articles

img

ஜிஎஸ்டி 2.0 - ஏழைகளுக்கு தீபாவளி பரிசு அல்ல, மோடிஜி!

ஜிஎஸ்டி 2.0 - ஏழைகளுக்கு தீபாவளி பரிசு அல்ல, மோடிஜி!

கடந்த செப்டம்பர் 3 அன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 56ஆவது கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘ஜி.எஸ்.டி. 2.0’ செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. இதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு வகையாக இருந்த வரிகள், தற்போது 5%, 18% என இரு முக்கிய வரிகளாகவும், சொகுசு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற புதிய வரியாகவும் மாற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களின் வருவாய் இழப்பு

ஜிஎஸ்டி-யின் சாராம்சமான ‘ஒரே நாடு, ஒரே  வரி’ மூலம் மாநிலங்களுக்கான வருவாய் வழியை  ஒன்றிய பாஜக அரசு அடைத்து வைத்திருக்கிறது.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் பெரும்பான்மை மாநில அரசுகளின் பங்கிலிருந்து தான் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, ஹரியானா போன்ற முக்கிய ஜிஎஸ்டி பங்களிப்பாளர் மாநிலங்கள் அதிக வருவாய் வீழ்ச்சியை சந்திக்கும். கேரளா, பஞ்சாப், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதே சம் போன்றவை விகிதாச்சார ரீதியாக அதிக சுமை யை சந்திக்கும் - ஏனெனில் ஜிஎஸ்டி அவர்களின் வரி வருமானத்தில் 30-40 சதவீதம் ஆகும். ஏற்கெனவே மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர ஒன்றிய பாஜக அரசு மறுத்து வரும் நிலையில், இது மாநிலங்களுக்கு மேலும் வருவாய் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

அன்றாட உணவுப் பொருட்களுக்கு இல்லை வரிக்குறைப்பு

பெரும்பாலான மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய்,  காய்கறிகள், பழங்கள், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் வரியை ஒன்றிய அரசு ஏன் குறைக்கவில்லை? பெட்ரோல்-டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள்ளும் இல்லை; அதன் விலைக்கு எல்லையும் இல்லை. 2022 ஜூன் மாதம் நடந்த 47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 25 கிலோ மற்றும் அதற்குக் குறைவான எடையில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தயிர், பனீர் ஆகிய வற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இந்த வரி உயர்வு, அன்றாடம் வாங்கும் ஏழை களை மட்டுமே பாதிக்கிறது. 25 கிலோவுக்கு மேல் மொத்தமாக வாங்குபவர்களுக்கு வரி இல்லை.

சாமானியர்களுக்குப்  பயனற்ற வரிக்குறைப்பு

தற்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள பனீர், கெட்ச்-அப், ஜாம், ஐஸ்கிரீம், பாக்கெட் மிக்சர்கள், சாக்லெட்,  நூடுல்ஸ் ஆகியவை சாமானிய மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் வருவதில்லை. இவை ‘ஸ்பெஷல் உணவுகள்’. சாதாரண, ஏழை-எளிய, கூலித் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பலரும் நாள்தோறும், நெய், வெண்ணெய், உலர் பழங்கள், பாஸ்தா, ஐஸ் கிரீம், பழம்-காய்கறி ஜூஸ்கள், பனீர், பிசா பிரெட், பரோட்டா வகையான பிரெட்டுகள் ஆகியவற்றையா சாப்பிட்டிக் கொண்டிருக்கின்றனர்? சப்பாத்தி, ரொட்டிக்கு வரிக்குறைப்பு அறிவித்த ஒன்றிய அரசு, அரிசிக்கு விதித்த 5 சதவீத வரியை குறைக்கவில்லை. இருந்தாலும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கேஸ், பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்திருந்தால், வறு மைக் கோட்டிற்கு கீழ் உள்ள, சாதாரண ஏழை-எளிய மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பர்.

வேலையின்மையும் வறுமையும் அதிகரிக்கும் நிலை

நாட்டில் வேலையின்மை, ரயில்வே உள்ளிட்ட மிகப்பெரும் பொதுத்துறை அரசுப் பணித் தேர்வு களில் முறைகேடு உள்ளிட்டவை தொடர்கின்றன. தங்கள் ஊரில், மாநிலத்தில் சரியான வேலை, ஊதியம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் இடம்பெயர்ந்து சென்று, பணியாற்றி தங்களது குடும்பப் பொருளாதார நிலையை சமாளித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா காலத்தில் கிராமப்புற மக்களுக்கு கை கொடுத்த மகாத்மா காந்தி நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு வழங்கும் நிதியை ஒன்றிய அரசு தொ டர்ந்து குறைவாகவே வழங்குகிறது. 2020-21இல்  ரூ1.11 லட்சம் கோடி செலவழிக்கப்பட்ட இத்திட்டத்தி ற்கு, 2024-25, 2025-26 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் தலா ரூ.86,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கணக்கில் கொண்டால், இது உண்மை யில் நிதி குறைப்பே. இதனால் பல மாநிலங்களில் நூறுநாள் பணி முழுமையாக மேற்கொள்ளப்படுவ தில்லை. இது, கிராமப்புற மக்களின் வறுமை விகிதத்தை அதிகரித்திருக்கிறது.

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ், சமை யல் எரிவாயுவை ஒன்றிய அரசு மானியத்தில் வழங்கு கிறது. ஆனால் சமையல் எரிவாயுவை மட்டுமே பயன் படுத்துவது போதாத நிலையில், ஏழைமக்கள் மண்ணெண் ணெய், விறகை நாடும் நிலையே உள்ளது. இந்நிலையில், ரேசன் கடைகளில் மண்ணெண் ணெய் விநியோகமும் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஒன்றிய அரசு 2021 ஏப்ரல் மாதம் தமிழ் நாட்டிற்கு 7,536 கிலோ லிட்டர் வழங்கிய மண்ணெண் ணெய்யின் அளவை, 2024 ஏப்ரல் மாதம் 1,084 கிலோ  லிட்டர் என்ற அளவில் மிகவும் குறைத்து வழங்கி யுள்ளது. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மண்ணெண்ணெய் மிகவும் தேவை என்பதால், ஒன்றிய அரசு மாநிலத்திற்கு அதிகளவு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் இருந்தால்தானே  வண்டி ஓடும்

உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்து பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவிடம் வர்த்தக உறவு வைத்துள்ளதாகக் கூறி, இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். ரஷ்யா மானிய விலையில் வழங்கும் எரிபொருளுக்கு ஒன்றிய அரசு வரியை குறைத்திருக்க வேண்டும். அதைச்  செய்யவில்லை. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டு மென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது பெட்ரோல், டீசல் கார்களுக்கு மட்டும் வரி  குறைப்பு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் இருந்தால் தானே வண்டி ஓடும். பெட்ரோல்-டீசல் விலை நிர்ண யம்தான், அத்தியாவசியப் பொருட்களின் விலையை தீர்மானிக்கிறது. போக்குவரத்து செலவு அதிக ரித்தால், காய்கறி முதல் மளிகைப் பொருட்கள் வரை எல்லாவற்றின் விலையும் உயரும்.

ஏழைகளுக்கு  இது தீபாவளி பரிசு அல்ல!

ஏழை, நடுத்தர மக்களின் (குறிப்பாக பெண்களின்)  பெரும் கனவாக இருப்பது தங்க நகை வாங்குவது. ஆனால், தங்கத்தின் மீதான 3 சதவீத வரி, செய்கூலி மீதான 5 சதவீத வரி, எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான 5 சதவீத வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம்  விலை ஒவ்வொரு நாளும் பொழுதும் ராக்கெட் வேகத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ஒருவேளை, ஒன்றிய அரசு தங்கம் மீதான வரியை குறைத்திருந்தால், அது சாமானியர்களுக்கு பயன ளித்திருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சாதாரண ஏழை-எளிய மக்களுக்கு சொகுசு கார்கள், பைக்குகள், ஏ.சி., டிவி உள்ளிட்டவற்றின் வரி குறைவால் என்ன பயன்? இவற்றை வாங்கும் வசதி அவர்களுக்கு இல்லையே.  கடந்த ஞாயிறன்று (செப்.21) பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜிஎஸ்டி “சேமிப்புத் திருவிழா” தொடங்குகிறது என்றும், இது நாட்டு மக்களுக்கு நவராத்திரி-தீபாவளி பரிசு என்றும் பேசினார்.ஆனால் இந்த வரி மாற்றத்தின் பலன் உண்மையில் யாருக்கு போய்ச் சேரும்? இந்த ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தின் பலன் மக்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்று ஆட்சியாளர் கள் கூறுகிறார்கள் என்றால், உண்மையில் அது இடையில் உள்ளவர்களிடம் தங்கி விடும் அல்லது ஏழை-எளிய மக்களுக்குப் போய்ச் சேராது என்பது தானே அர்த்தம். வியாபாரிகள் வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு கடத்துவார்களா என்பது கேள்விக் குறியே.  மோடிஜி, இது ஏழைகளுக்கு தீபாவளி பரிசு அல்ல!