articles

img

தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை திங்களன்று (மார்ச் 20) காலை 10 மணிக்கு கூடியது. 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். முன்னதாக, நிதிநிலை அறிக்கையின் கணினியை முதலமைச்சருடன் பேரவைக்குள் கொண்டு வந்தார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டி வரவேற்றனர்.

8 நகரங்களில் சங்கமம் கலை விழா

 நம் கலைப் பண்பாட்டினை இளைய தலைமுறையினர் அறிந்து, மகிழும் வகையில், சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு  முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாட்டுப்புறக்  கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களின் பகிர்வினைக் கொண்டாடுவதற்கும் நல்வாய்ப்புகளை இவ்விழாக்கள் ஏற்படுத்தும். இதற்காக ரூ. 11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் 30,122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடை யும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 500 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச புத்தகக் கண்காட்சி

தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

தமிழில் அம்பேத்கர் படைப்புகள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை களைப் பரப்புவதற்காக தமிழ் வளர்ச்சி  மற்றும் பண்பாட்டு துறை சார்பாக, அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்காக ரூ.5 கோடி மானியமாக வழங்கப்படும்.

தமிழ்க் கணினி மாநாடு

தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ்மொழியில் பெரு மளவில் மென்பொருட்கள் உரு வாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும். கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர்  பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங் களை எடுத்தியம்பும் வகையில், தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்தப் பயணங்கள், நம் இனத்தின்  செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட் கள், உணவு வகைகளை வெளிக் கொணர்வதோடு, தமிழ்நாட்டின்  புகழை எட்டுத்திக்கும் பரப்பும். 

தாள முத்து-நடராசன் நினைவிடம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த  மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறையின் சார்பாக  சென்னையில் நினைவிடம்  அமைக்கப் படும். தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற் கொண்டு வயது முதிர்ந்த தமிழ் அறிஞர் கள் 591 பேருக்கு மேலும் கட்டணமில்லா  பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கும்.

துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி, உயர்கல்வித் துறைக்கு ரூ. 6,967 கோடி, மருத்துவத்துறைக்கு ரூ. 18,661 கோடி,  ஆதிதிராவிடர் நலத்துறை ரூ. 3,513 கோடி,   மாற்றுத் திறனாளி நலத்துறைக்கு ரூ. 1,444 கோடி, பிற்பட்டோர்  நலத்துறைக்கு ரூ. 1,580 கோடி, கூட்டுறவுத் துறை ரூ. 16,262 கோடி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ரூ. 1,248 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ. 22,562 கோடி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 24,476 கோடி.  நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 19,465 கோடி, மீனவர் நலனுக்கு ரூ. 389 கோடி, போக்குவரத்து துறை ரூ. 8,056  கோடி, சிறு-குறு நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ. 1,509 கோடி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ. 13,963 கோடி, தொழில் துறைக்கு ரூ. 3,268 கோடி,  மின் திட்டங்கள்  ரூ. 77,000 கோடி, சமூக நலத்துறை ரூ.5,346 கோடி என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களுக்கு நிதி

இவைத் தவிர, அண்ணல் அம்பேத்கர் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி, காலை உணவு திட்டத்திற்கு ரூ. 500 கோடி,  பள்ளி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 1,500 கோடி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க ரூ. 30,000  கோடி, பொது விநியோகம், உணவு திட்ட மானியத்திற்கு ரூ. 10,500 கோடி. விவசாயம் மற்றும் நகை கடன் தள்ளுபடிக்கு ரூ. 3,993 கோடி, கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 2000  கோடி, கோவை செம்மொழி பூங்காவுக்கு ரூ. 172 கோடி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2 ஆம் கட்டப் பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 7,149 கோடி. கிராமங்களில் நீர்நிலைகள் புதுப்பிப்பதற்கு ரூ. 800 கோடி, சென்னையில் கூவம் அடையாறுகளை மறு சீரமைப்பு செய்ய ரூ. 1,500 கோடி, சென்னை மெட்ரோ ரூ. 10,000 கோடி, கோவை மெட்ரோ ரூ. 9,000 கோடி மதுரை  மெட்ரோ ரூ. 8,500 கோடி. பள்ளி மாணவர் இலவச பேருந்து பயண திட்டம் ரூ. 1,500 கோடி மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு ரூ. 2,800 கோடி, அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம் ரூ. 1000 கோடி, சென்னை வெள்ளத்தடுப்பு ரூ. 320 கோடி, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ. 7,000 கோடியும் இந்த  பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியுடன் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட துறை பள்ளிகள் இணைப்பு

அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்பு களால் அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை  கடந்த இரண்டு ஆண்டுக ளில் கணிசமாக உயர்ந் துள்ளது. எனவே, வரும்  நிதியாண்டில், புதிய வகுப் பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம்  ரூ. 1500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். எண்ணும் எழுத்தும்  திட்டத்திற்கு கிடைத்த வர வேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் ரூ.110 கோடியில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரைவுப்படுத்தப்படும். அனைத்து மாணவர்க ளுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி  செய்வதை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் நலத்துறை, இந்து  சமயம் மற்றும் அறநிலையங் கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறை களின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்க ளும் பாதுகாக்கப்படும்.

கலைஞர் நூலகம்  ஜூன் மாதம்  திறப்பு

மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும்  நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு  வருகிறது. குழந்தைகள், மாண வர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள், குடும்பத்தலைவி, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகை யில், இந்த நூலகம் அமைக்கப் பட்டு வருகிறது. குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான நூலகச் சூழல், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு, பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென் தமிழகத்தின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கலை அரங்கம் மற்றும் மறைந்த முதல்வர் கலைஞரின் படைப்புகள், பேச்சுகள் இடம்பெறும் வகையில் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம்பெற்றிருக்கும். முதற்கட்டமாக இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்பு களில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாக திகழப்போகும் இந்நூலகம் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரைத் தாங்கி வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும். வரவு, செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் 

கடல் பல கடந்து, சமர் பல வென்று இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப்பேரரசு. தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப் பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.

ரூ.1000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், பாதுகாப்பான, தர மான தங்குமிட வசதிகளை வழங்க வும், மதுரை, கோவை, திருச்சி, நீல கிரியில் புதிய விடுதிகள் நவீன வசதி களுடன் ரூ. 100 கோடியில் கட்டப் படும்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினருக்கான துணைத் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை ஏற்று,  இத்துணைத் திட்டத்தின் செயல் பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும். நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டு களில் 1,000 கோடியில் செயல்படுத் தப்படவுள்ளது. புதிரை வண்ணார்கள் நல  வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து,  வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக் கைகள், நலப் பணிகளை மேற் கொள்ள ரூ. 10 கோடி வழங்கப் படும்.

பத்திரப்பதிவு கட்டணம்  குறைப்பு

நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க பதிவு கட்டணத்தை 4 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8.6.2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழி காட்டி மதிப்பில் 5 விழுக்காடு முத்திரைத் தீர்வை, 2 விழுக்காடு சொத்து மாற்று வரி மற்றும் 2 விழுக் காடு பதிவுக் கட்டணம் செலுத்த  வேண்டும். குடும்ப உறுப்பினர்க ளுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 விழுக்காடு முத்தி ரைத் தீர்வை, 2 விழுக்காடு பதிவுக்  கட்டணம் செலுத்த வேண்டும். இந்த  நடவடிக்கைகள் எளிய, நடுத்தர  மக்களுக்கு, குறிப்பாக வங்கிக்  கடன் மூலம் வீடு வாங்குபவர்க ளுக்கு பெரிதும் பயனளிக்கும்.

சென்னையில் அதிநவீன விளையாட்டு அரங்கம்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும். இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும். இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.  நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்த வெளி விளையாட்டு அரங்கம் ரூ.25 கோடியில் விரிவாக சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்கு, பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள்  கட்டப்படும் என  அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் ரூ. 223 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கும்.

அடுத்த ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழ்நாடு, கடந்த 2 ஆண்டு களாக தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மே மாதம்  முதல் இதுவரை 3,89,651 பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இவற்றின் மூலம் ரூ. 2,70,020 கோடிக்கான முதலீடுகள் பெறப்படும்.  இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 10, 11 நாட்களில் சென்னையில்  நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சி யில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1,44,028 கோடி  ரூபாய் முதலீட்டில் 2,14,478 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இலவச ‘வை-பை’ 

இன்றைய இணைய உலகத்தில்,  தகவலே ஆற்றலுக்கும் அதிகாரத் திற்கும் அடித்தளம். எனவே, முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச ‘வை-பை’  சேவைகள் வழங்கப்படும்.

தரவுத்தளம்

உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 1,763 கோடியில் மாற்றுத் திறனாளி களுக்கான உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்பு களை அமைத்து, தொழில் பயிற்சி மூலம்  வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இத்திட்டம், 2023-24 ஆம் ஆண்டில்  15 மாவட்டங்களில் செயல்படுத் தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப  நிலை சிகிச்சை போன்ற சேவைகளை  கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங் கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும். மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார் வலர்களைக் கொண்ட 150 மையங் கள் உருவாக்கப்படும்.

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டில் திறப்பு

* கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கலைஞர்  நினைவு பன்னோக்கு மருத்துவ மனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு ரூ. 993 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

* ரூ.1,020 செலவில் மதுரை, கோவை, சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டுவரும் புதிய உயர் மருத்துவக் கட்டடங்களும் விரை வில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

* திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு  செய்து வரும் மகாத்மா காந்தி  நினைவு அரசினர் மருத்துவமனை யில் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* வட சென்னை மக்களின் மருத்து வத் தேவையை நிறைவு செய்யும்  வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்து வப் பிரிவும், செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டிடங்களும் ரூ.147 கோடி செலவில் கட்டப்படும்.

* கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 410 கோடியில் புதியதாக தொழிற் பூங்கா அமைக்கப்படும். * ரூ.800 கோடி செலவில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.

* கடல் அரிப்பை தடுக்கவும்,கடல் மாசுப்பாட்டை குறைக்கவும் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் தமிழ்நாடு ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டம் ரூ.2000 கோடியில் செயல்படுத்தப்படும்.

* ஈரோடு மாவட்டத்தில் 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை  பெரியார் வனவிலங்கு சரணாலயம்”  அமைக்கப்படும். * மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.30,000 கோடி கடன்  வழங்கப்படும்.

* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.434 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள். * 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2,783 கோடியில் திறன்மிகு மையங்க ளாக மாற்றப்படும்.

* தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

* கைத்தறி பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீன தொழில் நுட்பங் களை பயன்படுத்தவும், சந்தைப் படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்த வும், ரூ.20 கோடி செலவில் 10 சிறிய  கைத்தறிப் பூங்காக்கள் நிறுவப் படும்.

* நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க ரூ.38.25 கோடி செலவில் மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலை யங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.

* பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப் பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. * பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய  திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடியில் மேற்கொள்ளப் படும்.

* 1000 புதிய பேருந்துகள் வாங்கப் படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும். * அரசுப் பணியாளர் வீடு கட்டுவ தற்கான முன் பணம் ரூ.50 லட்சமாக  அதிகரிக்கப்படுகிறது.

* புதிதாக ஒரு லட்சம் பேருக்கு முதி யோர் உதவித் தொகை வழங்கப் படும்.

* மதுரையில் ரூ.8500 கோடி செல வில் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்தப்படும். கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை  ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.



 





 

 




 


 

;