதிவினைகள் காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை முற்றிலும் நீக்கியது. காலநிலை தாக்கத்தின் மாதிரிகளை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது ஒட்டுமொத்த பூமி போன்ற பெரும் பரப்பில் நிகழ்ந்த வேகமான அரிப்புகள் கார்பன் டை ஆக்சைடை இல்லாமல் செய்து பூமியை ஒரு பனிப்பந்து நிலைக்கு சுருக்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு புவி இயற்பியல் ஆய்வு- கோள்கள் (Geophysical Research: Planets) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. முன்பும் பூமியின் வரலாற்றில் இது போன்ற வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றாலும் அப்போது வெப்பமான காலநிலை நிலவியது. அல்லது உருவான தாவரங்களின் பரப்புகள் வெடிப்புகளின் வேகத்தைக் குறைத்தது. அதனால் பூமி பனிப்பந்து போல மாறவில்லை. இந்த கண்டுபிடிப்பு பூமியின் வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தை அறிய உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
