ஆயுதக் குழுக்களுக்கு உதவும் அந்நிய சக்திகள் பாதுகாப்பில் கோட்டை விடுகிறதா உள்துறை அமைச்சகம்? - பி.ஆர்.அரவிந்தாக்சன்
இந்தியாவில் ஆயுதக்குழுக்களுக்குப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டின் கீழ், முதல் முறை யாக வெளிநாட்டைச் சேர்ந்த 7 நபர்களைத் தேசிய புலனாய்வு முகமை (NIA) 2026 மார்ச் 14 அன்று கைது செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேண ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட இந்தத் தன்னாட்சி அமைப்பு, தற்போது ஒரு சர்வதேசச் சதிவலையைப் பின்னறுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. என்.ஐ.ஏ-வின் விரிவாக்கப்பட்ட அதிகாரமும் புதிய சவால்களும் உலகத்தரம் வாய்ந்த புலனாய்வு ஏஜென்சியாக மாற்றும் நோக்குடன், 2019-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் என்.ஐ.ஏ-விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது.
அதன்படி, இந்தி யாவிற்கு வெளியே இந்திய நலன்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு. வெடிபொருள் சட்டம், மனிதக் கடத்தல், இணையப் பயங்கரவாதம் மற்றும் ஆயுதச் சட்டம் தொடர்பான குற்றங்களை விசாரிக்கவும் இதன் அதிகார வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டில் என்.ஐ.ஏ-விற்குள் ஒரு பிரத்யேக ‘வெளிநாட்டு விசாரணை கோரிக்கை பிரிவு’ (Foreign Investigation Request Unit - FIRU) நிறுவப்பட்டது. இந்தப் பிரிவின் செயல்பாடே தற்போது நடந்துள்ள சர்வதேசக் கைதுகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து இந்திய எல்லைகளை ஒரு ‘பாதுகாப்பான புகலிடமாக’ பயன்படுத்த முயன்ற அந்நிய சக்திகளின் திட்டத்தை இந்தப் பிரிவு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மியான்மர் எல்லை மார்க்கமாக நடந்த சர்வதேசச் சதி மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சிக்கும், அங்குள்ள ஜனநாயக ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, மியான்மரில் உள்ள இனக்குழுக்களுக்கு நவீன ஆயுதப்பயிற்சி அளிப்பதற்காகச் சிலர் இந்தியா வழியாக மியான்மர் செல்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான், சுற்றுலா விசாவின் மூலமாக இந்தியா வந்த 7 வெளிநாட்டவர்களை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது: L மேத்யூ வான் டைக்: இவர் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து பிடிக்கப்பட்டார். L உக்ரேனியக் குழு 1: லக்னோ விமான நிலையத்தில் இறங்கிய ஹூர்பா பெட்ரோ, ஸ்லிவியாக் தாராஸ், இவான் சுக்மனோவ்ஸ்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். L உக்ரேனியக் குழு 2: தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டீபன்கிவ் மரியன், ஹோன்சருக் மாக்சிம், காமின்ஸ்கி விக்டர் ஆகியோர் பிடி பட்டனர். இந்தக் கைதுகள் வெறும் தற்செயலானவை அல்ல.
ஐரோப்பாவிலிருந்து டிரோன்கள் மற்றும் அதிநவீனத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்து, அவற்றை மிசோரம் மாநிலத்தின் கடினமான மலைப்பாதைகள் வழியாகக் கடத்திச் சென்று, மியான்மரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இவர்களின் நோக்கம் என என்.ஐ.ஏ குற்றம்சாட்டியுள்ளது. மிசோரம்: ஒரு பாதுகாப்பான இடைவழியாக மாறியதா? இந்தியாவின் ‘வெளிநாட்டவர் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள்) ஆணை 1958’-இன் படி மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்கள் வெளிநாட்ட வர் நுழையத் தடை செய்யப்பட்டவை. இருப்பினும், சுற்றுலா மேம்பாட்டிற்காக 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் உள்துறை அமைச்சகம் வழங்கிய சுற்ற றிக்கைகளின்படி சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தவிர்த்த பிற நாட்டுப் பயணிகள் உரிய அனுமதி பெற்று இங்கு பயணிக்கலாம். ஆனால், இதுவரை வரலாற்றிலேயே இல்லாத வகையில், சுற்றுலா விசாவில் வந்து மிசோரம் மாநிலத்தை இடைவழியாகப் பயன்படுத்தி இந்தியா மற்றும் மியான்மர் எல்லைப் பகுதிகளில் ஆயுதப்பயிற்சி வழங்கியதாகப் புகார்கள் எழுந்துள் ளன.
தேசிய புலனாய்வு முகமை தொடங்கிய காலத்தி லிருந்து இதுவரை ஆயுதக்கடத்தல் குற்றச்சாட்டில் வெளிநாட்டவர்கள் உள்நாட்டில் கைது செய்யப் பட்டது இதுவே முதல்முறை. அதுவும் தரை மார்க்க மாக ஆயுதங்களைக் கடத்திச் சென்று பயிற்சி அளித்திருப்பது மத்தியப் புலனாய்வு அமைப்புக ளுக்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். மிசோரம் முதலமைச்சரின் எச்சரிக்கையும் கவலைகளும் மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா, 11-03-2025 அன்று அம்மாநிலச் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் ஒரு அதிர்ச்சிகரமான குற்றச் சாட்டை முன்வைத்தார். 2024 ஜூன் முதல் டிசம்பர் வரை சுமார் 2,000 வெளிநாட்டினர் மிசோரத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்தார். இவர்கள் இந்தியா-மியான்மர் எல்லையைக் கடந்து மியான்மரின் ‘சின் மலைப்பகுதி’க்குள் (Chin Hills) நுழைந்து அங்குள்ள ஆயுதக்குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதாக அவர் பகிரங்கமாக எச்சரித்தி ருந்தார். இந்த ‘சின் மலைப்பகுதி’ என்பது மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கு நிலவும் அரசியல் கொந்தளிப்பு இந்திய மாநிலங்களுக்குள் ளும் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தற்போது என்.ஐ.ஏ நடத்தியுள்ள இந்தக் கைதுகள், மிசோரம் முதலமைச்சரின் அன்றைய எச்சரிக்கையை 100 சதவீதம் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் இந்தப் பாதுகாப்பு ஓட்டை யை அடைக்க உள்துறை அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதுதான் கேள்வி. குடிவரவுப் பிரிவின் கண்காணிப்புத் தவறு மற்றும் தரவுத் திருத்தங்கள் இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2024-இல் சுமார் 99 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் 2.44 லட்சம் பேர் வந்துள்ளனர். மிசோரத்திற்கு மட்டும் 5 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இங்குதான் ஒரு பெரிய குளறுபடி நடந்துள்ளது. குடிவரவுப் பிரிவின் (Bureau of Immigration) அனுமதி பெற்றே வெளிநாட்டவர் இந்தியாவிற்குள் நுழைய முடியும். ஆனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்குள் நுழைந்த வெளிநாட்டவர் குறித்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ள தை உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையே ஒப்புக் கொண்டுள்ளது.
அனுமதியின்றி நுழைந்த அந்த 2000 வெளி நாட்டவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்கள் யாரால் கண்காணிக்கப்பட்டார்கள்? பாதுகாப்பில் எழும் அடுக்கடுக்கான கேள்விகள் தற்போது 7 வெளிநாட்டவர்களை உபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்ததன் மூலம், நாட்டின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன: L உளவுத்துறையின் தோல்வியா?: இந்தியாவின் ‘ரா’ (RAW) மற்றும் இதர மத்தியப் புலனாய்வு ஏஜென்சிகள் கண்டறியாத புதிய ஆயுதக்குழுக்கள் எல்லையில் உருவாகி வருகின்றனவா? L உள்ளூர் ஒத்துழைப்பு: ஐரோப்பாவிலிருந்து டிரோன்களையும் ஆயுதங்களையும் இறக்குமதி செய்து, வாகனங்கள் மூலம் மியான்மருக்குக் கொண்டு செல்ல இவர்களுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் யார்? L எல்லைப் பாதுகாப்பு: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் சோதனைச் சாவடிகளைக் கடந்து இத்தனை பெரிய அளவில் ஆயுதக் கடத்தல் நடந்தது எப்படி? L புதிய அத்தியாயம்: இதுவரை பாகிஸ்தான் எல்லையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த உள்துறை அமைச்சகம், கிழக்கு எல்லையில் அந்நிய சக்திகளின் ஊடுருவலைக் கவனிக்கத் தவறிவிட்டதா? மியான்மருடன் 1,643 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மிசோரம் முதலமைச்சர் கொடுத்த புகாரை உள்துறை அமைச்சகம் ஆரம்பத்திலேயே கவனத்தில் எடுத்திருந்தால், இந்தக் கடத்தல்களைத் தடுத்திருக்க முடியும். இந்தக் கைது நடவடிக்கை மியான்மர் எல்லையில் ஒரு மிகப் பெரிய சர்வதேசத் தலையீடு இருப்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் மக்களுக்கு உரிய விளக்கத்தையும், எதிர்காலப் பாதுகாப்பு குறித்த உறுதியையும் தர வேண்டியது அவசர அவசியமாகும்.
