articles

img

‘அக்னி’க் குஞ்சொன்று கண்டோம்! - எஸ்.கார்த்திக்

ஒன்றிய பாஜக அரசின் ஒரே ஒரு அறிவிப்பு, வெளி யான முதல்நாள் முதல் பரவலாக அனைத்து மாநிலங்களிலும் நெருப்பை பற்ற வைத்து விட்டது. ‘அக்னிபாத்’ திட்டத்தினை வாபஸ்பெற வேண்டும் என பீகார், ஹரியானா, பஞ்சாப், உபி, தில்லி உள்ளிட்டு  பல மாநிலங்களில் போராட்டங்கள் தீப்பற்றி எரிந்து வரு கின்றன. பீகார், ஹரியானா, தெலுங்கானா மாநிலங்களில் ரயில்கள் எரிப்பு, தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் என போராட்டம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள குறிப்புகளின் படி  இப்போராட்டத்தினால் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஜூன் 14 அன்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சக முடிவின் அடிப்படையில் அக்னிபாத் என்று பெயரி டப்பட்ட இத்திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி 4 ஆண்டுகள் பணிக் கொண்ட 46,000 ராணுவ பணியிடங்க ளுக்கான அறிவிப்பு செய்யப்படுகிறது. குறுகியகால வேலைவாய்ப்பு; நிறைவான பொருளாதாரச் சலுகைகள் என்கிற ஆசையைத் தூண்டும் அடிப்படையிலான 4 ஆண்டு பணி; விடுவிக்கப்படும் போது சுமார் 12 லட்சம் ரூபாய் விடுவிப்பு தொகையை வழங்குவோம் என்கிறது. தேர்வு செய்யப்படுவோரில் 25 சதமானோர் மட்டுமே மேற்கொண்டு ராணுவப்பணியில் நீட்டிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் சேர்ந்து வெளியாகிறது.

இந்த அறிவிப்பினை வெளியிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வார்த்தைகளும், அறிவிப்பு குறித்து வெளியான தகவல்களும் மிக உன்னிப்பாக கவ னிக்கப்பட வேண்டியவை. அது உள்ளூர அல்ல; மிக வெளிப்படையாகவே ஒரு சித்தாந்த அணி திரட்டலை செய்பவையாக இருக்கிறது. ‘தேசியவாத’ உணர்வு கொண்ட இளைஞர்களை உருவாக்குவதும், அக்னி வீரர்கள் என்ற பெயரில் அவர்கள் பணியாற்றிட வாய்ப்பு  எனவும், அவர்கள் பணிக்குச் சென்று திரும்பும் போது  அது இத்தேசத்தின் மாபெரும் சொத்தாக மாறும் என்றும் கூறுகிறார். இத்திட்டம் மனிதவள மேம்பாட்டு கொள்கை யில் பாய்ச்சல்வேக புதிய பரிமாணங்களை உருவாக்கும் என்கிறார். அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிற் கான - வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்.

மோடி அரசின் பிடிவாதம்

ஒருபுறம் மிகத்தீவிரமான முறையில் தேசம் முழு வதும் கடந்த ஜூன் 14 முதல் இத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் அரசு இத்திட்டத்தினை அமலாக்கிட எடுத்து வரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிக மிகத் தீவிரமானதாக இருக்கிறது. அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் போராட்டங்களுக்கு மத்தியிலும் ஒன்றிய நிதித்துறை பொ துத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவ னங்களுக்கான கூட்டத்தினை நடத்துகிறது. அக்கூட்டத் தில் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து பயிற்சி பெற்று வெளியே வர உள்ள அக்னிவீரர்களுக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் சுயதொழில் மூலதனத்தை உரு வாக்குவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன.  இன்னொரு பக்கம் ஒன்றிய கல்வித்துறை ஜூன் 16 அன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் வரும் திறந்தவெளி பள்ளிகளின் தேசிய நிறு வனம் இத்திட்டத்தினை ஒட்டி சிறப்பு வகுப்புகளை நடத்த உள்ளது என்ற அறிவிப்பே அது. அதை வெளியிட்ட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘‘சமூகத்தின் முன்னோக்கிய இது போன்ற முன்னெடுப்பினை ஒன்றிய பாதுகாப்புத்துறையோடு இணைந்து செய்வதில் மகிழ்ச்சி’’ என்கிறார். 

துவக்கப்படாத ஒரு திட்டத்திற்கு இந்த அரசு எடுத்துக் கொள்ளும் இத்தகைய அதீத முயற்சிகளே உண்மையில் அச்சத்தை உருவாக்குகின்றன.  அதே ஜூன் 16 அன்று இரவு பாதுகாப்பு துறை அமைச்ச கம் மற்றொரு திருத்தத்தினை வெளியிடுகிறது. அந்த  அறிவிப்பின் படி விண்ணப்பிக்கும் வயது 23 ஆக உயர்த்தப் படுகிறது என்கிறார்கள். இன்னும் உன்னித்து கவனித்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ பணியிடங்கள் எதுவும் அறிவிக்கப்படாததால் இந்த ஓராண்டு மட்டும் இந்த விலக்கு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அக்னிபாத் திட்டத்தினை எதிர்த்த போராட்டங்கள் வயதினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை, எனவே வயதில் தளர்வு வந்தால் போராட்டங்கள் ஓய்வ தற்கு வாய்ப்பாக அமையும் எனக் கருதி அது திருத்தப் பட்டது. ஆனால் நிலைமை வேறொன்றாக இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட அதன் அலுவலகங்கள் சூறையாடப்படுகின்றன. காவலர்களுக்கும் போராடும் இளைஞர்களுக்கும் இடையிலான மோதல்கள் வெடித்துள்ளன. 

அரசின் இலக்கு என்ன?

உண்மையில் இத்தனை பேரார்வத்தோடு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இவ்வளவு அதிவேகமாக நடைமுறைப்படுத்த ஏன் இந்த அரசு துடிக்க வேண்டும்? இத்தனைக்கும் மத்தியில், ஜூன் 17அன்று அக்னிபாத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இரண்டு நாட்களில் துவங்கும் என்கிறார் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே. அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு டிசம்பர் முதல் தேர்வானவர்களுக்கான பயிற்சிகள் துவங்கப்படும் எனவும் கூறுகிறார்.  இவ்வளவு பெரிய விசயங்களையும் போராட்டங்க ளையும் உருவாக்கி இருக்கும் இத்திட்டத்தினை நாடாளு மன்ற விவாதத்திற்கு கூட உட்படுத்தாமல் 90 நாட்களில் இது நிறைவேற்றப்படும் என காலக்கெடு உட்பட நிர்ண யிக்கப்படுவது ஏன்? 

உண்மையில் அரசு கூறுவது போல இந்திய ராணு வத்தின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களின் சராசரி வய தினை 32 ல் இருந்து 24 ஆக மாற்றுவதற்கான முயற்சி மட்டும் தான் இதில் இருக்கிறதா ? நிச்சயம் இல்லை.  பாஜகவின் எம்.பி.,கள் சிலரும், சட்டமன்ற உறுப்பி னர்கள் சிலரும், ஏன், பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர், பாஜகவின் புதிய நெருக்கமான நண்பர் அம்ரீந்தர்சிங் உட்பட இத்திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். ஆனால் மறுபுறம் உத்தரப்பிர தேசத்தின் ஆதித்யநாத், உத்தர்கண்ட் மாநில முதல்வர் புஷ்கர்சிங் உள்ளிட்டோர் தாங்கள் ஆளும் மாநிலங்களில் 4 ஆண்டுகள் முடித்து வரும் வீரர்களை மாநில அரசின் பணி மற்றும் மாநில காவல்துறை பணிகளில் முன்னு ரிமை கொடுத்து தேர்வு செய்வோம் என்கின்றனர். இப்படியான செய்திகள் பரவும் போதே அதை தூக்கி எறிந்துவிட்டு இவர்களது சொந்த மாநிலங்களி லேயே இளைஞர்களின் போராட்ட நெருப்பு பற்றிப் பரவியுள்ளது.

பிபின் ராவத் தயாரித்த திட்டம்

உண்மையில், இந்தத் திட்டத்திற்கான ஆய்வுகள் துவக்ககட்ட பணிகள் 2020 ஆண்டிலேயே துவங்கப் பட்டுள்ளன. அதுகுறித்த பிரண்ட்லைன், டைம்ஸ் ஆப் இந்தியா இரண்டு நாளிதழ்களில் மட்டுமே செய்திகள் வந்துள்ளன. 2020 மே மாதம் பிபின் ராவத், முப்படைக ளின் தளபதியாக இருந்த போது இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூளையாக அவரே செயல் பட்டிருக்கிறார். அதற்கான தயாரிப்பு பணிகள் துவங்கிய சில நாட்களிலேயே 1000 வீரர்கள், 100 அதிகாரிகள் ஆகிய பணியிடங்களை குறுகிய கால வேலை (3 ஆண்டு கள்) என்ற அடிப்படையில் முயற்சி செய்ய இருந்ததாக ராணுவ கர்னலாக இருந்த அமன் ஆனந்த் பத்திரிகையா ளர்களிடம் கூறிய செய்தி வெளிவந்துள்ளது யார் கவனத்தையும் பெறவில்லை. அப்போதே அவர்கள் சொல்லியது ராணுவத்தினை தொழிலாக அல்லாமல் வாழ்வாதாரமாக பார்ப்பவர்களை உருவாக்குவது என்பது தான். உண்மையில் அப்போது அவர்கள் கூறிய திட்டத் திற்கான மாத சம்பளமாக 90,000 வரை இருக்கும் என்றனர்.  இந்தியாவில் ராணுவம் உருவாக்கப்பட்ட பின் ஒருமுறை குறுகிய கால ராணுவ பணித்திட்டம் ஒன்று ஏற்கெனவே 1962இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சீனப்போர் உச்சத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம். இந்திய ராணுவம் உருவாக்கப்பட்டு 12 ஆண்டு களில் நடைபெற்ற போர்ச்சூழல், நாட்டின் பாதுகாப்பு, வீரர்கள் பற்றாக்குறை, உடனடி வீரர் தேவை ஆகிய வற்றை கணக்கில் கொண்டு அப்போதைய அரசு குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணி யாற்றும் வகையில் ராணுவ வீரர்களுக்கான அறி விப்பினை வெளியிட்டது. ஆனால் அப்படி எடுக்கப்பட்ட வீரர்கள் பின்னர் முழுமையாக பணிக்கால நீட்டிப்பு செய்யப்பட்டனர். 

ஆனால் இப்போது 4 ஆண்டுகள் கொண்ட இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன?  இன்றைய நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முப்படைகளுக்கும் சேர்த்து 2018 -19 ல் 65000, 2019 -20 ல் 94000, காலிப் பணி யிடங்கள் உள்ளன. 2021 - 2022 ல் இன்னும் அறிவிப்பு கள் வெளியிடப்படாத நிலையில் ஏறக்குறைய சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பணியிடங்களுக்கான வீரர்கள் எண்ணிக்கை வந்துசேரும் ஆண்டில் இன்னும் சில லட்சம் வீரர்களுக்கான காலியிடங்கள் நிச்சயம் உருவாகும். எனவே, முழுப்பயிற்சி பெறாத 4 ஆண்டுகால வீரர்களி னால் நிச்சயம் ஒவ்வொரு இந்தியரின் உயிருக்கும் ஆபத்து என்கிற நிலையே நீடிக்கும் என்கிறார் ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரி ஒருவர். 

100 ராணுவப் பள்ளிகள்

இது ஒருபுறம் இருக்க, அக்னிபாத் திட்டத்திற்கென அரசு புதிய  100 ராணுவப் பள்ளிகளை உருவாக்க உள்ள தாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவற்றிற்கான பாடத்திட்டம் மற்றும் பயிற்சிகளுக்கும் ராணுவத்தின் படைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கப் போவதில்லை என்கிற செய்திகளும் வரு கின்றன. அப்படி எனில் அந்த ராணுவப் பள்ளியின் செயல் பாடு எப்படி இருக்கும்? சந்தேகத்திற்கு இடமின்றி, அவை  ஆர்எஸ்எஸ் கூடாரங்களாகத் தான் மாறும். இங்கிருந்து 25 சதவீதம் என்ற பெயரால் வெறியூட்டப்பட்ட இளை ஞர்கள் ராணுவப் படைகளுக்குள் வந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் மொத்த இந்திய ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் ஊறிப்போன ஒரு அரசு இயந்திரம் பாஜகவின் கைகளில் இருக்கும்.  இது பயங்கர விளைவுகளை உருவாக்கும். தமிழ கத்தின் காவல்துறையினர் மொத்த எண்ணிக்கை சுமார் 1 லட்சம். இதைப் போன்று 10 மடங்கு அதிகமான எண் ணிக்கையில் ராணுவத்தின் பயிற்சி பெற்ற வெறியூட்டப் பட்ட இளைஞர் கூட்டம் நமக்கு முன் உருவாகும். 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அக்னி பாத் திட்டத்தின் அறிமுகம் செய்து,  அளித்துள்ள ஒப்புதல்  வாக்குமூலம் மேற்கூறியதை உறுதிப்படுத்து கிறது.  ‘ஒரு சிவில் சமூகத்தில் ராணுவ நெறிமுறைகளைக் கொண்ட இளைஞர்கள்; ராணுவ பயிற்சியின் மூலம் நம்பிக்கை கொண்ட குடிமக்களை உருவாக்குவது; போருக்கான தயாரிப்போடு எப்போதும் இருப்பது; ஆயு தப்படைகள் தேசத்திற்கு செய்யும் சேவை’ என அவரின் வார்த்தைகளுக்குள் இருக்கும் அர்த்தம்,  ஒரு முழுமை யான மதவெறித் திட்டமே தவிர வேறல்ல.  அதேபோல், அரசு இத்திட்டத்தின் மாபெரும் பயனாக முன்னிறுத்தும் ரூ.12 லட்சம் பொருளாதாரப் பாதுகாப்பு. அதற்குள்ளும் பல சிக்கல்கள் பின்னிக் கிடக்கின்றன. தேர்வாகும் ஒவ்வொருவரின் வருமானத்தில் இருந்து 30 சதம் பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டு இறுதியில் அதற்கான வட்டி உள்ளிட்ட பணப்பலன்களோடு சேர்த்து ரூ.12 லட்சம் தரப்படும் என்கிறார்கள். ஆனால், இடையில்  கடன் ஏதேனும் தேவையெனில் ஒரு இலட்ச ரூபாய் மட்டும் பணமாக விடுவிக்கப்பட்டு மீதி 11 இலட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கான காப்புத்தொகையாக வங்கிக் கணக்கில் நிறுத்தி வைக்கப்படும் என்கிற அறிவிப்பும் அதற்குள் இருக்கிறது. 

இருள் சூழச் செய்யும் வழி

4 ஆண்டுகள் பணி செய்து வெளியே வரும் ஒவ்வொரு இளைஞனுக்கும் அவன் பணி செய்தே ஆக வேண்டிய இளமைக்காலம் பணிப்பாதுகாப்பற்ற கொடுங்கால மாக நிச்சயம் மாறும். ஆனால் அரசு அதற்கான எந்த வொரு மாற்றுத் திட்டத்தையும் கொண்டிருப்பதாக தெரிய வில்லை. வெளியில் வந்த பிறகு வேலைவாய்ப்பற்ற நிலை உருவானால் அது பெரும் கலவரங்களுக்கு வழிவகுக்கும். புதிய கோணத்தில் புதிய திசைவழியில் இந்திய ராணுவம் பயணிப்பதற்கான வழி என்று சொல்லி இளைஞர்களின் கண்கள் இருள் சூழச் செய்யும் வழியாக இது மாறிடும். உலகின் மிக அதிக ராணுவ வீரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம். சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்களோடு சீனா முதலிடத்தி லும், சுமார் 14.5 லட்சம் வீரர்களோடு இந்தியா இரண்டா வது இடத்திலும் உள்ள நிலையில் ஒரு பொதுச்சமூ கத்திற்கே ‘வேலைவாய்ப்பு’ என்கிற தன்மையில் காண்ட்ராக்ட்மயமாக்கி, ராணுவ பயிற்சிகளுக்கு தயார் செய்வது என்பது மிகத் தெளிவான தற்கொலைப்பாதை. 

இது போன்ற நடவடிக்கைகள் ராணுவத்தையும், தேசத்தையும் ஒரு சேர பலவீனப்படுத்துபவை. அதிலும் வலதுசாரி இந்துத்துவ சிந்தாந்த ஊடுருவல்கள் நிகழ்ந்து விட நூறு சதம் வாய்ப்புள்ள இத்திட்டம் அடியோடு நீக்கப்பட வேண்டியது. இதற்கெதிரான போர்க்குரல் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டியது காலத்தின் அவசியம்.  அக்னிபாத்திற்கு எதிராக கிளர்ந்து எரியட்டும் அக்னி! 

கட்டுரையாளர்: மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர், 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்





 

;