articles

img

ஸ்கேன் இந்தியா

ஆர்வம்

மேற்கு வங்க அரசியலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பணம் விளையாடுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், துர்கா பூஜை பந்தல்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தலா 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை தருகிறார்கள். வடக்கு மாவட்டங்களில் இவ்வாறு பணம் தருவது இதுதான் முதல்முறை என்கிறார்கள். கூச்பிகார் (தெற்கு) தொகுதியில் மட்டும் 200 பந்தல் அமைப்பாளர்களுக்குப் பணம் தந்துள்ளனர். கட்சி சார்பில் நடத்தும் ஊர்வலங்களில் பங்கேற்றால் அதற்குத் தனியாகப் பணம் தருகிறார்கள். கூச்பிகார் மாவட்டத்தைக் குறிவைத்துப் பாஜகவும் இத்தகைய செலவுகளைச் செய்கிறது. மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து வரும் இடதுசாரிகள் வழக்கம் போல்  புத்தக விற்பனை மையங்களை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டைவிட இப்போது புத்தகங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

மோசடி

“கற்பனையானது; புனையப்பட்டது; கூடுதல் தகவல்கள் என்ற பெயரில் மசாலா; செயற்கையான சாட்சி; சந்தேக மேகங்கள் சூழ்ந்த அடையாளம் காட்டுதல்; தலையில் கட்டப்பட்ட வழக்குகள்...” . தில்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் பல வழக்குகளில் மேற்கூறிய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. இதுவரையில் மொத்தம் 93 பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அந்த 93 பேர் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுள்ள இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், காவல்துறையினரின் மோசமான செயல்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. 93 பேரில் 17 பேர் மீதான ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்று நீதிமன்றம் விளாசியிருக்கிறது. நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கை தகரும் வகையில் காவல்துறை நடந்து கொள்கிறது என்று நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

பயம்

மகாராஷ்டிராவில் தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறார்கள். இதுதான் கடைசி முறையாக நாங்கள் விசாரிக்கிறோம் என்று பொரிந்து தள்ளிய உச்சநீதிமன்றம், எந்தக் காரணமும் சொல்லாமல் ஜனவரி 31, 2026க்குள் தேர்தலை நடத்தி முடியுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை ஆறு மாதங்களுக்குக் கொடுத்து, வாக்குகளைப் பெற்ற பாஜக கூட்டணி, பெரும்பாலான பயனாளிகளைத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி நீக்கி விட்டது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தோல்வி உறுதி என்பதால்தான் வார்டு மறுசீரமைப்பு என்று சொல்லிக் காலம் கடத்துகிறார்கள். மீண்டும் உரிமைத்தொகை கொடுத்தால் என்ன என ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் முனகத் தொடங்கியுள்ளனர்.

குமுறல்

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சக ஊழியர்களிடம் அவரவர் ஊதியங்களை சொல்லிக் கொள்வதில்லை. நேர்முகத் தேர்வின்போதே இது குறித்து அறிவுறுத்தப்படும். சிலரை சோதிப்பதற்காகக் கேட்க வைத்து, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உண்டு. ஒரு மேலதிகாரி ஊதியம் பற்றிக் கேட்டதும், இரண்டு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தைச் சொல்லிவிட்டனர். அதிகாரிக்கோ அதிர்ச்சி... இருவருக்கும் அவரை விட அதிகமான ஊதியம்.  சமூக வலைத்தளம் ஒன்றில் குமுறி விட்டார். மனித வள மேம்பாட்டுத்துறையினர் மத்தியில் இது விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. அவர்கள் இருவரும் “பெரிய” நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள் என்ற வாதம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.