articles

img

பட்டியலின மக்களிடம் பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுப்போம்! - வீ.அமிர்தலிங்கம்

பட்டியலின மக்களிடம் பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுப்போம்!

மக்களின் வாழ்க்கைக்கான தேவைகளை உற்பத்தி செய்வதற்கும், சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும் நிலம் முக்கியப் பங்காற்றுகிறது. மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் நிலங்கள் வெகு சிலரிடம் மட்டுமே குவிக்கப்பட்டு நில உடமையாளர்களாக்கப்பட்டனர். தலித்துகளின் கையில் கையளவு கூட சொந்த நிலமின்றி, நில உடைமையாளர்களின் நிலத்தில் இரவு பகல் இன்றி உழைப்பு முழுவதும் சுரண்டப்பட்டது. பண்ணை அடிமைத்தனமும், கொடும் அடக்குமுறையும் அவர்கள் மீது ஏவப்பட்டு, துயரம் மிகுந்த வாழ்க்கை முறையை வாழ்ந்தார்கள். 1891இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜே.எச்.ஏ.ட்ரெமன் ஹாரே என்பவரிடம் விரிவான அறிக்கையைப் பெற்று, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு 12 லட்சம் ஏக்கர் நிலங்களை வழங்கிட சட்டம் இயற்றப்பட்டது.

பஞ்சமி நில சட்டத்தின் விதிமுறைகள்

1892இல் பஞ்சமி நிலம் என்ற பெயரில் இந்தியா நாடு முழுவதும் நிலமற்ற தலித்துகளுக்கு நிலம் வழங்கும் சட்டம் (அரசாணை எண் 1010, நாள் 30.9.1892) நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1892 முதல் 1933 வரை நிலம் வழங்கப்பட்டது.

சட்டத்தின் கட்டுப்பாடுகள்   

 நிலம் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது     பத்தாண்டுகளுக்குப் பிறகும் தலித் மக்களிடம் மட்டுமே விற்பனை, அடமானம், குத்தகை செய்ய முடியும்     நிபந்தனைகளை மீறும் ஒப்பந்தம் செல்லாது

90% பஞ்சமி நிலம் பறிக்கப்பட்ட அவலம்

இப்படி வழங்கப்பட்ட நிலங்கள், ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் பட்டியலின மக்களிடம் இருந்து ஆதிக்கச் சாதியினரால் சட்ட விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டு பறிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடிமை இந்தியாவில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், சுதந்திர இந்தியாவில் பறிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பஞ்சமி நிலங்களின் நிலவரம்

தமிழகத்தில் மொத்தம் 1,15,345 ஏக்கர் பஞ்சமி நிலம் இருந்தது. இதில் வெறும் 686 ஏக்கர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 15,018 ஏக்கர் நிலம் மீட்க வேண்டிய நிலையில் உள்ளது.

மாவட்ட வாரியான மீட்க வேண்டிய நிலங்கள்

 திருவண்ணாமலை - 4,462 ஏக்கர் சேலம் - 2,439 ஏக்கர் /  திருச்சி - 1,500 ஏக்கர்  பெரம்பலூர் - 1,397 ஏக்கர் /  தர்மபுரி - 1,200 ஏக்கர்  திருநெல்வேலி - 826 ஏக்கர் /  தேனி - 632 ஏக்கர்  தர்மபுரி - 497 ஏக்கர்  

மீட்கப்பட்ட நிலங்களின் நிலவரம்:  

கோவை - 131.8 ஏக்கர் மீட்கப்பட்டது  விருதுநகர் - 112.8 ஏக்கர் /  தர்மபுரி - 16.8 ஏக்கர் சேலம் - 10.9 ஏக்கர்

மீட்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை

பல்வேறு வகைகளில் பட்டியலின மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக:     தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது     ஊராட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது     சென்னை உயர் நீதிமன்றம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டியுள்ளது     தமிழ்நாடு அரசும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது

அதிகாரிகளின் காலம் கடத்தும் நிலை

மீட்கப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் ‘தீர்வால் ஏற்பட்ட தரிசு’ என்று வருவாய்த் துறையினர் வழங்காமல் காலம் கடத்தும் நிலையும் ஆங்காங்கே நீடிக்கிறது. (உதாரணம்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூர் வருவாய் கிராமம், புல எண் 229/2)

செயல்திட்டம் - படை திரட்டுவோம்!

நிலமற்றவர்களாக 74 சதவீதம் உழைக்கும் மக்கள் உள்ளனர். இவர்களிலும் 80 சதவீதம் பேர் விவசாயக் கூலித்தொழிலாளர்களாக பட்டியல் இன மக்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 14 திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் நிலம்-குடிமனை உரிமை மாநாடு தமிழ்நாட்டில் பறிபோயுள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான உறுதிமிக்க போராட்டங்களை நடத்துவதற்கான வியூகங்களை நோக்கி செல்ல இருக்கிறது.

அரசின் உடனடி நடவடிக்கைகள்:

* ஆணைகள், அறிவிப்புகள், தீர்ப்புகளுக்கு அப்பால் சட்டரீதியான உறுதியான நேரடி நடவடிக்கைகள் தேவை * மீட்கப்பட்ட நிலங்களை பட்டியல் இன மக்களிடம் தயக்கமின்றி விரைவாக ஒப்படை செய்ய வேண்டும் * ‘தீர்வால் ஏற்பட்ட தரிசு’ என்ற பெயரில் காலம் கடத்தும் நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்     விவசாயி-தொழிலாளி வர்க்கப் படையை அணி திரட்டுவோம்! பஞ்சமி நிலம் உள்ளிட்ட அனைத்து வகை நிலங்களையும் மீட்டெடுப்போம்!!*