articles

img

புதிய கிரிமினல் சட்டங்களை கிடப்பில் போட வேண்டும்

புதிய குற்றவியல் சட்டங்களை மிகக் கடுமையாக, உறுதியாக எதிர்க்க வேண்டும். ஏற்கெனவே நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆவேசப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு உச்சநீதிமன்றத்திற்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். இச்சட்டங்கள் குறித்து விவரங்கள் எளிய மக்களுக்கு முழுமையாக தெரிய வரும் போது பெரும் கிளர்ச்சிகள் வெடிக்கும்.  

மக்களவையின் சென்ற கூட்டத்தொடரின் இறுதியில், மிகவும் கேவலமான முறை யிலும், ஜனநாயக விரோதமான முறை யிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்க ளையும் இப்போது ஜூலை 1 முதல் நாடு முழுதும் அமல்படுத்தப்படுவதை பாஜக உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. இதுவரை நடைமுறையில் இருந்துவந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita) என்ற பெயரிலும், இந்திய சாட்சியச் சட்டம், பாரதிய சாக்சிய அதினி யம் (Bharatiya Sakshya Adhiniyam) என்ற பெய ரிலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பு முறையில், பல்வேறு மாற்றங்களை, எவ்விதமான தயாரிப்பும், விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பாஜக, இப்போது நடைபெற்ற தேர்த லில் வாக்காளர்கள் அதற்கு மரண அடியைக் கொடுத்து, அது பெற்றிருந்த பெரும்பான்மையைப் பறித்துள்ள போதிலும், எவ்விதமான மனக்கிலேசமு மின்றி, ஜூலை 1 முதல் இப்புதிய சட்டங்களை நடை முறைப்படுத்தி இருக்கிறது. பாஜக எதனையும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.   இந்திப் பெயர்கள் கொடுக்கப்பட்டு, இந்தியில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த மூன்று சட்டங்களும் மக்களவையில் முழுமையாக விவாதிக்கப்பட வில்லை. இந்தச் சட்டங்கள் பெயரளவில் ஆய்வுக் காக தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கிடைக்கப்பெற்ற ஒருசில நிமிடங்களிலேயே அவையில் நிறைவேற்றப்பட்டன. அவை நிறைவேற் றப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் 148  பேர் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், இந்தச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் இதுதொடர்பான நடவடிக்கை களில் பங்கேற்க முடியவில்லை.

ஜூலை 1 க்கு முன்,  ஜூலை 1க்குப் பின்...

நீதித்துறையில் அனைத்து மட்டங்களிலும் செயல்படும் வழக்கறிஞர்களும், ஏன், காவல்துறையி னரும் கூட, புதிய சட்டங்களுடன் பரிச்சயம் இல்லாதி ருப்பதால், இது இயற்கையாகவே ஏராளமான பிரச்ச னைகளைக் கொண்டுவரும். புதிய சட்டங்கள் பல் வேறு விதங்களில் வியாக்கியானம் செய்யப்படும். ஜூலை 1ஆம் தேதிக்கு முன் குற்றம் செய்த நபர், தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களின்படி விசாரணை செய்யப்படுவார். ஜூலை 1க்குப்பின் குற்றம் நடந்தால், இக்குற்றத்தைப் புரிந்தவர்கள் புதிய சட்டங்களின்படி விசாரிக்கப்படுவார்கள். இது நீதித்துறையில் நிச்சயமாக பிரச்சனைகளை ஏற் படுத்திடும்.  உதாரணமாக, ஜூலை 1க்கு முன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால், வழக் கை பழைய சட்டங்களின்படி நடத்த வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கோருவார்கள். ஆனால்,  அரசுத்தரப்பு சார்பில் புதிய சட்டங்களின்படி நடத்த வேண்டும் என்று கோரப்படலாம். மேல்முறையீடு களும் மிகவும் சிக்கலானவைகளாக மாறிடும். சட்டங்களில் உள்ள வார்த்தைகள் குறித்தோ அல்லது ஷரத்துகள் குறித்தோ ஏதேனும் ஐயங்கள் எழுமாயின் அவற்றை உச்சநீதிமன்றம்தான் விளக்கி டும். இவ்வாறு 1973இல் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து இப்போதுதான் ஒரு நிச்சயத்தன்மையை அடைய முடிந்தது. ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய சட்டங்கள் தொடர்பாக நிச்சயத் தன்மை ஏற்படுவதற்கு மேலும் ஐம்பது ஆண்டுகளாகி டும். நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான நீதித்துறை நடுவர்கள் (magistrates) பல்வேறு வழிகளில் இதற்கு விளக்கமளித்தால் நிலைமை அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்த்திட முடியும். நிச்சயமாக இது வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திடும். இவர்கள் பல்வேறு விதமான விளக்கங்களையும், தாமதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றஞ்சாட்டப் பட்டவர் காவல் அடைப்பில் சிறையில் அடைக்கப்பட்டி ருந்தால், அவருடைய பிரச்சனைகளையும், துன் பத்தையும் மேலும் மோசமாக்கிடும்.  

சட்டமே சர்ச்சைக்குரியதாகும் போது உத்தரவாதம் என்னாகும்?

நாட்டிலுள்ள சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை களைத் தவிர வேறெந்தவிதத்திலும் நாட்டின் பிரஜை எவரும் அவருடைய வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை இழக்கமாட்டார்கள் என்று அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அந்தச் சட்டமே சர்ச்சைக்குரியதாக மாறும்போது, இந்த உத்தரவாதத்தை அமல்படுத்துவது மிகவும் சிரமமாக மாறிவிடும். சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து இப்புதிய சட்டங்கள் நிச்சயமற்ற தன்மையையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

நிலுவை வழக்குகள்  30 விழுக்காடு அதிகரிக்கும்

புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபின்னர், நிலு வையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மேலும் 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று மூத்த வழக்குரைஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். குறிப்பாக நீதிமன்றங்களில் வாதாட போதிய வாய்ப்பு வசதி இல்லாதவர்களுக்கு நீதி மறுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்போது நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் கதி என்னாகும் என்பது குறித்து கணக்கிட அரசாங்கம் எவ்வித முயற்சியும் மேற் கொண்டதாகத் தெரியவில்லை. அதைப்பற்றி அது எவ்விதத்திலும் கவலைப்படவில்லை. புதிய சட்டங்களில் சில பிரிவுகள் மொழி பெயர்க்கப்பட்டு அமல்படுத்தப்படும் சமயத்தில் தவிர்க்கமுடியாத விதத்தில் குளறுபடிகளை ஏற்படுத் தும் என்ற போதிலும், சில பிரிவுகள் மிகவும் கொடுங் கோன்மை மிக்கவைகளாகும். நீதியை அணுகுவதற்கு அவை நிச்சயமாகத் தடைகளை ஏற்படுத்திடும்.

முதல் தகவல் அறிக்கை பதிவு அவகாசம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் அம்சம்

நீதியைக் கோருவதற்காக எடுத்து வைக்கப்படும் முதல் அடி என்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதேயாகும். இப்போதுள்ள சட்டங்களின் படி இதனை உடனடியாகச் செய்திட வேண்டும். ஆனால் புதிதாக வந்துள்ள சட்டங்களின்கீழ், மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பாக,  பல்வேறு அம்சங்களை நன்கு ஆய்வு செய்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி, 14 நாட்கள் வரையிலும் தாமதப் படுத்த முடியும். முதல் தகவல் அறிக்கைகளைக் காவல் துறையினர் உடனடியாகப் பதிவு செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற உச்சநீதிமன் றத்தின் தீர்வறிக்கைகளை இது முற்றிலும் மீறுவ தாகும்.  ஒரு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திட காவல் நிலைய அதிகாரி 14 நாட்கள் வரையிலும் தாமதம் செய்திடலாம் என்று அவருக்கு அளித்தி ருக்கும் உரிமை, நிச்சயமாக ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் அளித் தால், அத்தகைய புகாரை அவர் திரும்பப் பெறுவ தற்காக, அவரை வற்புறுத்துவதற்கும் துன்புறுத்துவ தற்கும் இந்தப் பதினான்கு நாட்களும் வழி வகுத்தி டும். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல்வேறு வழிமுறை களைப் பயன்படுத்திடவும் இது ஒரு வாய்ப்பினை அளிக்கிறது.  நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெறுவதில் ஏற்கனவே மிகவும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் தங்கள் உரிமை யைப் பெறுவதில் இப்புதிய சட்டங்கள் மேலும் பல வழிகளில் தீங்கு விளைவித்திடும். இப்போதுள்ள சட்டத்தின்படி காவல் அடைப்புக் காலத்தின் வரம்பு (remand period) 15 நாட்களாகும். ஆனால் புதிய சட்டம் காவல்துறையினர் 15 நாட்க ளுக்கும் அப்பால் காவல் அடைப்புக் காலத்தை நீட்டித்திட வகை செய்கிறது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டமானது, ‘திரும்பத்திரும்பக் குற்றம் புரிபவர்களுக்கு’ (இது ஒரு புதிய வகையினமாகும்), கைவிலங்கு பூட்டிக் கொண்டுவருவதற்கும் வகை செய்கிறது. எனவே, இந்தப் புதிய சட்டமானது நலி வடைந்தவர்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்களுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்தின் நலன்களு க்கு விரோதமானவர்கள் என்று கருதுபவர்களுக்கு எதிராகவும் அதிகாரங்களை குவித்திடும் விதத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

கடும் தாக்குதலை ஏற்படுத்தும் தேசத்துரோகக் குற்றப் பிரிவு

புதிய சட்டங்களின் கீழ் மற்றொரு மிகவும் கொடு மையான ஆபத்தான அம்சம் என்னவெனில், உச்ச நீதிமன்றத்தால் ஒழித்துக்கட்டப்பட்ட, ‘தேசத் துரோகக் குற்றத்தை’ வரையறுத்திடும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவானது, இப்போது கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா என்னும் புதிய சட்டத்தின் 152ஆவது பிரிவின்கீழ் முன்பி ருந்த வாசகங்களைக் காட்டிலும் இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒற்றுமை (sovereignty and integrity) போன்ற கூடுதலான வார்த்தைகளுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன.   மூத்த வழக்கறிஞர்களின் கூற்றுகளின்படி, முன்பு இல்லாத வகையில் இப்புதிய சட்டத்தின்கீழ் ‘தேசத் துரோகம்’ (‘anti-national) என்னும் குற்றம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. இயற்கையாகவே இது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான உரிமைகள் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்திடும். இந்தப் புதிய சட்டங்கள் வருவதற்கு முன்பாகவே தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக இந்த அர சாங்கம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் கடுமை யாகவும் அநீதியாகவும் இருந்துவந்துள்ளதைப் பார்த்தோம். இப்போது இந்தப் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவை மேலும் மோசமாகிவிடும்.

ஒரு குற்றத்திற்கு இரு வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை...

அதுமட்டுமல்ல, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தில் (UAPA) இடம் பெற்றுள்ள பல குற்றங்கள், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள், குற்றஞ்சாட்டப்படும் ஒருவர், ஒரே குற்றத்திற்காக இரு குற்ற அறிக்கைகளையும், இரு புலனாய்வு அதிகாரி களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றத்திற்கு, தேசியப் புலனாய்வு முகமை அதிகாரியையும், அதேகுற்றம் புதிய சட்டத் தின்கீழ் உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப் பட்டு அக்காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் அல்லது ஆய்வாளரையும் எதிர்கொள்ள வேண்டியி ருக்கும். ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனைதான் அளிக்கப்பட முடியும் என்றாலும், இவ்வாறு ஒரு குற்றத் திற்காக இரு வழக்குகளை எதிர்கொள்ளும் செயல் முறையே கடுமையான தண்டனைக்குரியதாக இருந்திடும்.

உள்ளூர் காவல் அதிகாரிக்கு  அதிக அதிகாரம்...

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதக் குற்றத்திற்கு,  புல னாய்வு அதிகாரியாக காவல்துறையில் உயர் அதிகார மட்டத்தில் உள்ள ஒருவர் புலனாய்வு அதிகாரியாக இருக்கும் அதே சமயத்தில், உள்ளூர் காவல் நிலை யத்தில் பயங்கரவாதக் குற்றத்திற்காகப் பதிவு செய்யப் படும் அதே குற்றத்திற்கு,  அக்காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளரோ அல்லது ஆய்வாளரோ புலனாய்வு அதிகாரியாக இருப்பார்கள். இதில் மேலும் ஆபத்தான அம்சம் என்னவெனில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்கிற்கு, அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று இருக்கும் அதே சமயத்தில், அதே குற்றம் உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டால், அவ்வாறு எந்த அனுமதியும் தேவை யில்லை. சாதாரணமான எந்தவொரு காவல்துறை அதிகாரியும் எவரொருவரையும் பயங்கரவாதக் குற்றத்திற்காக விசாரணை செய்திட முடியும்.

ஏற்றுக் கொள்ளப்பட முடியாத இப்போதைய வடிவம்

எனவே, புதிய சட்டங்கள் உறுதியுடன் எதிர்க்கப் பட வேண்டும். நாடு முழுதும் உள்ள வழக்கறி ஞர்கள் சங்கங்கள் இவற்றுக்கு எதிராக கிளர்ச்சிப் போ ராட்டங்களுக்கும், நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் போராட்டங்களுக்கும் திட்டமிட்டிருக்கின்றன. இவற்றை எதிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கையெழுத்திட்டு மனுக்களை அனுப்பியிருக்கிறார்கள். இந்தச் சட்டங்கள் குறித்த தகவல்கள் விரிவான அளவில் செல்லும்போது, இதற் கெதிரான கிளர்ச்சிப் போராட்டங்களும், எதிர்ப்பும் அதிகரிப்பது தொடரும். இந்தச் சட்டங்கள் குறித்து புதிதாக நுண்ணாய்வு மேற்கொள்ளப்படும் வரையிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி,  இந்தச் சட்டங்களைக் கிடப்பில் போட வைப்பதற்கு பொதுக் கருத்தால், நிர்ப்பந்திக்கப்பட வேண்டும். இந்தச் சட்டங்கள் நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இவை இப்போது வந்துள்ள வடிவத்தில் ஏற்கப்பட முடியா தவைகளாகும்.   ஜூலை 3, 2024,  தமிழில் : ச.வீரமணி