articles

img

அயல்துறை கொள்கையின் வர்க்க உள்ளடக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிக்குழு சோவியத் கட்சியின் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய நேரம், சோவியத் யூனியன் தலைமை யிலான சோசலிச முகாமுக்கும் அமெரிக்கா தலைமையிலான முத லாளித்துவ முகாமுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்தது.  அதே கால கட்டத்தில், முத லாளித்துவ முகாமுக்குள்ளேயே பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு கோஷ்டிகளுக்கிடையேயும் மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.  மாஸ்கோவில் சோவியத் தலை மையுடன் நடத்தப்பட்ட ஆலோச னைக்குப் பின் உருவான இந்திய கட்சிக்கான திட்டத்தில், மேற்கண்ட இரண்டு மோதல்களையுமே இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது வர்க்க நலன்களைக் காப்பாற்றிக் கொள்வ தற்காக பயன்படுத்திக் கொள்கின்றன என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

 தொழிலாளி வர்க்க அக்கறை  

அதிலிருந்து பின்வரும் முடிவும் எடுக்கப்பட்டது. அதாவது, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ முகாமுக்கும் சோசலிச முகாமுக்கும் இடையேயான முரண்பாடுகளையும் அதே போல முதலாளித்துவ முகா முக்குள் உள்ள பல்வேறு நாடு களுக்கு இடையேயான முரண்பாடு களையும் தமது சொந்த ஆதாயத் துக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. அதில் தொழிலாளி வர்க்கத்தின் மீது எவ்வித அக்கறை யும் கிடையாது. இந்திய தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு எது ஏற்புடையது என்றால் சோசலிச முகாமுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பது தான். எனவே தான், 1951 அக்டோபரில் கூடிய கட்சி யின் சிறப்பு மாநாட்டில் “முதலா ளித்துவ முகாமுக்கும் சோசலிச முகா முக்கும் இடையேயும், அதே நேரத்தில் பல்வேறு முதலாளித்துவ அரசு களுக்கு இடையேயும் நாடகம்” நடத்து கிற இந்திய அரசின் அயல்துறைக் கொள்கையை எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மதுரை நகரில் 1953 டிசம்பரில் மூன்றாவது அகில இந்திய மாநாடு கூடிய நேரத்தில் -நிலைமையில் கணிசமான மாறு தல்கள் ஏற்பட்டிருந்தன. இந்திய அரசு சோசலிச முகாமின் பக்கத்தில் உறுதியாக நிற்கவில்லை என்றாலும் ஏகாதிபத்திய முகாமுக்கு எதிரான நிலைக்குச் சென்றது.

 கூட்டுச் சேராக் கொள்கை என்ற  பெயரில் இந்தக் கொள்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. இந்தக் கொள்கை அதற்கு முன்ன தாகவே உருவாக்கப்பட்டதுதான். ஆனால் ஆரம்ப கட்டங்களில் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஏகாதி பத்திய முகாமுக்கு சார்புடையவர் களாக இருந்தனர். இந்திய முதலாளி வர்க்கம் பிரிட்டிஷ் காமன்வெல்த் மற்றும் அமெரிக்க உதவியோடு இந்தியாவை முதலாளித்துவப் பாதையில் முன்னேற்ற முயன்று கொண்டிருந்தது.  இந்தக் காரணத்திற்காகத்தான் நேரு அரசு, பொருளாதார சீரமைப்புக்காக பிரிட்டிஷ் அரசால் தயாரிக்கப்பட்ட, முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை மேற்கொண்டது. திட்டம் 1951இல் துவங்கியது. இதே  காரணத்திற்காகத்தான் பிரதமர் நேரு அமெரிக்காவுக்குச் சென்று,  இந்தியாவின் தொழில் மற்றும் விவ சாய வளர்ச்சிக்கும் நவீனமயமாக்கும் முயற்சிக்கும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

அதாவது பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் கிடைத்த வெற்றியில் சோவியத்யூனியனின் பங்கு எவ்வளவு மகத்தானதாக இருந்த போதிலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ அரசுகளால் தான் இந்தியா போன்ற புதிதாக விடுதலை பெற்ற ஒரு நாட்டிற்கு உதவ முடியும் என்று நேருவும் அவரது சகாக்களும் நினைத்தனர்.  ஆனால் நேருவின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்தது. பிரிட் டிஷ் தாக்கத்தோடு தயாரிக்கப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தி யாவைத் தொழில் மயமாக்குவது குறித்தோ விவசாயத்தை நவீனமய மாக்குவது குறித்தோ குறிப்பிடத்தக்க இடம் எதுவும் அளிக்கப்படவில்லை.  

சார்பில் ஒரு மாற்றம்

 ஆனால், சீனாவில் நடந்த கோமின் டாங்-கம்யூனிஸ்ட் யுத்தமும், அதைத் தொடர்ந்து அங்கே  உருவான சீன மக்கள் அரசும், புதிய அரசின் தலைமையில் அங்கே நடந்த விவசாயப் புரட்சியும் இவையெல்லா மாக இந்திய மக்களிடத்தில் மட்டு மல்லாமல் இந்திய ஆளும் வர்க்கங் களிடத்திலும் தாக்கத்தை ஏற் படுத்தின. முதலாளித்துவ அரசுகளு டன் நெருக்கம் தளர்ந்தது. சோசலிச அரசுகளுடன் நெருக்கம் பலமடை ந்தது. அதுவரையில் கூட்டுச் சேராக் கொள்கை என்ற அமைப்புக்கு உள்ளேயே இருந்துகொண்டு ஏகாதி பத்திய அரசுகளுக்குப் பின்னால் செல்வதில் ஆர்வம் காட்டிய இந்திய ஆளும் வர்க்கம் இப்போது அதே கூட்டுச்சேராக் கொள்கைக்கு உள்ளேயே இருந்துகொண்டு சோச லிச உலகத்துடன் நெருங்க ஆரம்பித்தது.  இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் அடிப்படையில்தான், கம்யூனிஸ்ட் கட்சிக்குள், காங்கிரஸ் அரசு மீதான அணுகுமுறையில் பெறும் மாறுதல் தேவை என வலியுறுத்துகிற கருத்து மேலே வந்தது.

அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலையை ஏற்கெனவே மேற் கொண்டுவிட்ட அரசு, காலப்போக்கில் படிப்படியாக அதன் உள்நாட்டுக் கொள்கைகளிலும் முற்போக்காக மாறும் என்ற வாதம் முன்வைக்கப் பட்டது. அரசின் அயல் துறைக் கொள்கைகளில் இருந்த முற்போக்குத் தன்மை அதன் உள்நாட்டுக் கொள்கைகளிலும் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும் என கணக்கிடப்பட்டது.  மூன்றாவது அகில இந்திய மாநாட்டிற்கு முன்பு நடைபெற்ற மாநில மாநாடுகள், மாவட்ட மாநாடு கள், உள்ளூர் மாநாடுகள் முதலிய அனைத்திலும் இது ஒரு சர்ச்சைக் குரிய விஷயமாகியது. அயல் துறைக் கொள்கையின் தன்மையில் மாறுதல்கள் ஏற்பட்டிருந்ததாக இரு தரப்பினருமே ஒப்புக் கொண்டனர். எனவே, அரசின் அயல்துறைக் கொள்கையில் முற்போக்கான அம்சங் களுக்கு எல்லாம் ஆதரவளிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்படவில்லை. அயல்துறைக் கொள்கையின் முற்போக்குத் தன்மை அரசின் உள்நாட்டுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும் என்ற வாதத்தில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 ஒரு விவாதம்...  

இதுதொடர்பாக நடந்த ஒரு விவாதம் என் நினைவுக்கு வருகிறது. ஆந்திர மாநிலக்குழு கூட்டத்தில் அந்த விவாதம் வந்தது. அரசின் அயல்துறைக் கொள்கையை முற்போக்கானதாகவும் அதன் உள் நாட்டுக் கொள்கையைப் பிற்போக்கானதாகவும் பார்ப்பது பாதி உடல் ஆணாகவும் பாதி உடல் பெண்ணாகவும் உள்ள புராண காலத்து அர்த்த நாரீஸ்வரர் போல இருக்கிறது என உவமை கூறினார் ஒரு தோழர் . ஒரு பக்கத்தில் முற்போக்காகவும் மறுபக்கத்தில் பிற்போக்காகவும் அரசு இருக்கிறது என்ற மதிப்பீடு முரணானது என சித்தரிப்பதற்காக அவர் அந்த உவமையைப் பயன்படுத்தினார்.   விவாதத்தின் முடிவில் பேசிய நான் “இந்திய அரசு அர்த்த நாரீஸ்வரர் போல இருக்கிறது என்பது உண்மையே.

அதன் அயல்துறைக் கொள்கை முற்போக்கானதாகவும் உள்நாட்டுக் கொள்கை பிற்போக்கா னதாகவும் இருக்கிறது என்பது உண்மை. இதை மறுப்பதற்கில்லை” என்று கூறினேன்.  இந்த முரண்பட்ட தன்மைக்கு வர்க்க அடிப்படை  ஒன்று இருக்கிறது என்றும் நான் சுட்டிக் காட்டி னேன். இந்த வர்க்கத்திற்கு அயல்துறை விவகாரங்களில் ஏகாதிபத்தியத்தோடு முரண்பாடுகள் இருந்தன. உள்நாட்டில், இந்திய மக்களுடன் அதற்கு முரண்பாடுகள் உள்ளன. ஒரே வர்க்கத்தின் இரட்டைத் தன்மைதான் இங்கே வெளிப்படுகிறது.

உள்நாட்டில் முரண்பாடு  

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1955-56ஆம் ஆண்டு வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சி. நேரு  அரசின் சில உள்நாட்டுக் கொள்கை களில் சில முற்போக்கான அம்சங்கள் இருக்கிறது என்ற கணிப்புக்கு வந்தது. அந்த கணிப்பின் விவ ரங்கள் பின்னர் தரப்படும். இங்கு  குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்  -ஆளும் வர்க்கமாகிய முதலா ளித்துவ வர்க்கத்துக்கு நிலப்பிரபுக் களுடனும் அதன் கூட்டாளிகளான இதர பிரிவினரோடும் ஏற்பட்ட முரண்பாடுதான் வெளிப்பட்டது.  மேலும், விரைவான தொழில்  மயமாக்கும் பாதையை மேற்கொண்ட காங்கிரஸ் அரசும் அதன் தலைமையும், தமக்கு எதிராகத் திரண்ட வலதுசாரி முத லாளித்துவப் பிரிவினரோடு போராட வேண்டியிருந்தது. இதில் அரசுடன் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்க முடியும். ஆனால், அரசுக்கு ஒரு புரட்சிகரமான எதிர்ப்பு என்பதே கட்சியின் நிலையாக இருந்தது.  

அதாவது புரட்சிகர தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக் கூடிய முதலாளித்துவப் பிரிவினருக்கும் இடையே கூட்டு என்ற லெனினிய நடை முறையை கம்யூனிஸ்ட் கட்சி மூன்றா வது அகில இந்திய மாநாட்டிலும் அதற்குப் பிறகும் கடைப்பிடித்தது.  மூன்றாவது மாநாட்டில் இந்த முரண்பாடு வெளிப்பட்டது. அரசுக்கு எதிரான ஒரு எதிர்க்கட்சியாக கட்சி செயல்பட வேண்டும் என்ற நிலையை பெரும்பாலான பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால் அரசின் அயல்துறைக் கொள்கையில் மாற்றங்கள் இருந்ததால் காங்கிரஸ் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுவான அணுகு முறையிலும் பார்வையிலும் மாறுதல் தேவை என ஒரு சிறுபிரிவு தோழர்கள் வாதிட்டனர்.  

பிரிட்டிஷ் பிரதிநிதி

 மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரி பாலிட், ஒரு ச கோதரப் பிரதிநிதியாகப் பேசினார். நமது கட்சியின் கொள்கை யில் மாற்றம் தேவை என அவர் கருத்து தெரிவித்தது இயல்பானது தான். நேரு தலைமையிலான இந்திய அரசு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாக அவர் புரிந்து கொண்டிருந்தார். எனவே இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் நேரு அரசை ஆதரிக்க வேண்டும் என்றார் ஹாரி பாலிட், அயல்துறைக் கொள்கை யில் ஒரு முற்போக்கான நிலை எடுத்த காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதத் தன்மையை ஒரு உள்நாட்டு முற்போக்கு சக்தியாகக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அவரது கருத்துக்கு மாறாகவே மாநாட்டில் பெரும்பாலான பிரதிநிதி கள் மத்தியக் குழு அணுகுமுறையை ஏற்றுக் கொண்டார்கள்.  மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்ட ஹாரி பாலிட் போலவே சர்வதேச இயக்கத்தைச் சார்ந்த பல தோழர்கள் காங்கிரஸ் அரசின்பால் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள  வேண்டும் என்றே கருத்துக் கொண்டி ருந்தனர். அவர்களில் ஒருவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தி ஒரு  சோவியத் பத்திரிகையில் கட்டுரை யொன்றையும் எழுதினார்.  ஆனால் அந்தக் கருத்து தவறா னது என்று அறிவித்து அஜாய்கோஷ் எழுதிய கட்டுரை ஒன்றும் பின்னர் அதே பத்திரிகையில் வெளியிடப் பட்டது.  

சொந்தக் கொள்கை  

இவ்வாறாக, இந்திய அரசியல்  பற்றி வெளிநாட்டுத் தோழர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி னாலும்கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கே கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை, தானே உருவாக்கிக் கொண்டது என்ற நிலை ஏற்பட்டது.  “மாஸ்கோவில் மழை பெய்தால் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இங்கே தமது குடைகளை விரிப்பார்கள்” என்ற பொய்யான பிரச்சாரத்துக்கு பகிரங்கமான முதல் பதிலடியாக மூன்றாவது மாநாட்டு விவாதமும் அதில் எடுக்கப்பட்ட முடிவும் அமைந்தன.