articles

img

வெளியில் நடந்த முஸ்லீம் வெறுப்புப் பேச்சு நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழைந்தது

சமூகத்தில் தலைவிரித்தாடி வந்த, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, இப்போது நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெற்ற  சிறப்புக் கூட்டத்தொடரின் இறுதிநாளன்று, தில்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர், ரமேஷ் பிதூரி என்பவர், மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டேனிஷ் அலி க்கு எதிராக மிகவும் இழிவான முறையில் முஸ்லீம் எதிர்ப்பு அடைமொழிகளைப் பிரயோகித்தார்.  ‘முல்லா பயங்கரவாதி’ போன்ற வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் இதற்குமுன் எப்போதும் கேட்டதில்லை. இவ்வாறு டேனிஷ் அலியைக் குறிவைத்து மேற்படி பிதூரியால் திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. பிதூரி வெறித்தனமாகப்பேசும் பேச்சை நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடியோ மூலம் பார்த்து, அதிர்ச்சியும் சீற்றமும் அடைந்துள்ளனர்.

புண்பட்டிருந்தால் வருத்தம்

இவ்வாறு பேசிய நபருக்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், ஆளும் கட்சித் தலைமையும் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றுதான் ஒருவர் நினைத்திருப்பார். ஆனால் இவ்வாறு பேசிய நபருக்கு எதிராக அப்படி எதுவும் நடந்திடவில்லை. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்தான், “எதிர்க்கட்சியினரின் உணர்வுகள் புண்பட்டிருக்குமானால், வருத்தம் தெரிவிப்பதாகக்,” கூறியிருக்கிறார். இது தவிர, முஸ்லீம்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்திற்கு எவ்விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை அல்லது டேனிஷ் அலியிடம் மன்னிப்புக் கேட்கப்படவும் இல்லை.

வெறும் எச்சரிக்கை மட்டுமே!

சபாநாயகர், பிதூரியை மக்களவையிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்திருக்க வேண்டும். அவர், அப்படியெல்லாம் எதுவும் செய்திடவில்லை. மாறாக, பிதூரிக்கு கடும் எச்சரிக்கை மட்டும் விடுத்துள்ளதோடு, இதுபோன்ற நடவடிக்கை தொடர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மட்டுமே கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சியினர் மீது கடும் நடவடிக்கை

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் நடந்துகொள்ளும் விதமே இதற்கு முற்றிலும் நேர்மாறானதாகும். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதற்கும் அவர் அவையிலிருந்து இடைநீக்கம்  செய்யப்பட்டிருக்கிறார். மேலும் உரிமைக்குழு (Privileges Committee) இவருக்கு எதிரான புகாரின் மீது முடிவு எடுக்கும் வரையிலும் இவருடைய இடைநீக்கம் தொடரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மற்றொரு ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சத்தா என்பவரும் சென்ற கூட்டத்தொடரின்போது இடைநீக்கம் செய்யப்பட்டார். மக்களவையில், மற்றொரு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர், சுசில் குமார் ரத்தி, மழைக்காலக் கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அதிர் ரஞ்சன் சௌத்ரியும் உரிமைக்குழு  சந்தித்து, அவரை மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக பரிந்துரைக்கும் வரையிலும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.   

டேனிஷ் அலி மீது பாஜகவினர் புகார்

 பிதூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் டேனிஷ் அலியின் கடிதத்திற்கு சபாநாயகர் பதிலளிக்கவில்லை. பாஜக அவருக்கு காரணம் கோரும் அறிவிப்பு அனுப்பியிருக்கிறது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை. மாறாக பாஜக, பிதூரிக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதற்குப் பதிலாக, அவரைப் பாதுகாப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்கிறது. நிஷிகாந்த் துபே போன்ற பாஜக உறுப்பினர்கள்,  பிரதமருக்கு எதிராக ‘விரும்பத்தகாத’ கருத்துக்களை டேனிஷ் அலி கூறியதாகவும் அதன்மூலம் பிதூரியை ஆத்திரமடைய வைத்தார் என்றும் டேனிஷ் அலி மீது குற்றஞ்சாட்டி, சபாநாயகருக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

வெறுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியே...

நாடு முழுவதும் இந்துத்துவா வெறியர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் விதத்தில் பேசிவருவதுடனும், தாக்குதல்களைத் தொடுத்து வருவதுடனும் பிதூரியின் வெறுப்புப் பேச்சு பார்க்கப்பட வேண்டும்.

ரயிலில்... பள்ளியில்...

ஹரித்வாரில் நடைபெற்ற ‘சாமியார்களின் நாடாளுமன்றத்தில்’ (`Dharam Sansads’) முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்கள் பசுக்க ளைக் கடத்திச் செல்கிறார்கள் என்றோ அல்லது மாட்டுக்கறியை எடுத்துச் செல்கிறார்கள் என்றோ குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படுவது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து, நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.   ரயிலில் பயணம் செய்கையில் ஒரு ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர்  மூன்று முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார். உபிமாநிலம் முசாபர்நகரில், தனியார் பள்ளி ஒன்றில்,பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதனால் ஏழு வயது முஸ்லீம் சிறுவனை, மற்ற மாணவர்கள் மாற்றி மாற்றி அடித்து நொறுக்க ப்பட்டிருக்கிறான். இவை அனைத்தும் இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லீம் வியாபாரிகள் தள்ளுவண்டிக ளில் பொருள்களைக் கொண்டுவந்து விற்கக்கூடாது என்று பொருளாதா ரத் தடை விதித்திடும் நடவடிக்கைகளுக்கிடையில் நடந்து கொண்டி ருக்கின்றன.

ஊட்டி வளர்க்கப்படும் முஸ்லீம் எதிர்ப்பு 

பிதூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்திருப்பதன்மூலம் இவர்கள் நாடாளுமன்ற அமைப்பையே இழிவுபடுத்தி இருக்கிறார்கள். ஆளும்கட்சியினரால் ஊட்டிவளர்க்கப்படும் முஸ்லீம்களுக்கு எதிரான ‘இஸ்லாமோபோபியா’ (Islamophobia)-விற்கு சட்டப்பூர்வமான முத்திரையை அளித்துள்ளார்கள். பிதூரியின் வெறுப்புப் பேச்சு என்பது முஸ்லீம்களுக்கு எதிரான பாஜக-வின்  ஒட்டுமொத்த மனோபாவத்தின் ஒரு பகுதியே என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய நாடாளு மன்றக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள ‘செங்கோல்’ என்பது நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களைப் பொறுத்தவரை, ‘இந்துத்துவா அதிகாரத்தி னைக்’ காட்டுவதாகக் கருதி, அவ்வாறே செயல்பட்டுக் கொண்டு மிருக்கிறார்கள்.

செப்டம்பர் 27, 2023, 
தமிழில்: ச.வீரமணி