போராடுபவர்கள்தான் உண்மையான அறிவாளிகளாக மாற முடியும்
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் அத்தியாயமே மாணவர்களால் எழுதப்பட்டது. காங்கிரஸின் காசி மாநாட் டில் திலகர் தலைமையிலான தீவிரவாதிகளும் கோகலே தலைமையிலான மிதவாதிகளும் மோதிய போது, தமிழ்நாட்டின் மகத்தான தலை வர்கள் வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோர் நடத்திய போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் சென்னை கல்லூரி மாணவர்கள். “சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை” என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்தவர்கள் மாணவர் கள்தான். 1940களில் தேசிய பாதுகாப்பு சட்டத் தின் கீழ் தென்தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட 146 பேரில் 112 பேர் மாணவர்கள் என்பது வர லாற்றின் பொன்னெழுத்துகள். மதுரை அமெ ரிக்கன் கல்லூரியிலிருந்து தொடங்கி எல்லா கல்வி நிலையங்களும் விடுதலைப் போராட்ட மையங்களாக மாறின. அதே போல, 1960களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டின் தனித்து வத்திற்கு அடித்தளம். பச்சையப்பன் கல்லூரி, சென்னை கல்லூரி, கோவை, மதுரையின் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் பேரி யக்கமாக இது விளங்கியது. பின்னர் அரசியல் கட்சிகள் இதை தங்கள் வயப்படுத்திக் கொண்டன.
நாட்டின் அவலநிலை
இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களின் மீது 50% வரி விதித்துள் ளார். இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப் படும் மாநிலம் தமிழ்நாடு. குறிப்பாக கோயம் புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய பகுதி களின் ஜவுளித் தொழில்கள் முடங்கி நிற் கின்றன. இதிலிருந்து தொழில்களைக் காக்க மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மோடி ஆட்சி வரும் முன்பு ரிலையன்ஸ் நிறு வனம் ரஷ்யாவிடமிருந்து வெறும் 3% பெட்ரோ லியப் பொருட்களை வாங்கியது. இன்று 50%க் கும் அதிகமாக வாங்கி, சுத்திகரித்து ஐரோப்பா விற்கு விற்கிறது. ரஷ்யாவின் விலை மலிவான எண்ணெய்யால் நமது மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை; மாறாக லாபம் எல்லாம் அம்பானி, அதானிக்குப் போகிறது.
துணை ஜனாதிபதியின் கதி
முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் என்ன ஆனார்? மதியம் 2 மணிக்கு நாடாளு மன்றத்தில் இருந்து வீட்டிற்குப் போனார். அதற்குப் பிறகு இன்று வரை அவர் எங்கே இருக் கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. மாநி லங்களவை வரலாற்றில் மிகவும் மோசமான துணை ஜனாதிபதியாக எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்தியவர் தன்கர். அவ்வளவு விசுவாசமானவருக்கே இந்த கதி. இன்றைக்கு எதிர்க்கட்சிகளுக்கு என்ன வேலை? 65 லட்சம் வாக்காளர்களைக் காண வில்லை - அதற்காக குரல் கொடுக்க வேண்டியி ருக்கிறது. துணை ஜனாதிபதியைக் காண வில்லை - அதற்காகவும் குரல் கொடுக்க வேண்டி யிருக்கிறது. இவ்வளவு மோசமான நிலையில் நாடு இருக்கிறது.
தன்னாட்சி அமைப்புகளின் சீரழிவு
நாட்டின் அனைத்து தன்னாட்சி அமைப்பு களும் இன்றைக்கு சீரழிக்கப்பட்டுவிட்டன. தேர்தல் ஆணையத்தின் மூன்று பேர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்தீர்களா? ஒரு அம்மாவுக்கு வயது 124, முதல் முறையாக வாக்களிக்க வருகிறார் என்று சொன்னார்கள். ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குகள் காணாமல் போயின. லட்சக்கணக்கான வாக்கா ளர்களின் வீட்டு முகவரி “சைபர்” என்று இருக்கி றது. லட்சக்கணக்கானவர்களின் பெயர் “ABCD” என்று இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு சிஏஜி அறிக்கை ஒன்று வந்தது. பிரதமர் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் பலருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டிருக்கி றது. அதில் சுமார் 10 லட்சம் பேர் 15 ஆண்டுகளு க்கு முன்பே இறந்துவிட்டவர்கள். இன்னொரு பட்டியலில் 1820, 1824ல் பிறந்தவர்களுக்கு 2023ல் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டி ருக்கிறது. இன்றைக்கு தேர்தல் ஆணையம் அதையே செய்துகொண்டிருக்கிறது. இன்று புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் நீட் தேர்வு மூலம் கல்வியின் ஜன நாயகத் தன்மை கொல்லப்படுகிறது. போன வாரம் கோயம்புத்தூரில் நடக்க வேண்டிய ஒன்றிய அரசின் தேர்வு மையம் ரத்து செய்யப் பட்டு மாணவர்கள் ஹைதராபாத், பெங்களூரு என அடுத்தடுத்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவில் தேசிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத் தில் பங்கேற்ற 29 எம்.பி.களில் என்னைத் தவிர மற்ற 28 பேருக்கும் சொந்தமாக பல்கலைக்கழ கங்கள் இருந்தன. வணிக நோக்கத்துடன் கல்வி நிறுவனங்களை வைத்திருக்கும் எம்.பி.களால் தீர்மானிக்கப்படும் கல்விக் கொள்கையை ஒற்றையாளாக இருந்தாலும் எதிர்த்துப் போராடு கிறோம். கல்வி, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகிறது. பிற்படுத்தப்பட்ட வர்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினருக்கான உரிமை கள் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன. சிறு பான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை கடந்த 10 ஆண்டுகளில் 70% குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.
கல்வி நிலையங்களுக்கு குறி
இன்றைக்கு உலக அளவில் பாசிச சக்திகள் முதலில் குறிவைப்பது கல்வி நிறுவனங்க ளைத்தான். அமெரிக்காவில் டிரம்ப் என்ன செய் கிறார்? ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆயி ரக்கணக்கான மாணவர்கள் வெளியேற்றப்படு கின்றனர். பல்கலைக்கழகங்களை குறி வைத்துத் தாக்குகிறார். அதையேதான் இங்கே மோடி செய்கிறார். ஜேஎன்யு போன்ற பல்கலைக்கழகங்கள் இந்திய அறிவுச்சமூகத்திற்கு என்னென்ன பங்களிப்புகள் செய்தன என்பதை நம் மகத் தான தலைவர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் எப்போதும் நினைவுபடுத்துவார். அவர் ஜேஎன்யு மாணவர் தலைவராக இருந்தவர். போன வாரம் ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு மத்திய அரங்கில் பேசிக்கொண்டி ருந்தபோது ஒரு சமாஜ்வாதி எம்.பி. வந்து சொன்னார்: “யெச்சூரி இப்போது இருந்திருந் தால் என்ன அழகான கட்டுரை வந்திருக்கும்!” வெறும் அரசியல் மட்டுமல்ல, இந்த தேசத் தின் மனசாட்சியைத் தொடும் அறிவின் குரல் வேண்டும். அதை மாணவர் இயக்கம்தான் வளர்க்க முடியும்.
மாணவர் தேர்தல்களின் முக்கியத்துவம்
கல்விச்சாலைகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. நல்ல அரசியல் கல்விச்சாலைகளுக்குள் நுழையவில்லை என்றால் சாதி நுழையும், மதம் நுழையும், பிற்போக்குத்தனம் நுழையும். ஏட்டுக் கல்வியால் மட்டும் எல்லா பழக்கவழக் கங்களையும் மாற்றிவிட முடியாது. ஆசிரியர் பாடத்தை மட்டுமே சொல்லித் தரு வார். ஆனால் கேள்வி கேட்பதற்கான பயிற்சி யை இயக்கங்கள்தான் தர முடியும். பதில் முக்கியமல்ல - யாராலும் பதில் எழுத முடியும். ஆனால் கேள்வி கேட்பதற்கு சுய அறிவு வேண்டும். பாடப்புத்தகத்தைப் பார்த்துப் பேசுவ தல்ல, பாடப்புத்தகத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பார்த்துப் பேசும் பயிற்சியை முற்போக்கு இயக்கங்கள்தான் தர முடியும். தேர்தல்கள் நடக்கும்போதுதான் கல்விச் சாலைகளில் உரையாடல் நடக்கும். எல்லா மௌனங்களும் உடைக்கப்பட வேண்டிய மௌ னங்கள்தான். ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள் உருவாக்கும் மௌனங்களை உடைப்பது ஜனநாயகத்திற்கு அவசியம். ஆர்எஸ்எஸ், பாஜக அடிப்படைவாதிகள் கல்விக்கூடங்களுக்குள் திட்டமிட்டு நுழைந்து நவீன சிந்தனைகளை சிதைக்கின்றனர். சாதிய கருத்துக்கள், மதவெறி ஆகியவை கல்லூரிக ளில் கூட பரவ விடப்படுகின்றன. தென்மாவட் டங்களின் சில பகுதிகளில் மாணவர்கள் கையில் சாதிக் கயிறு கட்டும் நிலை உருவாகியுள்ளது. குருகுலக் கல்வி முறையை மகிமைப்படுத்தி அறிவியல் சிந்தனையை அழிக்கும் வேலை நடக்கிறது. “குருகுலத்தில் படித்தால் நேராக ஐஐடி-க்கு வரலாம்”, “மாட்டுச் சாணத்தில் நோய் தீர்க்கும் குணம் உள்ளது” என்று ஐஐடி இயக்கு னர்களே பேசும் அளவிற்கு கல்வி நிலையங்கள் சிதைக்கப்படுகின்றன.
கீழடி அகழாய்வு மறைப்பு
தமிழ்நாட்டின் தொன்மையான நாகரி கத்தை மறைக்கும் நோக்கத்துடன் கீழடி அக ழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு. தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி கருணாநிதி மற்றும் நான் கேள்வி கேட்ட போதும் “எந்த காரணத்தை கொண்டும் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மாட்டோம்” என்று பதில் வந்தது. ஏன் என்றால் கீழடி அறிக்கை வெளிவந்தால் வேத நாகரிகம்தான் இந்தியாவின் பூர்வீக வர லாறு என்ற பாஜகவின் கட்டுக்கதை தகர்ந்து விடும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் நதிக்கரைகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து, செங்கல், நகர நாகரிகம் இருந்த தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நொய்ய லாற்றங்கரையில் கிடைத்த ஜூலியஸ் சீசரின் 2000 ஆண்டு பழமையான நாணயங்கள் அந்தகாலத்தில் இங்கிருந்த சர்வதேச வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன.
மாணவர் அமைப்புகளின் பொறுப்பு
இந்த இருண்ட காலகட்டத்தில் மாணவர் அமைப்புகளின் பங்கு மிக முக்கியம். பொது வேலை நிறுத்தத்தின்போது ரயிலுக்கு முன் நின்று தடுத்த அகல்யாவின் வீரமே உண்மை யான வீரம். ஆயிரம் அகல்யாக்களை உறுப்பின ராகக் கொண்ட மாணவர் அமைப்பு இந்திய மாணவர் சங்கம். மதவெறி, சாதிய சிந்தனை, எதேச்சதிகார அரசியல் ஆகியவற்றிற்கு எதிராக நாம் இடை விடாமல் களம் காணவேண்டும். வகுப்பறை களில் மௌனங்களை உடைத்து, கேள்விக ளால் நிரப்ப வேண்டும். கல்வியும் போராட்டமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். போராட்டம் இல்லையேல் அறி வில்லை. சாக்ரடீஸிலிருந்து தொடங்கும் “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விக் கலாச்சாரத்தை மாணவர் சங்க உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான, பழமை வாதத்திற்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான கேள்விகளில்தான் அறிவு தொடங்குகிறது. போராடுபவர்கள்தான் உண்மையான அறிவாளிகளாக மாற முடியும். தமிழ்நாட்டு மாணவர் சமூகம் இந்த வரலாற்று மரபின் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். இதுவே நமது கடமையும் பொறுப்பும்!
ருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து...