articles

img

வரலாறு படைக்கும்  பழங்குடி மக்களின் பழனி மாநாடு

வரலாறு படைக்கும்  பழங்குடி மக்களின் பழனி மாநாடு

“எங்கள் வீடுகளை இடித்துவிட்டார்கள், எங்கள் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. யார் எங்களைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று கண்கலங்கி நின்றபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் கடவுள் போல் எங்களைக் காப்பாற்றினார்கள்” என்ற பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பூங்கொடியின் தழுதழுத்த குரல் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட 269 பேரில் அன்று உயிரோடு இருந்த 215 பேருக்கு வரலாற்று சிறப்புமிக்க தண்டனை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கு நிவாரணமும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பெற்றுத்தந்தது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். 33 ஆண்டுகள் அர்ப்பணிப்பு தமிழ்நாட்டில் 33 ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காகப் பாடுபட்ட பாஷாஜான், ஏ.எம்.காதர், எம்.சின்னமுத்து, பி.எஸ்.கந்தசாமி, எம்.அண்ணாமலை, எஸ்.டி.துரைசாமி, சமீபத்தில் மறைந்த ஆர்.ஏ.லட்சுமணராஜா போன்ற மறைந்த தலைவர்களுடன், இன்றும் களப்போராட்டங்களில் தலைமை தாங்கும் பெ.சண்முகம், தும்பல் கிருஷ்ணமூர்த்தி, நிலக்கோட்டை காளியப்பன், வி.கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே.ஆண்டி போன்ற தோழர்களின் அர்ப்பணிப்பால், 22 மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் உறுப்பினர்களுடன் வீரியமாகச் செயல்படுகிறது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். 37 வகையான குழுக்களாக வாழும் பழங்குடி மக்களில் 24 பிரிவினரைக் கொண்ட ஒரே அமைப்பு இதுவே.  திருமூர்த்திமலை தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள், லாக்கப் படுகொலைகள், பொய் வழக்குகள் - இவற்றுக்கெதிராக அன்று முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தி பழங்குடி மக்களின் பாதுகாவலராகச் செயல்படுகிறது இச்சங்கம். இனச்சான்று -  மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாட்டில் வாழும் பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் பெறுவது மிகப்பெரிய போராட்டம். இனச்சான்று கிடைக்காமல் தற்கொலை, மாணவர்களின் உயர்கல்விப் பாதிப்பு, வேலை கிடைக்காத துயரம் - இன்றும் தொடர்கின்றன.  திண்டுக்கல் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகளில் மலைவேடன் பழங்குடியினருக்கு ஒரு சாதிச் சான்று கூட வழங்கப்படவில்லை.  சென்னை உயர்நீதிமன்றம் கொண்டாரெட்டிஸ் பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்க உத்தரவிட்டதை தமிழக அரசே மேல்முறையீடு செய்திருப்பது அரசின் வன்மத்தைத் தெளிவாக்குகிறது. மதுரை காட்டுநாயக்கன் இனத்தாருக்கு 4-5 முறை மானுடவியல் ஆய்வு நடத்தி, இனச்சான்று வழங்குவதைத் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது அரசு. தொடர் போராட்டங்களால் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு 21.08.2023 அன்று அரசாணை 104 வெளியிட்டது - பெற்றோருக்கு இனச்சான்று இருப்பின் அவர்கள் பிள்ளைகளுக்கும், மரபுசார் கொடிவழி உறவுகளுக்கும் வழங்கிட வேண்டும் என்று. இதை அமல்படுத்திட தலைமைச் செயலாளர் வரை கொண்டுசெல்லும் போராட்டம் நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் வாழும் காட்டுநாயக்கன், பளியர், மலைவேடன், கொண்டாரெட்டிஸ், மலைக்குறவன், மலசர், ஊராளி, முதுவன், ஆதியன், பூம்பூம்மாட்டுக்காரன், இருளர், மலையாளி போன்ற பழங்குடி மக்களுக்கு விசாரணை என்ற பெயரில் மானுடவியல் துறையினர் அலைக்கழிப்பதும் அவமானப்படுத்துவதும் இன்றும் நடக்கிறது. முக்கிய கோரிக்கைகள் பழங்குடியினர் பட்டியலில் இணைத்திடுக:  1974-ஆம் ஆண்டு பழங்குடி பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட புலையன், வேட்டைக்காரன் போன்ற இனங்களை மீண்டும் இணைத்திட வேண்டும். ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன், குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவுகளை இணைத்திடக் கோரி தொடர் போராட்டம் நடக்கிறது. 2006 வனஉரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்திடுக:  அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் முன்னெடுப்பில் கொண்டுவந்த இச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 37,461 மனுக்களில் 15,048 பட்டாக்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. 26,394 மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.  1989-ஆம் ஆண்டு தடையாணை எண் 1168 ரத்து செய்திடவும், 1979-ஆம் ஆண்டு அரசாணைப்படி பழங்குடி மக்களிடமிருந்து பழங்குடி அல்லாதோர் வாங்கிய நிலங்களை மீண்டும் பழங்குடி மக்களிடமே ஒப்படைக்க வேண்டும். வரலாறு படைக்கும் 10ஆவது மாநாடு பழனியில் நடைபெறும் 10வது மாநில மாநாடு தமிழ்நாட்டில் வாழும் அனைத்து பழங்குடி மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திடும். இந்திய நாட்டின் பழங்குடி மக்களின் தலைவர்கள் பிருந்தாகாரத் மு. எம்.பி., ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் கன்வீனர் ஜிதேந்திர சௌத்ரி மு. எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மாநாட்டில் பங்கேற்பது பழங்குடி மக்களுக்கு மகத்தான உத்வேகத்தை ஏற்படுத்திடும். வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,  வரவேற்புக்குழுப் பொறுப்பாளர்கள் அஜாய்கோஷ், கமலக்கண்ணன், எம்.ராமசாமி, பி.செல்வராஜ், பழனி நகர மன்றத் துணைத் தலைவர் கந்தசாமி, அருள்செல்வன், வசந்தாமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மாநாட்டைச் சிறப்பித்திட பம்பரமாகப் பணியாற்றி வருகின்றனர். பழனி மாநகரம் பழங்குடி மக்களின் செந்நகரமாக மாறியுள்ளது.