தகுதி இல்லாதவர்களின் ஓலமும், ஜனநாயகக் காவலர்களின் தொடர் போராட்டமும்!
“1975ஆம் ஆண்டு முதல் 77ஆம் ஆண்டு வரை 21 மாதங்கள் வரை ஏராளமானவர்கள் சித்ரவ தைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், மிசா சட்டத்தில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற நிலை காணப்பட்டது” என்று பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலைக் காலத்தைப் பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 11 ஆண்டு மோடி ஆட்சி இந்திராகாந்தி அம்மை யாரின் அவசரகால ஆட்சியைவிட மோசமானது. எனவே காங்கிரஸ் கட்சியின் அவசரகால ஆட்சியைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு தகுதியில்லை.
போராடியவர்களும் கெஞ்சியவர்களும்
1975ஆம் ஆண்டு அவசர கால ஒடுக்குமுறை பிறப்பிக்கப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஜெயபிரகாஷ் நாரா யணன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கேரளத்தில் அப்போது கைது செய்யப்பட்டு, காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்ட தலைவர்தான் இன்றைய முதலமைச்சர் பினராயி விஜயன். லாக்கப்பில் காவல்துறையினர் கடுமையாக தாக்கினார்கள். அடுத்து நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினரான பினராயி விஜயன் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் பங்கேற்றுப் பேசினார். அதை போல் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டார். அவசர நிலைக் காலத்தின் போது ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. தொழிற்சங்க இயக்கத்தை ஒடுக்குவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஆணை பிறப்பித்தது. மனித உரிமைகள் பறிக்கப்பட்டன. இத்தகைய மோசமான அவசரகால ஒடுக்குமுறையை எதிர்த்து மக்கள் மத்தி யில் ஏற்பட்ட மகத்தான எழுச்சியால் அவசரநிலை முறியடிக்கப்பட்டது. அவசர நிலையின் போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அரசிடம் விடுதலை செய்யுமாறு கெஞ்சினார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சி கள் அவசர காலத்தை எதிர்த்து உறுதியாகபோராடின.
சிறையில் இருந்த பத்திரிகையாளரின் கூற்று
காங்கிரஸ் ஆட்சியின் அவசர காலத்தைக் கண்டித்து கடுமையாக சாடியுள்ள மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்து வருகிறது என்பதுதான் கேள்வி. அவசர நிலை காலத்தின் போது ஓர் ஆண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் பிரபீர் புர்காயஸ்தா, தற்போதைய மோடி ஆட்சியை விமர்சித்ததால் கைது செய்யப் பட்டு ஏழரை மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். “போராட்டம் தொடர்கிறது” என்ற தனது நூலில் காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலைக்கும் மோடி ஆட்சி யின் அறிவிக்கப்படாத அவசர நிலைக்கும் உள்ள வேறுபாட்டை இவ்வாறு விளக்கியுள்ளார்: “அப்போ தைக்கும் இப்போதைக்கும் உள்ள மற்றொரு வித்தி யாசம் என்னவென்றால், இன்று நம் மதச்சார்பற்ற நெறி முறைகள், கலாச்சாரம், கல்வி மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் மீது நாம் காணும் தொடர்ச்சியான மற்றும் பல்வேறு வகையான தாக்குதல்கள். இது நிச்சயமாக ஒரு இந்து ராஷ்டிராவை கட்டியெழுப்பும் சித்தாந்த உந்துதல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த இந்து ராஷ்டிரா என்பது நமது பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட - அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் பார்வையுடைய தேசம் என்பதுடன் எந்த தொடர்பும் இல்லாதது”
வேறுபாடு என்ன?
இந்துத்துவா - இந்துராஷ்டிராவை முன்னிறுத்தும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் சுதந்திரத்திற்காக போராடியதில்லை. அவர்களது போராட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது. இந்தியா வில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள். பெருமுதலாளிகளுக்கு எதிராக உழைப்பாளிகள் நடத்திய போராட்டத்தையும்; காங்கிரஸ் ஆட்சி யின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்களையும் ஒடுக்கிட கொண்டு வரப்பட்டதுதான் அன்றைய அவசர நிலை பிரகட னம். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமோ, மதரீதியான முறையில் மக்களை பிளவுபடுத்துகிற அணுகுமுறையோ காங்கிரசுக்கு இருந்ததில்லை. ஆனால் இன்று பாஜகவுடைய அறிவிக்கப்படாத அவசர நிலை என்பது இந்துத்துவா இந்து ராஷ்டிரா சித்தாந்தத்தின் அடிப்படையிலானது. மோடி தலைமை யிலான ஆட்சியை கார்ப்பரேட் - மதவெறி கூட்டணி அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரையறை செய்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நலன் களைப் பாதுகாப்பதோடு, இந்தியாவை இந்து ராஷ்டி ரமாக மாற்றுவது என்பதே அவர்களுடைய நீண்ட கால திட்டம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக, கடந்த 11 ஆண்டுகாலமாக அரசு நிர்வாகத்தின் கட்ட மைப்பையே முற்றிலும் மாற்றி வருகிறார்கள். பாஜக என்பது பத்தோடு பதினோராவது கட்சி அல்ல. பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படுவது தான் மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த மோடி அரசுக்கு தலைமையகம் தில்லி அல்ல, நாக்பூர்.
எத்தனையெத்தனை தாக்குதல்கள்
அரசின் செலவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அதை திறக்கும் நிகழ்ச்சியில் பிரதமரே மதச் சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்; வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியும், மதுராவில் அமைந்துள்ள ஈத்தா மசூதியையும் குறிவைக்கிறார் கள்; இப்பிரச்சனை எழுந்தபோது, 1991 ஆம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் சட்டத்தின்படி 1947க்கு முன்னதாக இருந்த வழிபாட்டு நிலைமைகளை கேள்விக்குறி யாக்கக் கூடாது என்ற சட்டத்திற்கு - முரணான ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்தார். இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி பல மசூதி களை தகர்க்க பாஜகவினர் முயன்று வருகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்பை பாஜக ஆயுதமயமாக்கியுள்ளது. பயங்க ரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA), சட்ட விரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டம் (PMLA) உள்ளிட்ட பல சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க் கட்சிகளைச் சார்ந்தவர்களை, ஊடகவியலாளர்களை, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை, பொதுவாக மோடி அரசை விமர்சிப்பவர்களை சிறையில் அடைத்து ஆண்டுக்கணக்கில் வெளிவரமுடியாமல் செய்துள்ளனர். நீதித்துறையை வளைக்கும் நோக்கத்தோடு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நீதிமன்றங்க ளில் தலையீடு, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு அமலாக்க மறுத்து வருகிறது. தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பா வையாக மாற்றப்பட்டுவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கலைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுவிட்டது. கலாச்சார ஆராய்ச்சி நிறுவனங்களில் தன்னுடைய ஆட்களை ஊடுருவல் செய்வதன் மூலம் ஆர்எஸ்எஸ் பிடி அதிக ரித்துள்ளது. அவர்கள் இந்திய வரலாற்றை வகுப்புவாத கண்ணோட்டத்தில் மாற்றி எழுதவும், புராணங்களை உண்மையான வரலாறுகளாகவே திரிக்கவும் முயற்சி மேற்கொள்கின்றனர். இதன் அடிப்படையில் தான் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு மறுக்கிறது. பீமாகோரேகான் வழக்கில் பொய்யான குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பலர் இன்னும் சிறையில் வாடி வருகின்றனர். இப்பிரச்சனையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி ஜாமீன் கிடைக்காமல் சிறையிலேயே இறந்துவிட்டார். பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு மாணவர் உமர் காலித் விசார ணையின்றி பல ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. எதிர்க்கட்சி களின் உறுப்பினர்களின் குரல்வளை நெரிக்கப்படு கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டுத் தான் பல சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
பாசிசத்தன்மையோடு...
பாஜக அரசு பல நிறுவனங்களை ஆக்கிரமித்து வருகிறது. வக்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமி யர்களின் நிறுவனங்களை ஒன்றிய பாஜக அரசு ஆக்கிரமித்துள்ளது. அகில இந்திய அளவில், மாநில அளவில் பார்கவுன்சிலை ஆக்கிரமிப்பதற்காக பார் கவுன்சில் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் வழக்கறிஞர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது. ‘தேச விரோதச் செயல்கள் தொடர்பான சட்டத்தை’ முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறியது. இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி ஆங்கி லேயர் காலத்தில் இருந்ததைவிட மோசமான சட்டமாக மாற்றியுள்ளது. சினிமாட்டோகிரோபி என்ற மத்திய சட்டத்தை திருத்தி, சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கி னாலும் அந்த திரைப்படத்தை ரத்து செய்யும் அதி காரத்தை அரசுக்கு கொடுத்தது. இதன் மூலம் கருத்துச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற தங்க ளது செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக மத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்கும் நோக்கத்தோடு மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு கூட்டாட்சி கோட்பாடு சீர்குலைக்கப்படுகிறது. மொத்தத்தில் மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி கோட்பாடு, சுயசார்பு பொருளாதார கொள்கை ஆகிய விழுமியங்க ளை மோடி அரசு தகர்த்து வருவது என்பது, பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அப்பட்டமான நட வடிக்கைகளே ஆகும். 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரகடனப் படுத்திய அவசர நிலையை எதிர்த்து நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சியினால் அவசர கால அடக்குமுறை ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது இந்திரா காந்தி ஆட்சி காலத்தின் அவசர நிலையைவிட பாசிசத் தன்மை கொண்ட இந்துத்துவா- இந்து ராஷ்டிரா ஆட்சியை நிர்மா ணிக்க முயற்சிக்கும் பாஜகவுக்கோ பிரதமர் மோடிக்கோ காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலை காலத்தைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. மாறாக, இன்றைக்கு அவசர நிலையின் 50 ஆண்டுகள் நிறைவைப் பற்றி, அக்காலத்தில் அடக்கு முறையை எதிர்கொண்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்து, சித்ரவதைகளையும் அனுபவித்து, மக்களைத் திரட்டி போராடிய சக்திகள் உயிர்ப்போடு அந்த அனுப வங்களை பேசுகின்றன. அதே வேளையில் அன்றைக்கு இந்திய ஜனநாயகத்தை சூழ்ந்த இருளைப் போக்க பாடுபட்ட, போராடிய அதே சக்திகள் தான் இன்று அதைவிட மிகப் பெரும் ஆபத்தாக - இந்தியத் தேசத்தையே ஒட்டுமொத்த இருளில் தள்ளக்கூடிய பாசிச அபாயத்திலிருந்து - ஆர்எஸ்எஸ்- பாஜகவின் கொடிய ஆட்சியிலிருந்து தேசத்தையும், மக்களையும் பாதுகாக்கிற மாபெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்தப் போராட்டம் நிச்சயம் வெல்லும்.