articles

img

அமெரிக்க தேர்தல் 2024 : ஒரு விமர்சனப் பார்வை - மூலதனத்தின் கொடிய விசுவாசி டிரம்ப் - எஸ்.பி.ராஜேந்திரன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. டொனால்டு டிரம்ப்  மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலின் முக்கிய அம்சங்களை ஆராய்வது அவசியமாகிறது.

2024 தேர்தலில் சுமார் 15.5 கோடி அமெ ரிக்கர்கள் வாக்களித்துள்ளனர். இது 2020 தேர்தலை விட குறை வாக இருந்தாலும், கடந்த நூறு ஆண்டுகளில் இரண்டா வது அதிக வாக்குப்பதிவாகும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடந்த தேர்தலை விட 90 லட்சம் வாக்குகளை இழந்துள்ளார். மாறாக டிரம்ப் வெறும் 12 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளார். சுமார் 10.7 கோடி வயது வந்தோர் வாக்க ளிக்கவில்லை என்பது கவலைக்குரிய அம்சம். தேர்தல் நிதி விவகாரங்கள் அமெரிக்க ஜனநாய கத்தின் போலித்தனத்தை வெளிப்படுத்துகின்றன. மொத்த தேர்தல் செலவு 1.6 லட்சம் கோடி ரூபாய்.  50 கோடீஸ்வரர்கள் மட்டும் 25,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். இதில் குடியரசுக் கட்சிக்கு 16,000 கோடி ரூபாயும், ஜனநாயகக் கட்சிக்கு 7,500 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸின் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. பொருளாதார நெருக்கடி, காசா போரை  ஆதரித்தது, முஸ்லிம் வாக்காளர்கள் ஆதரவு இழப்பு ஆகியவை முக்கியமானவை. கீழ்த்தட்டு மக்களில் 65 சதவீதம் பேர் அன்றாட வாழ்க்கையுடன் போராடு கின்றனர். உணவுப் பொருட்கள் விலையேற்றம், வீட்டு  வாடகை உயர்வு, அடமானக் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவை மக்களை மிகவும் பாதித்துள்ளன. பைடன் ஆட்சியில் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடைந்தது. புதிய ஆட்சியில், உள்நாட்டில் குடிமை உரிமை களில் பின்னடைவு, அரசுத்துறைகளில் நிதி வெட்டு, இடதுசாரிகள் மீதான அடக்குமுறை அதிகரிப்பு, கோடீஸ்வரர்களின் நேரடி தலையீடு ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும். குடிமை உரிமைகள், வாக்குரிமை, பேச்சுரிமை ஆகி யவை மேலும் கட்டுப்படுத்தப்படும். இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் ஜன நாயக நெருக்கடியையும், பொருளாதார ஏற்றத்தாழ்வு களையும், உலக அமைதிக்கான அச்சுறுத்தல்க ளையும் வெளிப்படுத்துகின்றன. 

தற்போது அமெரிக்கா உலகெங்கும் 900க்கும் மேற்பட்ட இராணுவ தளங்களைக் கொண்டுள் ளது. இவை அனைத்தும் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் கருவிகளாக பயன்படுகின்றன. கடற்படை தளங்கள் அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளன. இந்த இராணுவ பலத்தோடு, டாலர் மேலாதிக்கமும் சேர்ந்து கொள்கிறது. பொருளாதாரத் தடைகள் மூலம் உலக நாடுகளை கட்டுப்படுத்துகிறது அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களை அமெரிக்காவிடம் அடகு வைக்க வேண்டிய நிலையில் தான் உள்ளன. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொள்கை மிகவும் சிக்கலானது. இஸ்ரேலுடன் தனிப்பட்ட உறவு கொண்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற, அமைச்சரவை உறுப்பினர்கள் இஸ்ரே லின் குடியுரிமை பெற்றவர்கள். இருப்பினும், சவூதி அரேபியாவுடன் புதிய ஒப்பந்தம் செய்ய டிரம்ப் முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலின் போல்சான ரோ, அர்ஜெண்டினாவின் மிலே போன்ற வலதுசாரி தலைவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா, இடதுசாரி அரசுகளை கவிழ்க்க முயற்சிக்கிறது. பொரு ளாதார நெருக்கடி மூலம் இந்த நாடுகளை கட்டுப் படுத்த முயல்கிறது. ஆப்பிரிக்காவில் பெரிய அள விலான உதவிகள் செய்ய முன் வராமல், சீனாவின் செல்வாக்கை மட்டும் குறைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மிக ஆபத்தான போக்கு என்னவென்றால், அமெ ரிக்கா அணு ஆயுதங்களை முதல் தாக்குதலுக்கு பயன்படுத்தும் கொள்கையை கொண்டுள்ளது. 2025இல் சீனாவுடன் போர் ஏற்படலாம் என அமெரிக்க மூத்த ராணுவ ஜெனரல் மினிஹான் மிரட்டுகிறார். பல உயர் இராணுவ அதிகாரிகள் போர் ஆதரவு கொள்கையை கொண்டுள்ளனர். யூரேசியாவில் (ஐரோப்பா - ஆசியா இணையும் பகுதி) அமெரிக்காவின் நோக்கம் தெளிவானது. ரஷ்யா வை பிளவுபடுத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி,  தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பு கிறது. ஆனால் சீனா அடுத்த 10 ஆண்டுகளில் அமெ ரிக்காவை விஞ்சும் என கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஜனாதிபதித் தேர்தல் முடி வுகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைய லாம். உக்ரைன் போரின் தீவிரத்தைக் குறைத்தாலும், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையில் சமரசம் செய்தாலும், அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்க முயற்சிகள் தொடரும் என்பதே உண்மை. குறிப்பாக சீனாவுடனான மோதல் அதிகரிக்கக்கூடும்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்குப் பின் னால் உள்ள ஆழமான மாற்றங்களை புரிந்துகொள்வது அவசியம். கட்சி அமைப்புகள், வர்க்க மாற்றங்கள், புதிய நியமனங் கள் ஆகியவற்றை ஆராய்வோம். அமெரிக்க கட்சி அமைப்புகள் ஐரோப்பிய கட்சிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. குடி யரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டு பெரும் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போலவே செயல் படுகின்றன. உறுப்பினர் அடிப்படையிலான கட்சி  அமைப்பு இல்லை. தெளிவான கொள்கை, சித்தாந்தம் அற்ற இந்த கட்சிகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்காக மட்டுமே போட்டி யிடும் அமைப்புகளாக மாறியுள்ளன. அமெரிக்க வர்க்க அடித்தளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மெகா கோடீஸ்வரர்கள் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் செல்வந்தர்களில் மூன்றில் ஒரு பங்கி னர் குடியரசுக் கட்சியிலிருந்து ஜனநாயக கட்சிக்கு மாறியுள்ளனர். குறிப்பாக தொழில்நுட்ப கோடீஸ் வரர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பீட்டர் தீல், எலான் மஸ்க் போன்றோர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மனித சமூகத்தை கட்டுப்படுத்தும் கனவில் திளைக்கின்றனர். டிரம்பின் புதிய அமைச்சரவை நியமனங்கள் கவ லைக்குரியவை. வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கடும் கம்யூனிச எதிர்ப்பாளர். பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் உயர் இராணுவ அனுபவம் அற்றவர். நீதி அமைச்சர் மாட் கேட்ஸ் நீதித்துறை அனுபவம் இல்லாத வர். தேசிய புலனாய்வு இயக்குனர் துல்சி காபர்ட் புல னாய்வுத்துறை பின்னணி இல்லாதவர். ஐ.நா தூதர் எலைஸ் ஸ்டெஃபானிக் இராஜதந்திர அனுபவம் குறைந்த வர். பெரும்பாலான நியமனங்கள் அனுபவம் அற்றவர் களாகவும், சீன எதிர்ப்பாளர்களாகவும் உள்ளனர். குடியரசுக் கட்சியில் ஆறு முக்கிய போக்குகள் காணப்படுகின்றன. பொதுமக்களை திசைதிருப்பும் கோஷ்டி, தீவிர சுதந்திரவாதிகள், கிறிஸ்தவ-சியோ னிஸ்டுகள் (கிறிஸ்தவ- யூத மதவெறியர்கள்), கம்யூனிச எதிர்ப்பாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆர்வமுள்ள தொழில்நுட்ப கோடீஸ்வரர்கள், பழமைவாத சிந்தனை யாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இந்த மாற்றங்கள் அனைத்தும் அமெரிக்க ஜன நாயகத்தின் சீரழிவைக் காட்டுகின்றன. மக்களாட்சி என்ற பெயரில் கார்ப்பரேட் ஆட்சி நடைபெறுகிறது. கோடீஸ்வரர்களின் நலன்களுக்காக மக்களின் உரி மைகள் பறிக்கப்படுகின்றன. சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கக்கூடிய இந்த மாற்றங்கள், உள்நாட்டில் ஜனநாயக சீரழிவை ஏற்படுத்தக்கூடியவை.

அமெரிக்க தேர்தல் முடிவுகளை வெறும் தேர்தல் அரசியலாக மட்டும் பார்க்க முடியாது. வர்க்க உறவுகளின் மாற்றம், ஏகாதிபத்திய நலன்கள், தொழிலாளர் வர்க்கத்தின் நிலை ஆகியவற்றின் அடிப்படையிலும் ஆய்வு செய்வது அவசியம். அமெரிக்காவில் இன்று நிரந்தர கருப்பின உயர்மட்ட வர்க்கம் உருவாகியுள்ளது. இந்த வர்க்கம் கடந்த இரு தசாப்தங்களில் கருப்பின போர்க் குற்ற வாளிகளையும், ஏகாதிபத்திய ஆதரவாளர்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால் பெரும்பான்மையான கருப்பின மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டும் சுரண் டப்பட்டும் வருகின்றனர். அமெரிக்காவில் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் - முக்கியமாக மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் இருந்து வரும் ஆவணமற்ற குடியேறிகளை இலக்கு வைக்கிறது. ஆனால் அனைத்து குடியேறிகளும் தொழிலாள வர்க்கத்தினர் அல்லர் என்பதும், அமெரிக்க அட்டூழியங்களை ஆத ரிக்கும் குடியேறிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பி டத்தக்கது. அமெரிக்க அரசு மூலதனத்தின் சார்பில் செயல்படு கிறது. மெகா கோடீஸ்வரர்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது.

2024 தேர்தலில் விடுதலை மற்றும் சோசலிச கட்சியின் வேட்பாளர் கிளாடியா க்ரூஸ் 1,34,348 வாக்கு கள் பெற்றுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் ஒரு இடதுசாரி வேட்பாளர் பெற்ற அதிக வாக்குகள் ஆகும். 1932ல் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (CPUSA) வேட்பாளர் வில்லியம் ஸெட் ஃபோஸ்டர் பெற்ற 1,20,000 வாக்குகளை விட இது அதிகம். ஆனால் மக்கள் தொகை விகிதத்தில் 1932 வாக்குகளே அதிகம். நீண்ட கால கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தின் விளைவு களை இது காட்டுகிறது. மூன்றாம் கட்சிகள் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெற முடியாத கட்டமைப்பு அமெரிக்காவில் உள்ளது.  நாடாளுமன்றத்தில் நுழைவதும் கடினம். இருகட்சி முறையே நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. ராஸ் பெரோட் (1992), ராபர்ட் கென்னடி ஜூனியர் (2024) போன்ற பெரும் பணக்கார வேட்பாளர்கள் மட்டுமே விதிவிலக்கு. ஏகாதிபத்திய வலதுசாரிகள் ஒரு போதும் நல்லவர்கள் அல்ல. அவர்களது தலைமையிலான அமெரிக்க பழமைவாத கலாச்சாரம் அடிமைத்தனம், இனப்படுகொலை ஆகியவற்றோடு பின்னிப் பிணைந் தது. பெண்ணுரிமை வெறுப்பு, இனவெறி, இராணுவ வாதம், பிற்போக்குத்தனம் ஆகியவை இதன் அங்கங்கள். ‘MAGA (Make America Great Again - அமெ ரிக்காவை மீண்டும் பெருமைப்படுத்துவோம்)’ என்ற  முழக்கம், இந்த தேர்தலில் பிரதானமாக முன் வைக்கப்பட்டது. இதுதான் டிரம்ப் பிரச்சாரத்தின் அடிநாதமாக இருந்தது. இது, அமெரிக்காவின் தொழில் துறை கடந்த காலத்திற்கு திரும்புவதை குறிக்கிறது. ஆனால் அந்த கடந்த காலம் என்பது உலகின் தென்பகுதி நாடுகளை பொருளாதார, அரசியல், இராணுவ, இன ரீதியாக அடிமைப்படுத்திய காலம்.   மாமேதை காரல் மார்க்ஸ் குறிப்பிட்ட ‘ஆதி’ மூல தனத் திரட்டல்’ (Premitive accumulation of Capital) என்ற - மிக மிகக் கொடிய வழிகளிலான மூல தனக் குவிப்பு, இப்போது அமெரிக்காவுக்கு தேவை யாக உள்ளது. அதற்கான கொடிய பாதைகளில் பயணிக்கவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், டிரம்ப்பை தனது விசுவாசியாக தேர்வு செய்துள்ளது. இதன் மூலம், உலகளவில், போர் அபாயம் தொடர்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரமடைகின்றன.  தொழிலாளர்கள், பெண்கள், சிறுபான்மையினர் உட்பட அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களையும் முன்னெடுப்பதே உல கெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளின் முன் உள்ள கடமை!