கூட்டாளியையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்கா, இஸ்ரேல் போர் வெறி
கடந்த ஒரு வாரத்தில் இரு ரவுடி தேசங் களான அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகை போர்ப் பதற்றத்தில் தள்ளும் ராணுவ அடாவடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அமெரிக்கா சர்வதேச கடல் பகுதியில் வெனிசூலா படகின் மீது தாக்குதல் நடத்தியது. அதில் இருந்த 11 பேர் கொல்லப்பட்டனர். வெனிசூலாவின் இடதுசாரி அரசை கவிழ்க்க ராணுவ நடவடிக்கைகளுக்கு டிரம்ப் நிர்வாகம் ஆணை யிட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி இஸ்ரேல் இன்னொரு சுதந்தர தேசமான கத்தாரின் தலைநகர் தோஹா மீது குண்டு வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்காவும் உடந்தை என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கத்தார் அமெரிக்காவின் கூட்டாளி. எனினும் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்ப இயலவில்லை. பாலஸ்தீனத்தின் காசா/ மேற்கு கரை/ லெபனான் / சிரியா/ ஈரான்/ இராக்/ துனிஷியா/ ஏமன் (தலை நகரம் சானா உட்பட)/ கத்தார் என இறையாண்மை கொண்ட 8 தேசங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யுள்ளது. இஸ்ரேலின் இத்தகைய தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் எதிர்வினை கவலை தருவதாக உள்ளது.
வெனிசூலாவுக்கு எதிராக போர் பதற்றம்
தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தி யத்துக்கு எதிராக சவால் விடும் இரு தேசங்கள் கியூபா வும் வெனிசூலாவும் ஆகும். கியூபாவுக்கு எதிராக ஏராளமான வர்த்தகத் தடைகளை விதித்து அவ்வப்பொழுது அங்கு சோசலிசத்தை சீர்குலைக்க பல நடவடிக்கைகளை அமெரிக்கா செய்து வரு கிறது. இடதுசாரிப் பாதையில் பயணிக்கும் இன்னொரு தேசமான வெனிசூலா மீது டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் வெறுப்பு உள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் போதை பொருட்கள் வெனிசூலாவிலிருந்துதான் வரு கிறது எனவும் வெனிசூலா போதைக் கும்பலுக்கு தலைமை தாங்குவதும் லாபம் ஈட்டுவதும் ஜனாதிபதி நிக்லோஸ் மதுரோதான் எனவும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி டிரம்ப் நிர்வாகம் ராணுவத் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
ஆனால் உண்மை என்ன?
அமெரிக்காவுக்குள் வரும் போதை பொருட்களில் 90% கொலம்பியா/ ஈகுவடார்/ பெரு ஆகிய நாடுகள் வழியாகத்தான் வருகின்றன. மேலும் இந்த நாடு களிலிருந்து வரும் போதைப் பொருட்கள் அமெரிக்கா வுக்குள் நுழைந்த பின்னர் யார் எப்படி விநியோகம் செய்கின்றனர் என்பதை டிரம்ப் நிர்வாகம் பேசுவது இல்லை. அமெரிக்காவுக்குள் விநியோகம் செய்வது அமெரிக்க அமைப்புகள் மற்றும் சமூக விரோத சக்திகள்தான் என்பதை டிரம்ப் நிர்வாகம் மறைக்கிறது. இந்த செயல்களில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. கூட பல சமயங்களில் ஈடுபட்டு வருகிறது என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். வெனிசூலா இடதுசாரி அரசாங்கம் போதைப் பொருட்கள் உற்பத்தி அல்லது விநியாகத்தில் ஈடுபடு வது இல்லை என்பதை அமெரிக்க உளவு நிறு வனங்கள் அறிக்கைகள் கொடுத்துள்ளன. எனினும் டிரம்ப் வெனிசூலாவுக்கு எதிராக போர் முழக்கம் செய்கிறார். வெனிசூலா மீது ராணுவ நடவடிக்கைகளுக்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று வெனிசூலா பல ஆண்டுகளாக இடதுசாரிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது. அது என்றைக்கும் அமெரிக்காவுக்கு ஆபத்து என டிரம்ப் நிர்வாகம் நினைக்கிறது. இன்னொரு முக்கியக் காரணம் வெனிசூலாவில் உள்ள ஏராளமான எரிசக்தி வளங்கள். ரஷ்ய மற்றும் அரேபிய வளை குடாவுக்கு அடுத்த படியாக என்ணெய் வளங்கள் வெனிசூலாவிடம் அதிகமாக உள்ளன. அவற்றை அபகரிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம். இராக்/ லிபியா/சிரியா போன்ற நாடுகளின் எண்ணெய் வளங்களை அபகரித்தது போல வெனிசூலாவின் வளங்களை அபகரிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிடு கிறது. வெனிசூலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்ய உதவுபவர்களுக்கு 50 மில்லியன் டாலர்கள் (ரூ450 கோடி) தரப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறி வித்துள்ளது. கரீபியன் கடல் பகுதியில் மூன்று ஏவுகணை போர்க் கப்பல்களும் ஒரு நீர்மூழ்கி கப்ப லும் நிறுத்தப்பட்டுள்ளன. F-35 ரக 10 விமானங்களும் ஆயிரக்கணக்கான அமெரிக்க போர் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். தன்னை பாதுகாத்துக் கொள்ள வெனிசூலா லட்சக்கணக்கான மக்களுக்கு ராணு வப்பயிற்சி அளித்து வருகிறது. அமெரிக்காவின் அடா வடித்தனங்களை லத்தீன் அமெரிக்க நாடுகள்/ ரஷ்யா/ சீனா/ ஈரான் கண்டித்துள்ளன. இந்தியா மவுனம் காக்கிறது.
கத்தார் மீது இஸ்ரேலின் தாக்குதல்
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கத்தார் தேசத்தின் தலைநகரான தோஹா மீது இஸ்ரேலின் 10 போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி யுள்ளன. கத்தார் நகரில் உள்ள தமது அலுவல கத்தில் கூடியுள்ள ஹமாஸ் தலைவர்களை கொல்வது என்பது இஸ்ரேலின் இலக்கு. இந்த தலைவர்கள்தான் டிரம்பின் போர் நிறுத்த ஆலோசனைகளை விவாதித்து இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தைகள் நடத்த இருந்தவர்கள். தன்னுடன் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் தலைவர்களை இஸ்ரேல் ஏன் கொல்ல வேண்டும்? எனெனில் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் விரும்பவில்லை. இனப்படுகொலை அல்லது பாலஸ்தீன மக்களை அகற்றுவதன் மூலம் காசா பகுதி முழுவதையும் அப கரிக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் திட்டம். அதற்கு சிறந்த வழி போர் நிறுத்த பேச்சுவார்த்தை களில் ஈடுபடுபவர்களையே கொல்வதுதான். ஈரான் அணுசக்தி உற்பத்தி தொடர்பான பேச்சு வார்த்தை களின் பொழுதும் இஸ்ரேல் இவ்வாறு பேச்சுவார்த்தை யாளர்களை கொன்றுள்ளது. இதே போலவே ஹெஸ்புல்லா சார்பாக பேச்சு வார்த்தை நடத்த அதன் தலைவர் நஸ்ருல்லா முன்வந்த பொழுதும் அவரை இஸ்ரேல் லெபனானில் கொன்றுள்ளது. எனினும் இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்படவில்லை. ஆனால் அவர்களது குடும்பத்தினர் சிலரும் கத்தாரின் பாதுகாப்பு வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவுக்கு தெரியாமல் நடந்ததா?
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தனக்கு தெரியாது எனவும் அது முற்றிலும் இஸ்ரேலின் முடிவு எனவும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் பல ஆய்வாளர்களும் இதனை நம்ப மறுக்கின்றனர். ஏனெனில் கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளம் உள்ளது. இந்த தளத்தின் அதிகாரி களுக்கு தெரியாமல் இஸ்ரேலின் விமானங்கள் தாக்கு தலில் ஈடுபட முடியாது. இஸ்ரேலின் விமானங்கள் புறப்படும் பொழுதே இந்த ராணுவ தளத்துக்கும் வானத்தில் சஞ்சரிக்கும் அமெரிக்காவின் உளவு விண்கலங்களுக்கும் தகவல் தெரிந்துவிடும். இஸ்ரேல் விமானங்கள் கத்தார் வரை பயணிக்க நடு வானில் எரிபொருட்களை நிரப்பவேண்டும். இதனை அமெரிக்க அல்லது பிரிட்டன் விமானங்கள் தான் செய்ய இயலும். கத்தார் வான் எல்லை பகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் நுழையவில்லை. மாறாக இராக் வான் எல்லையிலிருந்துதான் குண்டுகளை வீசியுள்ளன. இராக் வான் பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாடில் உள்ளது. கத்தாருக்கு அமெரிக்கா “பேட்ரியாட்” எனப்படும் வான்பாதுகாப்பு கவசத்தை அளித்துள்ளது. ஆனால் அது இயங்கவில்லை. ஏனெனில் அதன் இயக்கத்தை அமெரிக்க ராணுவம் நிறுத்திவிட்டது. அதன் மூலம் இஸ்ரேலுக்கு உதவியுள்ளது. இந்த தரவுகள் எல்லாம் இஸ்ரேலின் கத்தார் தாக்குதலுக்கு அமெரிக்காவும் உடந்தை என்பதை நிரூபிக்கின்றன.
கூட்டாளிக்கே இந்த கதியா?
கத்தார் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ஒபாமா ஆட்சி அறிவுறுத்தியதன் பேரில்தான் ஹமாஸ் அலுவலகத்துக்கு கத்தார் அனுமதி வழங்கியது. இஸ்ரேல்- ஹமாஸ் பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வதும் கத்தார்தான். வளைகுடா பகுதியில் மிகப்பெரிய ராணுவ தளத்துக்கு கத்தார் அனுமதி வழங்கியுள்ளது. அந்த தளத்தில் 10,000 அமெரிக்க வீரர்களும் கப்பல்களும் உள்ளன. இந்த தளம் கத்தார் தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது தடுக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. டிரம்ப் சமீபத்தில் கத்தார் வந்த பொழுது அவருக்கு கத்தார் அரசாங்கம் சுமார் ரூ4,000 கோடி மதிப்புள்ள ஆடம்பர விமானத்தை பரிசாக கொடுத்தது. மேலும் 1.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு (ரூ 1,02,00,000 கோடிகள்) அமெரிக்காவில் முதலீடு செய்யவும் முன்வந்தது. ஆனால் இது எதுவும் கத்தாரை இஸ்ரே லின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற உதவவில்லை. “நீ அமெரிக்காவுக்கு எதிரியாக இருந்தால் ஆபத்து நிச்சயம்! அமெரிக்காவுக்கு நண்பனாக இருந்தால் மரணம் நிச்சயம்” என்பது சர்வதேச அரசியல் கூற்று. அது கத்தாருக்கு கன கச்சிதமாகப் பொருந்தி யுள்ளது. காசா இனப்படுகொலையை தடுக்க பேச்சு வார்த்தைகளுக்கு கத்தார் ஏற்பாடு செய்தாலும் களத்தில் இஸ்ரேலை தடுக்க எந்த முயற்சியும் செய்ய வில்லை. இஸ்ரேலுடன் மறைமுக ஒத்துழைப்பு பாதையில்தான் கத்தார் பயணித்தது. அமெரிக்காவின் பொருளாதார ராணுவ கூட்டா ளியாக கத்தார் மாறியது. வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் எவ்வித செயலையும் கத்தார் விமர்சிப்பது இல்லை. ஈரான் சிதைவது நல்லது என எண்ணிய தேசம்தான் கத்தார். எனினும் இன்று அமெரிக்காவின் துரோகத்துக்கு பலியாகியுள்ளது. கத்தார் மீதான தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துக்கும் எச்சரிக்கை என இஸ்ரேல் நாடாளு மன்ற சபாநாயகர் கூறியுள்ளார். இப்பொழுதாவது சவூதி அரேபியா/ துருக்கி/ எகிப்து/ குவைத்/ பகரைன்/ அரபு அமீரகம்/ ஜோர்டான் போன்ற இஸ்லாமிய நாடுகள் உண்மையை உணர்வார்களா? பாலஸ்தீன மக்களுக்கு உதவ நேரடி களத்தில் இறங்கு வார்களா? அல்லது இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் சொல்வது போல “கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்கு தலை விரைவில் உலகம் மறந்துவிடும்” என்பது நடக்குமா? காலம்தான் பதில் சொல்லும். ஆனால் இஸ்லாமிய நாடுகள் இப்பொழுது கண்விழிக்கா விட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது.
இந்தியாவின் எதிர்வினை
கத்தார் மீதான தாக்குதலை உலகில் உள்ள அனைத்து தேசங்களும் வன்மையாக கண்டித்துள் ளன. ஆனால் இந்தியாவின் கண்டனம்தான் மிக மிக மென்மையானது. இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் “இஸ்ரேல்” எனும் வார்த்தை அல்லது “கண்டனம்” எனும் வார்த்தை அறவே இல்லை. எனினும் கத்தாருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவின் கீழ்க்கண்ட அம்சங்கள் முக்கியமானது: l கத்தாரில் 8,50,000 இந்தியர்கள் வாழ்கின்றனர். கத்தாரின் மக்கள் தொகையில் இது 25 முதல் 30%. l இந்தியாவிற்கு தேவையான எல்என்ஜி (LNG) எனப் படும் இயற்கை எரிவாயுவில் 40% கத்தார் தருகிறது. l இந்தியாவின் எல்பிஜி (LPG) தேவையை மிக அதிகமாக பூர்த்தி செய்வது கத்தார்தான். l இந்தியா- கத்தார் வணிகம் ஆண்டுக்கு சுமார் 14 பில்லியன் டாலர்கள். l எல்&டி போன்ற பல பெரும் கார்ப்பரேட்டுகள் கத்தாரில் இயங்குகின்றன. l கத்தாரின் நிதி நிறுவனங்கள் 3.2 பில்லியன் டாலர்களை இந்திய நிதி சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. எனினும் இந்திய அரசாங்கத்தின் எதிர்வினை இஸ்ரேலை கண்டிக்கத் தயங்குகிறது. ஏனெனில் மோடி- நேதன்யாகு தனிப்பட்ட நட்பு மட்டுமல்ல; இந்து மத வெறியின் இந்துத்துவாவும் யூத மத வெறி யின் சியோனிசமும் நெருங்கிய உறவு கொண்டுள் ளன. இதற்காக கத்தார் மீதான தாக்குதலை வன்மை யாகக் கண்டிக்க இந்தியா தயங்குகிறது. ஆனால் கத்தார் மட்டுமல்ல; பல வளரும் நாடுகளும் இந்தியா வின் மீது வைத்திருக்கும் சிறிதளவு நம்பிக்கையையும் இது சீர்குலைத்துவிடும். மேலும் அமெரிக்காவுடன் கை கோர்க்க நினைக்கும் இந்தியாவுக்கு கத்தாரின் கசப்பான அனுபவம் ஒரு படிப்பினை எனில் மிகை அல்ல.
