தேசநலனும் வர்க்க நலனும் காத்து நிற்போம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாட்டிற்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் இன்றைய அரசியல் சூழலில் “வெல்க ஜனநாயகம்” என்ற இந்த மாநாட்டின் தலைப்பு மிகவும் அவசியமானது. ஒன்றிய பாஜக பரிவாரம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி என்ற மூன்று அம்சங்களின் மீதும் கடுமையான தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு, குடியரசுத் தலைவர் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாஜக அரசு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கூட்டம். அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்றுகின்றனர். “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்று சொல்லும் அளவிற்கு கொடூரமான சட்டங்கள் மூலம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மதச்சார்பின்மைக்கு மாறாக மதச்சார்பு கொள்கையை வைத்துள்ளனர். மனுதர்ம அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க விரும்புகின்றனர். நல்வாய்ப்பாக, கடந்த 24ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்காததால் தற்காலிகமாக அரசிய லமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. இல்லை யென்றால் இந்த ஆறு மாத காலத்திற்குள் ளாகவே அரசியலமைப்பை மாற்றியிருப்பார்கள். மாநில உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக ஒன்றிய அரசு கடுமையான தாக்குதல் நடத்துகிறது. மாநில உரிமைகளைப் பறிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், வரி வருவாய் பங்கீட்டில் பாரபட்சம், கடன் வாங்க அனும திக்காத போக்கு என அனைத்து வகையான தொந்தரவுகளையும் செய்கின்றனர். குறிப்பாக ஆளுநர்கள் மூலம் அதிகபட்ச குடைச்சலைக் கொடுக்கின்றனர். பாஜக அல்லாத மாநில அரசுகள் சுயேச்சையாக செயல்படக்கூடாது, ஒன்றிய அரசை அண்டியே இருக்க வேண்டும் என்ற போக்கில் செயல்படு கின்றனர். இந்த பாசிசத் தன்மையிலான அணுகுமுறை தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இடதுசாரி சக்திகளையும் ஒன்று திரட்டி பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவது அவசியமாகிறது. பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் சார்பு பொருளாதாரக் கொள்கையால் நாடு முழுவதும் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகள் மக்களைத் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளன. கூட்டுக் களவு முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும். சமீபத்தில் தமிழகத்தில் நவதாராளவாத கொள்கையை மாற்ற முடியாது என்றும், தனியார்மயமும் ஒப்பந்த முறையும் தவிர்க்க முடியாதது என்றும் பல விவாதங்கள் நடை பெற்றன. இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சோசலிச பொருளாதாரம் உலகில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. வேலையின்மையை ஒழிக்க முடியும், ஒப்பந்த முறையை ஒழிக்க முடியும்; நிரந்தர வேலை, வேலைப் பாதுகாப்பு, வாழ்வுக்கேற்ற ஊதியம் இவை அனைத்தையும் உத்தரவாதப்படுத்த முடியும். சமீபத்தில் நடந்த சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தோழர் முத்தரசன், தோழர் திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து முதலமைச்சரிடம் பேசினோம். தூய்மைப் பணி நிரந்தரமானது என்றால் அந்த ஊழியர்களும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. முரண்படுவதும் உடன்படுவதும் பாஜகவின் மதவெறி அரசியலுக்கு எதிராக திமுக அரசுடன் இணைந்து நிற்கிறோம். அதேவேளை தொழிலாளர் வர்க்க நலன்கள் பாதிக்கப்படும்போது எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம். முரண்படுவதும் உடன்படு வதும் சேர்ந்தது தான் இந்த கூட்டணி. தமிழ்நாடு அரசுடன் ஒத்த கருத்துள்ள விஷ யங்களில் ஒத்துப்போகிறோம். தொழிலாளர், மக்களின் நலனைப் பாதிக்கும் விஷயங்களில் முரண்படுகிறோம். இது தெரிந்தே முதலமைச் சர் எங்களுடன் பயணிக்கிறார், நாங்களும் அவருடன் பயணிக்கிறோம். முரண்பாடுகள் வரும்போதெல்லாம் அணி உடைந்துபோகும், கூட்டணி மாறிப்போகும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அது தவறு. நாங்கள் கூட்டணி சேர்ந்திருப்பது பாஜகவின் மதவெறி நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நிற்பதற்காக. அதே நேரம் தொழிலாளர் வர்க்க நலன் பாதிக்கப்படும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து எதிர்ப்போம். எங்கள் வர்க்கக் கடமையை விட்டுக் கொடுக்கமாட்டோம்! சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமை, சாதியப் பாகுபாடு ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. பி. சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்றோர் தொடங்கிவைத்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வீரியமிக்க போராட்ட வரலாற்றை நம் தோழர்கள் மீண்டும் படிக்க வேண்டும். சமீபத்தில் திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற மென்பொருள் பொறியா ளர் கொல்லப்பட்டார். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் பட்டதாரி. வேறொரு சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைக் காதலித்தார் என்ற ‘குற்றத்திற்காக’ அந்தப் பெண்ணின் சகோதரனே - அவரும் ஒரு பட்டதாரி - பட்டப்பகலில் வெட்டிக் கொன்றார். இதைத் தொடர்ந்து நாங்கள் நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் ஆதரிக்கப்படு கிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இத்தகைய தனிச்சட்டத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இது மிகவும் பொருத்தமான நேரம். தமிழ்நாடு அரசு, சாதி ஆணவக் கொலை களைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாகரிகமான சமுதாயமாக மாற இந்தச் சட்டத்தை கொண்டுவருவது அவசியம். இடதுசாரி ஒற்றுமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் இடையே மேலும் நெருக்கமான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். பல்வேறு ஒத்த கோரிக்கைகளில் இணைந்த செயல் பாட்டைத் தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும். இடதுசாரி சக்திகள் வலுப்பெறுவதைப் பொறுத்துத்தான் மற்ற ஜனநாயக சக்திகள் நம்மோடு மேலும் நெருக்கமாகவும் வலுவாக வும் வருவார்கள். இடதுசாரி இயக்கங்கள் தமிழகத்தில் மேலும் வலுப்பெற வேண்டும். இடதுசாரி சக்தி களின் பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும். சோச லிசக் கொள்கையின் மீதான நம்பிக்கையை வளர்க்க வேண்டும். சோசலிசம்தான் ஒரே மாற்று என்பதைத் தமிழக மக்கள் மத்தியில் எங்கும் கொண்டுசெல்ல வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களைச் சோசலிசத்தின் பக்கம் திருப்ப வேண்டும். தமிழகத்தில் இடதுசாரிகள் பலம் பொருந்தி யவர்களாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும். ஒன்றுபட்டுக் களம் காண்போம்! பாசிச சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவோம். பாசிசத்திற்கு எதிராக, மதவெறிக் கூட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து களத்தில் நிற்போம். அதே நேரம் தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காகவும் உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இடதுசாரிகள் வலுவாகக் களம் காண்போம்!