articles

img

அறிவு ஜீவிகளும் நவ பாசிசமும்  - பேரா. பிரபாத் பட்நாயக்

அறிவு ஜீவிகளும் நவ பாசிசமும் 

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் தங்கள் கட்சிப் பணிக்காக - பயிற்சி வகுப்பு கள், முகாம்கள் நடத்துவதற்காக - மார்க்சி யப் பள்ளிகள் நிறுவுவதற்காக பொது நன்கொடைக ளையும் மக்களிடமிருந்து பெறப்படும் நிதி உதவிக ளையும் திரட்டுகின்றனர். இது, ஆர்.எஸ்.எஸ் போன்ற  பாசிசக் குழுக்கள் குழந்தைகளுக்காகப் பள்ளிகளை உருவாக்கும் நடவடிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மேலும் அது வெளிப்படையாக இரண்டு வழிகளில் வேறுபட்டது.  ஒன்று, கம்யூனிஸ்டுகள் மார்க்சியக் கல்வி முகாம் களை - பள்ளிகளை -  அவற்றைக் கட்டுப்படுத்தவோ, அல்லது அவற்றின் மூலம் தங்கள் சொந்த குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டத்தை மட்டும் பரப்புவதற்கோ  தொடங்கவில்லை. அவர்களின் நோக்கம் மக்களின் பொதுவான சிந்தனைத் தரத்தை மேம்படுத்துவதா கும். மக்கள் கல்வி கற்றால், கம்யூனிச உலகக் கண் ணோட்டத்தின் மதிப்பைத் தாமாகவே புரிந்து கொள் வார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இதைச் செய்கின்றனர்.  இரண்டு, பாசிஸ்டுகள் இளம் வயதிலேயே குழந் தைகளை பாதிப்புக்குள்ளாக்குவதற்காக குழந்தைக ளுக்கான பள்ளிகளை மட்டும் கட்டுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, வளர்ந்த மாணவர்கள் சுதந்திரமாகக் கருத் துக்களை விவாதித்து, தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் உருவாக்கிக்கொள்ளும் வகையில் முகாம்களை நடத்துகின்றனர். இந்த இரண்டு முயற்சிகளும், வேறு வார்த்தைக ளில் கூறுவதானால், கல்வி பற்றிய இரண்டு முற்றிலும் எதிர்மாறான அணுகுமுறைகளை வெளிப்படுத்தின. ஜெர்மானிய நாடக ஆசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட் “பசியுள்ள மனிதனே; புத்தகத்தை நாடு” என்று எழுதிய போது, அவர் கல்வி பற்றிய இடதுசாரி அணுகு முறையை வெளிப்படுத்தினார். அதாவது, கல்வி என்பது கருத்துக்களை விரிவடையச் செய்வதுடன் அடிப்படையிலேயே விடுதலையளிக்கிறது.  ஆனால் பாசிச அணுகுமுறை இதற்கு முற்றி லும் எதிரானது. மக்களின் கருத்துக்களை விரிவடை யச் செய்வது நாசகரமானது, எனவே அது ஒடுக்கப்பட வேண்டும் என்கிறது பாசிசம். எனவே அனை த்து உண்மையான கல்வியும் நசுக்கப்பட்டு, பாசிசக் கருத்துக்களால் நிரப்பப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. இடதுசாரிகள் “பசியுள்ள மனிதனே புத்த கத்தை நாடு” என்று வலியுறுத்தும்போது, பாசிஸ்டு கள் நாஜி ஜெர்மனியில் செய்ததைப் போல புத்தகங்க ளை எரிப்பதை ஊக்குவிக்கிறார்கள்.

நவ பாசிஸ்டுகளின் “அறிவு எதிர்ப்பு”

இன்றைய புதிய வகை பாசிஸ்டுகளும் - அதா வது - நவ பாசிஸ்டுகளும் இந்த விஷயத்தில் தங்கள் முன்னோடிகளையே பின்பற்றுகின்றனர். பொதுவா கவே அவர்கள் சகிப்புத்தன்மையற்ற முறையில் அறிவுசார் செயல்பாடுகளுக்கும் அறிவுஜீவிகள் என்ற சமூகக் குழுவிற்கும் விரோதமாக உள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல, ஒத்த ஆட்சிமுறைகளைக் கொண்ட பிற நாடுகளிலும், அமெரிக்காவிலும் கூட, தற்போது அனைத்து சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுக்குக் காரணம் இந்தப் போக்கின் வெளிப்பாடுதான்.  இந்தியாவில் தங்கள் எண்ணங்களை சுதந்திர மாக வெளிப்படுத்தத் துணிந்த அறிவுஜீவிகளை அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் அச்சுறுத்து வது, அவர்களை “கான் மார்க்கெட் கும்பல்” (அதன் பொருள் எதுவாக இருந்தாலும்), “பிரிவினைவாத கும்பல்” (துக்டே துக்டே கும்பல்), “நகர்ப்புற நக் சல்கள்” (அதாவது தீவிர இடதுசாரிகள்) என்று முத்திரை குத்தி அவர்கள் மீது பொதுமக்களின் வெறுப்பைத் தூண்டுவது போன்றவை அனைத்தும் இந்தப் போக்கின் ஒரு பகுதியாகும்.  அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கம்யூனிஸ்டுகள் நிரம்பி வழிகிறார்கள் என்றும் அவர்களை ஒழிக்க வேண்டும் என்றும் கருதுவது தற்செயல் நிகழ்வு அல்ல. நவ பாசிசத்தின் பிடியில் சிக்குகிற கல்வியானது, இத்த கைய “வெறிபிடித்த பீதி”யின் பிடியில் சிக்கிச் சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மோடி அரசின் கல்வி நிறுவன அழிப்பு

மோடி அரசாங்கம் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை (JNU) திட்டமிட்டு அழிக்க முயற்சிக்கி றது, விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை செயல்படா மல் முடக்க முயற்சிக்கிறது, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை அச்சுறுத்த முயற்சித்தது, தில்லி பல்கலைக்கழ கத்தை நிலைகுலையச் செய்ய முயற்சித்தது, புனே திரைப்பட நிறுவனத்தைக் கைப்பற்ற முயன்றது மற்றும் மகாராஜா சாயாஜிராவ் பரோடா பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறையைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளது.  இவை அனைத்தும் பெரும்பாலும் சுதந்திரத்திற் குப் பிறகு கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களாகும். இப்பல்கலைக்கழகங்களைப் பற்றி நாடு உண்மையி லேயே பெருமைப்பட முடியும். இந்த கல்வி நிலை யங்கள் மீதான தாக்குதல், நாட்டில் அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை அழிக்கக்கூடிய மிகவும் அருவருப்பான முயற்சியாகும். சிந்தனைக ளின் மீதான இந்தத் தாக்குதலானது ஆச்சரியப்படும் வகையில் டிரம்ப் நிர்வாகம் கொலம்பியா, ஹார்வர்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடத்திய தாக்குதலுடன் ஒத்துப்போகிறது.

அறிவின் மீதான தாக்குதல்  வெற்றி பெறுகிறதா?

நவ பாசிசத்தின் சிந்தனையை மந்தமாக்குகிற மற்றும் அறிவுசார் நடவடிக்கைகளை ஒடுக்குகிற முயற்சியைப் புரிந்துகொள்வது கடினமானது இல்லை என்றாலும், குழப்பமாகத் தோன்றும் ஒரு விஷயம் முற்றிலும் வேறுபட்டது. அறிவுஜீவிகளை பெரிதும் மதித்த இந்தியா போன்ற ஒரு நாட்டில் இத்தகைய முயற்சி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி பெற முடிவது ஏன்?  கல்வித் துறையில் உள்ள எவரும் ஒரு உண்மை யை உறுதிப்படுத்த முடியும். வெகு காலத்திற்கு முன்பு, இந்தியாவில் சாதாரண மக்கள் அறிவு ஜீவிகளையும், குறிப்பாக கல்வியாளர்களையும் பெரிதும் மதித்தனர். அப்படியானால், மோடி அரசு நடத்தும் அறிவுஜீவிகள் மீதான தாக்குதல், மக்கள்  மத்தியில் நாம் எதிர்பார்த்த வெறுப்பை ஏன் தூண்ட வில்லை? அமெரிக்காவில் நிலைமை ஓரளவு வேறு பட்டது. ஏனென்றால், அங்கு கடந்த காலத்தில் நிலப் பிரபுத்துவ முறை இல்லை. ஆனால் இந்தியா போன்ற பழைய சமூகங்கள் பொதுவாகவே வழங்கிய மிக உயர்ந்த மதிப்பை அமெரிக்க சமூகம் ஒருபோதும் அறிவுஜீவிகளுக்கு வழங்கவில்லை. ஆனால் இந்தியாவில் இது எப்படி மாறியது?

மாற்றத்தின் பின்னணியில் தாராளமயப் பொருளாதாரம்

சந்தேகத்திற்கு இடமின்றி நாட்டில் தாராளமயப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதே இத்த கைய மாற்றத்திற்கு உறுதியான காரணியாகும். தாராளமயப் பொருளாதாரம் இந்த மாற்றத்திற்கு குறைந்தபட்சம் மூன்று தனித்துவமான வழிகளில் பங்களித்துள்ளது.  

முதலாவது: வருமான  ஏற்றத்தாழ்வின் பெருக்கம்

முதலாவதாக, அது வருமான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது. அறிவுஜீவிகள் மற்றும் கல்வியா ளர்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இல்லை என்றாலும், அவர்களில் கணிசமான பிரிவினர் உழைக்கும் மக்களின் பெரும் பகுதியினருடன் ஒப்பிடும்போது, தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் நிச்சயமாக மிகவும் சிறப்பாக உள்ளனர். ஒரு உதாரணம் இதைத் தெளிவுபடுத்தும்.  இந்தியாவில் 1974 இல் ஒரு குவிண்டால் (100 கிலோ) கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை 85 ரூபாயாக இருந்தபோது, ஒரு மத்திய அரசுப் பல் கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியரின் ஆரம்பக்கட்ட அடிப்படைச் சம்பளம் மாதம் 1,200 ரூபாயாக இருந்தது. இன்று கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு 2,275 ரூபாயாக உள்ளது. அதே சமயம் ஒரு மத்திய  அரசுப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரிய ரின் ஆரம்பக் கட்ட அடிப்படை மாதச் சம்பளம் 1,31,400 ரூபாயாகும்.  இந்த இரண்டு வர்க்கத்தினருக்கு இடையே யான வருமானத்தை தோராயமான கணக்கீடுக ளாக எடுத்துக் கொண்டால், ஒரு கல்வியாளரின் வரு மானம் 100 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது, அதே சமயம் ஒரு விவசாயியின் வருமானம் 27 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது, அவர்களின் வருமான விகிதம் இந்தக் காலகட்டத்தில் மூன்று மடங்குக்கு மேல் பெரியதாகி விட்டது. இது பெரும்பாலும் தாராளமயப் பொருளாதாரக் காலத்து டன் ஒத்துப்போகிறது. இத்தகைய சூழ்நிலையில் கல்வியாளர்கள் மற்றும் பிற அறிவுஜீவிகளிடமிருந்து அதிகளவு உழைக்கும் மக்கள் அந்நியமாவது ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரண்டாவது:  சமூக உணர்வின் கலைப்பு

இரண்டாவதாக, முதலாளித்துவம் ஏற்கனவே இருக்கும் சமூகங்களைக் கரைக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிவுஜீவிகள் மீது இருந்த மதிப்பானது, முதலாளித்துவத்திற்கு முந் தைய காலத்தில் இருந்த சமூக உணர்விலிருந்து உருவான மரபாகும். நாட்டில் கட்டுப்பாடற்ற, முழுமை யான முதலாளித்துவத்தை கட்டவிழ்த்துவிட்ட தாராளமயப் பொருளாதாரம், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே இருந்த இந்த சமூக உணர்வைக் கலைப்பதில் பங்காற்றியது. மேலும் அறிவுஜீவிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடை யில் ஒரு விரிவடையும் பிளவுக்குப் பங்களித்தது.

மூன்றாவது: உலகமயமாக்கல்  மற்றும் அந்நியமாக்கல்

மூன்றாவதாக, தனிநபர்மயமாக்கலை நோக்கிய இந்தப் போக்கோடு சேர்ந்து, உலகமயமாக்கல் என்ற ஒரு நிகழ்வும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. இது அறிவு ஜீவிகளின் கணிசமான பிரிவினர் உள்நாட்டு சமூகத் தில் தங்கள் வேர்களை இழப்பதற்கும், அவர்களி டையே உலகளாவிய வலைப்பின்னல் நோக்குத லுக்கும் வழிவகுத்தது. இது மீண்டும் அவர்களை நாட்டின் உழைக்கும் மக்களிடமிருந்து விலக்கிச் சென்றது.

தாராளமயமும் நவ பாசிசமும்

இந்த எல்லா காரணங்களாலும், தாராளமயப் பொருளாதாரம் உழைக்கும் மக்களுக்கும் அறிவுஜீவி களுக்கும் இடையிலான பிளவை அதிகரிக்கப் பங்களித்தது. இது, பொதுவாக ஜனநாயகம், மதச்சார் பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பாதுகாவலர்களாகச் செயல்படும் அறிவுஜீவிகளைத் தாக்க நவ பாசிசத்திற்கு எளிதாக வழிவகுத்தது. இது நவ பாசிசத்திற்கான அடித்தளத்தை தாராளமயப் பொ ருளாதாரம் தயார்ப்படுத்திய மற்றொரு வழியாகும். உழைக்கும் மக்களிடையே அறிவுஜீவிகள் மீதான மதிப்பிழப்பு ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சி என்று கருதப்படலாம், ஏனென்றால் இது சமூக வேறுபாடு களையும் ஏற்றத்தாழ்வுகளையும் அழிக்கிறது. இருந்தாலும் இது தவறானது. ஒரு சமத்துவ சமுதா யம் என்பது அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வர்க்க மக்களைக் கொண்டிருக்காது என்பது உண்மைதான். ஏனென்றால் எல்லோரும் உழைக்கும் நபராகவும் அறிவுஜீவியாகவும் மாறுவார் கள் (அதனால்தான் கம்யூனிஸ்டுகள் கல்வி நிறுவ னங்களை - மார்க்சியப் பள்ளிகளை நிறுவினார்கள்).  ஆனால் சமத்துவத்தின் பெயரில் வெறுமனே அறிவுஜீவிகளை இழிவுபடுத்துவதும், அவதூறு செய்வதும், சமூகத்தை வழிகாட்டுதல் இல்லாமல் ஆக்கி, நவ பாசிஸ்டுகள் மற்றும் ஏமாற்றுக்காரர்க ளின் ஆதிக்கத்திற்கு ஆளாக்குகிறது. வேறு வார்த்தை களில் கூறுவதானால், ஒரு சிறிய குழுவின் ஏகபோக கட்டுப்பாட்டில் சிந்தனைகள் குவிந்திருப்பதற்குப் பதிலாக மக்களிடையே யோசனைகளைப் பரப்பு வதற்கும், சிந்தனைகளையே அழிப்பதற்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது.

கீன்ஸின் கண்ணோட்டம்

உண்மையில், பொருளாதார நிபுணரான ஜே.எம். கீன்ஸ் போன்ற நுட்பமான அறிவுள்ள தாராள வாத எழுத்தாளர்கள் கூட, ஒரு முதலாளித்துவ சமூ கத்தில் சமூக உணர்வுள்ள அறிவுஜீவிகள் இருப்பதன் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர். அவர்க ளால் அமைப்பைச் சரிசெய்யவும், அதன் குறைபாடு களைப் போக்கவும் சமூகத்தில் போதுமான செல் வாக்கைச் செலுத்தவும் முடியும் என்று கீன்ஸ் நம்பினார். அவர்க ளை அவர் “படித்த முதலாளித்துவ வர்க்கத்தினர்” என்று அழைத்தார்.  நவீன தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் மேம் பட்ட முதலாளித்துவ நாடுகளில் கூட, சமூகத்தில்  செல்வாக்கைச் செலுத்தாத, சமூக உணர்வற்ற, தன்ன லம் மட்டுமே கொண்ட அறிவுஜீவிகளை மட்டுமே உருவாக்குவது பிற்கால முதலாளித்துவத்தின் முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாகும். இந்தியா போன்ற நாடுகளில் இது நிச்சயமாக நவ பாசிசத்தின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்துள்ளது.

தாராளமய நெருக்கடியும்  புதிய சாத்தியங்களும்

உழைக்கும் மக்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் கடந்து, நவ பாசி சத்தைத் தோற்கடிப்பதற்கான நிலைமைகளை உரு வாக்குவது, தாராளமயப் பொருளாதாரத்தின் நெருக்கடி காரணமாகவே சாத்தியமாகிறது. அறிவு ஜீவிகள் இந்த நெருக்கடிக்குப் பலியாகி, தாராளம யப் பொருளாதாரத்தின் கீழ் அவர்கள் முந்தைய சலுகை பெற்ற நிலையைப் படிப்படியாக இழக்கி றார்கள்.  இந்தியாவில் தாராளமயப் பொருளாதாரக் காலத்தில் விவசாயிகளின் வருமானத்தைவிட கல்வி யாளர்களின் சம்பளம் வேகமாக அதிகரித்தது பற்றி முன்பு குறிப்பிடப்பட்டது. இருப்பினும், தாராளமயப் பொருளாதாரத்தின் நெருக்கடியின் கீழ், இந்த உயர்ந்த சம்பளங்கள் எனக் கருதப்படுபவை சரியான நேரத்தில் கூட வழங்கப்படுவதில்லை.  கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கல்வியா ளர்கள் எதிர்கொண்ட கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், நவ பாசிசத்தின் நெருக்கடியில் அறிவு ஜீவிகளின் தலையெழுத்தும் உழைக்கும் மக்க ளின் தலையெழுத்தும் ஒன்றாகவே பிணைக்கப்படு கின்றன என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில்தான் நவ பாசிசமே மைய அரங்கிற்கு நகர்கிறது.